“சந்த்யா” என்பது இரண்டு பொழுதுகள் சந்திக்கின்ற சந்திப்பொழுதை குறிக்கின்றது. சந்தி காலத்தில் இரண்டு பொழுதுகள் கலந்து மயங்கும்போது, இந்த பொழுது எந்த பொழுது என்று தெரியாதபடி இரண்டு பொழுதுகளாகவும் கொள்ள இடமளிப்பது போல சந்த்யா பாஷை என்பது இரண்டு பொருள் உடையதாய் எந்த பொருள் உண்மை பொருள் என்று தெரியாமல் மயங்கிஅமைவதால் இந்த பெயர் பெற்றது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசும்மொழி அது. இது இயல்பான மேல் பொருளும் ஒரு மறை முகமான மெய் உணர்வு பொருளும் கொண்டது. சந்த்யா மொழி என்பது வெளிப்படையாக சொல்லமுடியாத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய சில செய்திகளை சொல்வதற்காக திட்டமிட்டே உருவாக்கப்பட்ட மொழி. அது ஒருவகை மொழி நுட்பம். சித்தர்கள் தங்கள் பாடல்களில் இந்த முறையை தான் கையாண்டனர்.
காரணம் என்ன?
- தீட்சை பெறாதவர்கள் மேலோட்ட பொருளோடு நிறைவடைந்து நின்றுவிடுமாறு செய்தல்.
- எளிய மொழியில் எழுதுவதன் மூலம் பொது மக்கள் நாவில் அதை வழங்குமாறு செய்தல். அதனால் தலை முறை வழியாக சிதைவின்றி சேர்வதற்கு வழி கோலுதல்.
- பாடலின் செய்தி சாதி, மத, இன, பால் வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைய வகை செய்தல்.
- வைதீகர்கள் பாடல்களை சிதைத்து விடாதபடி, அதற்குள் உருப்படியான பொருள் ஏதுமில்லாதது போல் தோற்றம் காட்டி அவர்களை ஏமாற்றுதல்.
- மனதின் மிக உயர்ந்த அனுபவங்களை இயல்பான மொழியில் வெளிப்படுத்த முடியாது என்ற போதாமை உணர்வு.
- முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ள பொருள் இல்லா சொல் ஒன்றை உருவாக்கி கொள்வது. உதாரணமாக “இருகுரங்குகை” என்றால் “முசுமுசுக்கை” என்ற மூலிகை.
- போலியான வைதீக சமயத்தை அதனுடைய மொழித் தூய்மையை கேலி செய்யும் விதமாகப் பயன்படுத்தி அதனை தொந்தரவு செய்வது.
- யோகியை பயிற்றுவிக்கு முகமாக அவனை பல புதிர்களுக்கும் முரண்களுக்கும் உள்ளாக்கி அவனைத் தயார் படுத்துவது.
உதாரணம்:-
தண்டு இல்லா மரம் எது? சிறகில்லாத கிளி எது? கரை இல்லா அணை எது? சாவாமலே செத்தவன் யார்?
காற்றே கிளை இல்லாத மரம். மனமே சிறகில்லாத கிளி. பொறுமையே கரைல்லாத அணை. உறக்கமே சாவாமல் வருகிற சாவு.
பசு கன்றின் மடியில் பால் குடிக்கிறது.
யோகிகள் உண்ணும் பசு இறைச்சி – சகஸ்ராரத்தில் ஊரும் அமுதம்
வெள்ளி யுருகிப் பொன் வழி ஓடமேகள்ள தட்டனர் கரியிட்டு மூட்டினர்கொள்ளி பரியக் குழல் வழியே சென்றுவள்ளி உண்ணாவில் அடக்கி வைத்தாரே! (திருமந்திரம்).
அஸ்தி கரைத்தல் – சகஸ்ராரத்தில் சிவனுடன் ஒன்றி கலந்து தன்அடயாளங்களை இழத்தல்.
வழுதலை வித்திட பாகன் முளைத்தது,புழுதியை தோண்டினேன் பூசணிமுளைத்தது,தொழுது கொண்டாடினர் தோட்ட குடிகள்,முழுதும் பழுத்ததுவாழை கனியே
குண்டலினி யோகா பயிற்சியை மேற்கொண்டபோது வைராக்யம் கிடைத்தது, ஆன்ம தத்துவங்களை பரிசோதித்தபோது சிவத்துவத்தை கண்டேன், சிவத்துவத்தை நான் கண்டறிந்து கொண்ட பின்னர் புலனுணர்வுகள் என்னை விட்டு அகன்றன, சிவனுபாவம் விளைந்தது.