ஜாதி – இந்துமதத்திற்கான சவுக்கடியா அல்லது வக்கிரபடுத்தப்பட்ட முறையான வேத கோட்பாடா? – 1

இக்கட்டுரையின் ஆங்கில மூலம் இங்கே காணவும். தள உரிமையாளர் குழுவிடம் அனுமதி பெற்றபின் ஞானபூமி நன்றியுடன் இதனைத் தமிழில் வெளியிடுகிறது.

ஜாதியப் பிரிவு என்பதின் உண்மையான காரணத்தை திரித்ததினால் இந்தியாவில் ஏற்பட்ட கலவரங்களுக்கு அளவேயில்லை – ஸ்டீஃபன் நேப்

அறிமுகம்

இந்தியாவின் ஜாதீயம் என்பது பல குற்றச்சாட்டுக்களைச் சந்தித்துள்ளது. தற்போது வழக்கிலிருக்கும் ஜாதீயம் என்பது இருக்கவே கூடாது என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. நாம் தற்போது பார்க்கும் ஜாதீயம் என்பது “வர்ணாஸ்ரமம்” என்ற வேத முறையை அப்பட்டமாகத் திரித்து, வக்கிரப்படுத்தி, மாசுபடுத்தப் பட்ட ஒன்றாகும். நம் தமிழ்நாட்டில் வர்ணாஸ்ரமம் என்றாலே ஏதோ தீட்டைக் குறிக்கும் சொல் மாதிரி தோன்றச் செய்திருப்பதும் இதன் விளைவு தான். ஆனால் நமக்கு உண்மை மற்றும் திரிபு இவற்றின் வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வதுடன் திரிபு வாதத்தை நீக்கி விட்டு உண்மையான, சுதந்திரமான போக்குடன் இருக்கும் வர்ணாஸ்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இன்றைய ஜாதீயம்

நாம் பார்க்கும் இன்றைய ஜாதீயம் என்பது பொருள்சார் முறையில் பதவி போல வகுக்கப்பட்டு சமூகத்தில் கீழான பிரிவில் வாழ்பவர்களை ஒடுக்கும் முறை ஆகும். இதன் முறைப்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி குடும்பத்தில் பிறந்து விட்டால், மாற்றம் எதுவுமின்றி அப்படியே இருந்தாக வேண்டும். பிறப்பே இதனை முடிவு செய்கிறது. மேலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும், உங்கள் குணாதிசயங்கள் போன்றவை உங்கள் பெற்றோரைப் போலவே இருந்தாக வேண்டும் என்ற பல நூறாண்டுகளாக வழக்கத்திலிருக்கும் ஒரு லேபிளை ஒட்டி விடுகிறது.

வேதம் என்பது நாலே நாலு தான். அவை ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள். மற்றவை புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அப்படி வேத முறைப்படி, நாலு பிரிவுகள் உண்டு ஜாதியில். அவை:

பிராமணர்கள் – வைதீக காரியங்கள், பூஜை, அர்ச்சகர்கள், வேத முறையை பாதுகாத்து, அவற்றைப் பின்பற்றி அதன் மூலம் ஆன்மிக விழிப்புணர்வை அடைய விழைபவர்கள் மற்றும் அறிவாளர்கள் என்பவர்களைக் குறிக்கும். உற்று நோக்கவும், பிராமணர்களாக ‘பிறப்பவர்கள்’ அல்ல.

க்ஷத்ரியர்கள் – போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள், அரசாள்பவர்கள் போன்றவர்கள்.

வைஸ்யர்கள் – வியாபாரிகள், தொழில் செய்பவர்கள், வங்கிப் பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்கள்.

சூத்திரர்கள் – தொழிலாளிகள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள் இப்படிப் பட்டவர்கள்.

