சமீபத்தில் ஒரு பெரியவருடன் உரையாட நேர்ந்தது! அதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது. உண்மை என்று என் மனம் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. தேவை படுபவர்கள், இது உண்மை என்று உணர்ந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். நிர்பந்தம் இல்லை.
“ஆன்மீகமும், அதில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கலாம். இல்லையா?” அவர்.
“ஆம்” – இது நான்!
“அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என பெரியவர்களும், சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் பயிற்ச்சியில் முழு கவனம் வேண்டும் என்று இந்தக்கால ஆசிரியர்களும் சொல்லுவதை கேட்டிருக்கலாம்”
“ஆமாம்”
“பெரியவர்கள், தாங்கள் வார்த்தை மதிக்கப்படும் என்று, விரிவாக சொல்லவில்லை. ஆசிரியர்கள் தாங்கள் நிலையை பாதுகாத்து உயர்த்திக்கொள்ள உண்மையை உரைப்பதில்லை.”
“பெரியவர்கள் நிலை ஏன் அப்படி? ஆசிரியர் நிலை ஏன் அப்படி?”
“வார்த்தையை வீணடிக்க விரும்பாததாக இருக்கலாம். அந்த காலத்தில், பெரியவர்களின் தவ மகிமையை உணர்ந்தவர்கள், ஏன் என்று கேட்காமல் அவர்கள் சொன்னதை அதே போல நம்பிக்கையுடன் தொடர்ந்து கரை ஏறினர். இது கலிகாலம்! எதையும் ஆராய்ந்து பார்த்து, சொல்வது உண்மை என்று நம்பினால் மட்டும் தொடர்ந்து பார்ப்போமே என்று மனித மனம் விரும்பும் காலம். பெரியவர்கள் கேட்பவர்கள் மனதுக்கு ஏற்ப உண்மையை உரைக்க விரும்பாதவர்கள். உண்மையை அதாகவே உரைப்பவர்கள். எதிர்பார்ப்பில்லதவர்கள். எல்லாம் இறைவன் செயல் என்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டும் செய்பவர்கள். இந்தக்கால ஆசிரியர்களுக்கு தன்னிடம் வருபவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்கிற எண்ணம் மட்டும் தான். கேட்டு செல்பவர் கூட தனக்கு எளிதாக எப்படி உண்மை புரிகிறது என்று தான் பார்க்கிறார்களே தவிர, உண்மையை அதன் மூலத்தில் சென்று அதாகவே உணர விருப்பமில்லாதவர்கள். இது தான் பிரச்சினை. கேட்பவன், கிடைப்பதை ஏற்றுக்கொண்டால், ஆசிரியன் ஏன் அவனை திருப்திப்படுத்த நிற்க வேண்டும்? சுருக்கமாக சொல்லப்போனால் ஆசிரியன், கேட்பவன் இருவர் மனநிலையும் உண்மையை விட்டு வெகு தூரத்தில் விலகி இருக்கிறது.”
“சரி விஷயத்துக்கு வருவோம். அசைவ உணவு ஒரு போதும் ஆன்மீகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை,. அது தான் உண்மை. உன்னை ஒருவன் இப்பொழுது தாக்க வந்தால், என்ன செய்வாய்?”
“தற்காப்புக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்!”
“சரி! தற்காப்புக்கு வழிகளை தேடும் போது, உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது?”
“உடலில் பல சுரப்பிகள் சுரந்து, உடலை தாக்குதலை தாங்கும் விதமாக தயார்படுத்துகிறது!”
“அந்த சுரந்த அமிலங்கள் உன் உடலுக்கு சேரும்விதமாகவும், எதிராளியின் தாக்குதலுக்கு தடுப்பாகவும் இருக்கும். இல்லையா?”
“உண்மை”
“இன்னொரு ஜீவனை இப்படி துன்புறுத்த நினைக்கும் போது, அங்கேயும் இந்த மாதிரி தானே நடக்கும்?”
“ஆமாம்”
“கொல்லப்பட்ட அந்த உடலில் அந்த அமிலங்கள் தங்கி இருக்கும் தானே.”
“ஆமாம்”
“அதை சாப்பிடுபவனுக்கு அந்த அமிலங்கள் உதவி செய்யுமா அல்லது பகையாகுமா?”
“பகையாகி வியாதியாக மாறும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்!”
“எந்த ஜீவனும், உயிருக்கு பங்கம் வந்தால் விட்டு கொடுக்காமல் போராடும். வெற்றி தோல்வி என்பது அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது. ஜீவன் உடலை விட்டு ஒரு போராட்டம் நடத்திவிட்டு தான் செல்கிறது. அந்த உடலை புசிப்பவன் மன நிலை மாறும். விட்டு கொடுக்கும் மனநிலை இல்லாமலாகிவிடும். ஆன்மீகத்தில் முதல் பாடம் விட்டுக்கொடுப்பது. அசைவம் புசிப்பவன் மனம் ஒரு போதும் விட்டு கொடுக்க முன் வருவதில்லை. விட்டு கொடுக்கிறேன் என்று நினைப்பவர்கள் வார்த்தை அளவில் தான் சொல்கிறார்களே தவிர, மனதுக்குள் எப்போதும் போராட்டம் தான். விட்டு கொடுத்தால் தான் படி ஏற முடியும். அசைவம் அந்த தகுதியை இழக்க வைக்கிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.”
“உண்மை. உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன்! ஒரு சந்தேகம்! விளக்கம் தேவை!”
“என்ன?”
“பசுவின் ரத்தத்திலிருந்து உருவாகும் பால் அசைவம் தானே”
“நல்ல கேள்வி. சரியாக புரிந்து கொள்ளுங்கள்! ஒரு பொருளை நீங்களாக கொடுப்பதற்கும், நானாக உங்கள் எதிர்ப்பை மீறி எடுத்துக்கொள்வதற்கும் வித்யாசம் உண்டு தானே! அதில் இருக்கும் தாத்பர்யம் தான் ஒரு பொருளின் தன்மையை உருவாக்குகிறது. எப்படி ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலை கனிவோடு தருகிறாளோ அது போல தான் பசு கனிவினால் தருகிற பால் சைவம் தான்.”
“மரம், செடி, கொடிகளுக்கு கூட உயிர் உண்டு இல்லையா? அப்படியானால் நாம் உண்ணும் தான்யங்கள் ஒரு உயிரை அழித்து எடுப்பதாகத்தானே ஆகும்?”
“மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு. ஆனால் அந்தக்கரணம் என்கிற நிலை கிடையாது. அந்தக்கரணம் இருந்தால் தான் சலனம் உண்டு, உணர்வு உண்டு, இடம் பெயர முடியும். அந்தக்கரணம் இல்லாத நிலையில், அவை பிற உயிர்களின் வளர்ச்சிக்கு மட்டும் தான். அவைகளை கூட மதிப்பதற்க்காகத்தான், பெரியவர்கள், அவை கனிந்து உதிர்க்கும் பழம்/விளைவுகளை பூமியிலிருந்து எடுத்து உண்டு வாழ்ந்தனர்.”
புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கிடைத்த தகவலை தெரிவிப்பது மட்டும் தான் இந்த முயற்சி.
true, this is scientifically proven