தற்போதைய ஜாதீயம் சொல்வது – நீ பிராமணக் குடும்பத்தில் பிறந்து விட்டால் நீ பிராமணன் மட்டுமே, பிராமணனுக்கான எந்த குணாதிசயமும் உன்னிடம் இல்லாவிட்டாலும் சரி. நீ பிராமணன் தான் என்பது. அதே போல க்ஷத்ரியர், வைஸ்யர்கள் எல்லோரும் அப்படியே. டாக்டர் பிள்ளையாக நீ பிறந்து விட்டால் நீ டாக்டர் தான், யாரும் கேட்க முடியாது என்பது போல. ஆனால் டாக்டராவது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும், திராவிடக் கட்சிகளின் தலைமைக் குடும்பத்தில் பிறந்து விட்டாலே பதவிகள் வரும் என்பது வேண்டுமானால் சாத்தியம், ஆனால் உண்மையான டாக்டராவது அவ்வளவு சுலபமல்ல. வெறும் பிறப்பால் அமையப்படும் இந்த ஜாதீயம் எத்துணை உபயோகமற்றது என்பது இதிலிருந்தே தெரிகிறது.

ஆனால் முன் காலத்தில் பிராமணர்கள் மற்றும் சில உயர் ஜாதி பிரிவினர் தாம் கற்றவற்றை பிறருக்குத் தெரிவிக்காமல், தாங்களே வைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களின் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்வது நடந்திருக்கிறது. பல சீர்திருத்தவாதிகள், இவர்களில் பிராமணர்கள் உட்பட, கிருஷ்ண சைதன்யர் போல இவற்றை எதிர்த்தோ, பொருட்படுத்தாமலோ இருந்து வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் வர்ணாஸ்ரமம் என்பது பிறப்பால் ஏற்படுவது என்பது நிலைநாட்டப்பட்ட பொய்யாகி விட்டது.

உண்மையான வர்ணாஸ்ரமம் என்ன?

வேதங்களில் கூறியிருக்கும் வர்ணாஸ்ரமம் நான்கும் முறையான, நல்லொழுக்கத்தை புகட்டி, சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஏற்பட்டது. அதன் படி, வர்ணங்கள் நான்கும் சமூகத்தினரை அவர்தம் மனநிலை மற்றும் குணாதிசயங்களின் பால் வகுப்பது. நன்கு கவனியுங்கள், மனநிலை மற்றும் குணாதிசயங்களின் பேரில் ஒருவரின் வர்ணம் ஏற்படுகிறது (துரோணர் என்ற பிராமணர் ஏன் போர்க்கலை வல்லுநராய் தலைமை சேனாதிபதியாக இருந்தார் என்ற கேள்வி புலப்பட்டால் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்). ஒவ்வொருவருக்கும் இயற்கையாக சில குணாதிசயங்களும், ஒரு சார்பும், சில பல இயல்புகளும் இருப்பதைக் காண்கிறோம். இவை ஒருவர் தாம் பார்க்கப்போகும் வேலை என்னவென்பதை தான் தேர்ந்தெடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவையே வர்ணம் என்று அழைக்கப்படுகிறது. வர்ணம் என்றால் ஆங்கிலத்தில் கலர், இங்கே வர்ணம் என்பது அவரவர் குணாதிசயங்கள், விருப்பு, குறிப்பிட்ட சில வேலைகளுக்குத் தம் மனப்போக்கு இவைகளைக் குறிக்கிறது. எனவே வர்ணம் என்பது பிறப்பாலன்றி ஒரு மாணாக்கன் தன் வகுப்பில் காட்டும் இந்த இயல்புகளை ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டு, கணிக்கப் பட்டு ஏற்படுவது.

நம்மில் சிலர் உடலால் பிறருக்கு உதவுவதைக் கண்டிருக்கிறோம், அல்லது இசை, நாட்டியம் மூலமாகத் தன் இயல்பை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். சிலர் தொழில் புரிபவர்களாகவும், விவசாயம் செய்பவர்களாயும் இன்னும் சிலர் அரசுப் பணிகளிலும், ராணுவத்திலும் இருக்கிறார்கள். இவையெல்லாம் பிறப்பால் வருபவை அல்லவே. இந்த முறையே வர்ணாஸ்ரம முறையே அன்றி பிறப்பால் வருவதன்று. அதே சமயம், ஒருவர் பிறந்த குடும்பத்தில் குறிப்பிட்ட தொழில் அல்லது வேலையை அவர் தானாக எடுத்து இன்னமும் நன்றாகச் செய்வதும் உண்டு, அவ்வாறு அவர் மனநிலை ஒத்து இருப்பின் அவர் தம் குலத் தொழிலை தாராளமாகச் செய்யலாம்.

ஆசிரமங்கள் சமூகத்தை நான்காகப் பிரிக்கிறது. பிரம்மச்சாரிகள் (மாணவர்கள்), க்ருஹஸ்தர்கள் (குடும்பஸ்தர்கள்), வானப்ரஸ்தர்கள் (ஓய்வு பெற்றவர்கள், தன் வாழ்வில் பொருளீட்டும் குறிக்கோள் குறைந்து வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதில் நோக்கமுடையவர்கள்) மற்றும் சன்யாசிகள் (பொருளுலகை முற்றிலுமாகத் துறந்து ஆன்மிக செயல்களில் ஈடுபடுபவர்கள்). இன்னான்கும் மக்களை தங்களின் இயல்பின் பால் வேண்டுவதைத் தேர்ந்தெடுத்து அதே சமயம் ஆன்மிக வளர்ச்சியில் கவனம் கொள்ளவும் ஆவன செய்வது.

இதே வழியில் வர்ணாஸ்ரமம் ஒவ்வொருவரின் இயல்பின் பால் தம் வேலைகளை வகுத்துக் கொண்டு அதே சமயம் ஆன்மிக உயர்வுக்காக உழைக்கவும் விதித்து இருக்கிறது. ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் பள்ளியில் பயிலும் போதே மாணவர்களின் இயல்பினைக் கண்டறிந்து அவர்களின் போக்கின் பால் அவர்களுக்குக் கல்வியளிப்பது முறையிலிக்கிறது. எனவே டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற அவா சுத்தமாக இல்லாத டாக்டருடைய மகள் வேறு கல்வியினைத் தன்னியல்பின் பால் தேர்ந்தெடுப்பது பள்ளியில் இருந்தே தொடங்குகிறது. இது தான் வர்ணாஸ்ரமம்.

இதன் நோக்கம் ஒருவரின் நெற்றியில் லேபிள் ஒட்டுவதல்ல, தன் முனைப்புள்ள சுய-தேடலை ஊக்குவிப்பது. ஒருவர் எந்த மாதிரி வேலையில் ஈடுபட்டால் இயற்கையாகவே நன்கு பரிமளிப்பார் என்பதை அவர் இயல்பின் பால் தேர்ந்தடுக்க விடுவது.

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வது (4.13)

“நான்கு வர்ணங்களை ஒருவர் தம் மனப் போக்கு, குணாதிசயங்கள், இயல்பு சார்ந்து அவர் செய்யும் வேலையின் பால் பிராமண, க்ஷத்ரிய, வைஷ்ய, சூத்திரர் என்று என்னால் உருவாக்கப் பட்டது” என்கிறார் (BG 18.41)

மேற்சொன்ன கூற்றில் வர்ணம் பிறப்பு சார்ந்தது என்பது எங்கே இருக்கிறது? மேலும்..

“இவ்வகையினால் தேர்ந்தெடுக்கப்படும் வேலைகளின் மூலம் அனைவரும் மேன்மையடையலாம். அனைத்திற்கும் காரணமான, அனைத்திலும் வியாபித்து இருக்கும் பரம்பொருளை வணங்குவதாலும், தான் மேற்கொண்டுள்ள வேலையின் அல்லது கடமையில் இருந்து கொண்டே மேன்மையடையலாம். (BG 18.45-6)

~ தொடரும்

Featured image courtesy: ISKCON

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *