ரமண மஹரிஷியுடன் நான் – 3 – பால் ப்ரண்டன்

டாக்டர் பால் ப்ரண்டன் – சில நிகழ்வுகளின் சிறு தொகுப்பு

இதன் ஆங்கிலப் பதிப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

A Search in Secret India:

(i) ஆஸ்ரமத்துக்கு வரும் பலவகைப்பட்ட மனிதர்களுள் ஒரு விலக்கப்பட்ட மனிதர் பெருந்துயரத்துடன் திடீரென்று வந்து மஹரிஷியின் பாதங்களில் கதறியழுகிறார். அவருடைய மெளனமும் விலகி இருத்தலும் பழகிய ஒன்றாதலால் அவர் பதிலேதும் சொல்லாமல் ஆனால் அம்மனிதரைப் பேசாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய அழுகை சிறிது நேரம் கழித்து மெள்ளக் குறைந்து இரண்டு மணி நேரம் கழித்து அவர் ஆஸ்ரமத்திலிருந்து புறப்படுகையில் வெகு வலிமையுள்ளவனாயும் தெளிவானவனாகவும் வெளியேருகிறார்.

(ii) ஒரு கல்லூரியில் பயிலும் கற்றறிந்த பிராமணன் சில கேள்விகளுடன் வருகிறார். மஹரிஷி வாயைத் திறந்து பதில் ஏதும் சொல்வாரா என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் வாயே திறக்காமல் அனைத்திற்கும் பதில் சொல்வதில் வல்லவர் அவர். இன்றைய தினம் ஏனோ அவர் உரையாடும் மனநிலையில் இருக்கிறார். சொற்செறிவுடைய ஆழமான அர்த்தங்களுடன் அவர் சொல்லும் பதில்கள் கேட்பவருக்குள் பலப்பல படிமங்களைத் திறந்து விடுகிறது.

(iii) ஒரு படிப்பறிவில்லாத கிராமப்புறத்தார் ஒருவர் மஹரிஷிக்கு வணக்கத்தைத் தெரிவிக்க சில நூறு மைல்கள் பிரயாணப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு தன் தினப்படி வேலையைத் தவிர ஆன்மிகம், தன் மதத்திற்குரிய வழிமுறைகள், தம் முன்னோர்களின் மூட நம்பிக்கைகள், என்று எதுவும் தெரிந்திருக்கவில்லை. மஹரிஷியை மூன்று முறை நமஸ்கரித்த பின் அமைதியாகத் தரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய குடும்பம் அமைதியாக ஆனால் ஆழ்ந்த ஒரு மரியாதையுடன் மஹரிஷியை தரிசித்த வண்ணம் அமர்ந்திருக்கிறது. அவருடைய இருப்பே அக்குடும்பதினருக்குத் தேவையான ஆன்மிக உத்தரவாதத்தையும் ஆதாரத்தையும் தந்து கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

(iv) ஹாலில் பெருந்திரளான மக்களும் அடியார்களுமாய் அமர்ந்திருக்கையில் யாரோ ஒருவர் வந்து பிரபலமான குற்றப் பிண்ணனியுடைய இன்னாருடைய இறப்புச் செய்தியை அறிவிக்கிறார். உடனே அவர் பற்றிய அபிப்ராயங்கள் அலசப் படுகின்றன, அவரைப் போல மோசமானவர் ஒருவரைப் பார்க்க இயலாது, எப்படிப்பட்ட கொடுஞ்செயல்களை அவர் செய்திருக்கிறார் என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. அனைத்தும் முடிந்ததும் மஹரிஷி மெல்ல வாய் திறந்து, “ஆமாம், ஆனால் அவர் தன் வரையில் வெகு சுத்தமாயிருந்திருக்கிறார், தினத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அவர் குளிப்பதுண்டு!” என்றார்.

ப்ரண்டனின் இரண்டாம் புத்தகம் The Secret Path இலிருந்து:

மஹரிஷியிடம் என் போன்றவர்கள் கேள்வி மட்டுமே பட்டு வெகு சிலருக்கே காணக்கிடைக்கும் கீழை நாடுகளைப் பற்றிய ‘மர்மமான கிழக்கு’ என்ற சொற்றொடரின் மிச்சத்தைக் கண்டேன். என் தாழ்மையான மரியாதையை வெகு விரைவில் பெற்றுவிட்ட ஒரு அரிய மனிதரை சந்தித்திருக்கிறேன். கீழை நாடுகளின் ஞானிகளில் ஒருவராக போற்றத்தக்க மஹரிஷி தன் குறித்த சுய விளம்பரம் எதையுமே நாடியவரில்லை.

உலகமானது அதில் வாழ்ந்த பெரிய மனிதர்களின் வாழ்வை அவர்கள் விட்டுச் சென்றதை வைத்து நிறுவ முயற்சிக்கிறது, ஆனால் இவ்வகை மனிதர்கள் தங்களை முன்னிறுத்தாமல் தொன்று தொட்டு வரும் ஞானத்தில் திளைத்தவர்களாக, அதன் சாரத்தை பரப்புபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்விலும் விதியிலும் அந்த ஞானமானது ஒளிந்துமிருக்கிறது.

தன்னைச் சுற்றிலும் இருப்பவைகளில் இருந்து விலகியிருப்பவராய் இருந்தும், பிறருக்கு ஞானம் தரும் முறைகளாக வெளிப்பார்வைக்கு எதுவுமே தெரியாத நிலையில் இருப்பினும் மஹரிஷி என்னை வெகுவாகக் கவர்ந்தார். அவர் வாய் திறந்து பதில் கூறுவதென்பது எப்போதாவது தான், மனிதனின் ஆன்மா பற்றியோ, கடவுள் என்பவரின் மர்மம் குறித்தோ, மனித மனத்தினுள் உறையும் வியத்தகு ஆற்றல் குறித்தோ, இது மாதிரி தான். அப்படி அவர் பேசுகையில் மெய்மறந்து அமர்ந்து அவருடைய மெல்லிய குரலில் இருந்து வரும் ஞான அம்ருதத்தைப் பருகுகிறேன், அவருடைய ஒளிரும் கண்கள் ஊக்கமளிப்பதாயும் இருக்கின்றன. அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நிலைத்து இருக்கும் பேருண்மையின் ஒரு துளியாகவே தோன்றுகிறது.

மஹரிஷியின் இருப்பில் ஒரு பாதுகாப்பையும் அமைதியையும் ஒருங்கே உணர்வர். அவரிலிருந்து வரும் ஆன்மிக அலை அனைத்தையும் ஊடுறுவதாய் உள்ளது. தோற்றத்தில், சூழ்நிலையில் ஒரு புனிதத்தை உணரும் அதே சமயம் அவருடைய போதனையில் ஆழமான உண்மைகளையும் இனங்காணக் கற்றேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தோற்றத்தை உடையவராக விளங்குகிறார் மஹரிஷி. அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை சிறு குறிப்பெடுத்துக் கொண்டிருக்கலாம், அவர் பேசியதை அப்படியே குறிப்பெடுத்து அச்சிட்டு இருக்கலாம், ஆனால் அனைத்திலும் வெகு முக்கியமானதான அவரிலிருந்து வெளிவரும் உள்ளார்ந்த ஆன்மிக அருளைக் குறிப்பெடுக்கவோ விளக்கவோ முடியவே முடியாது.

அனுபவம், துன்பம் இவற்றை வென்ற ஞானமும் அமைதியும் அரும்பும் அவருடைய புன்னகையை யாருமே மறக்க இயலாது. மிக மிக புரிதல் கொண்ட இவ்ரைப் போல நான் யாரையுமே கண்டதில்லை, அவருடைய ஒரு பதில் உங்களுடைய மனதின் ஆழம் உங்களுக்கு ஒன்றைப் பற்றி என்ன நினைத்திருந்தீர்களோ அதை நிச்சயம் உறுதிப் படுத்தி, உங்களை நல்வழிப் படுத்தும்.

அவருடைய வார்த்தைகள் என் நினைவுக்குள் ஒரு கலங்கரை விளக்கினைப் போல் ஒளிர்ந்தது. “கிடைப்பதற்கரிய ஞானிகளிடன் சந்திப்பில் தங்கப் பழங்களைப் பறித்து வருவேன்” என்று அட்லாண்டிக் எம்ர்ஸன் தன் டைரியில் குறிப்பிடுகிறார். நான் மஹரிஷியிடமிருந்து கூடைகள் நிறைய தங்கப் பழங்களைக் கொணர்ந்தேன். ஐரோப்பாவின் மிகச் சிறந்த தத்துவவியலாளர்கள் மஹரிஷியின் ஞான ஒளிக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி அளவிற்குக் கூட சமமாக மாட்டார்கள்.

ப்ரண்டன் தனது நான்காவது புத்தகம் A Message from Arunachala வில்:

எனக்கு பெரும் பொக்கிஷமொன்று கிடைத்து விட்டது, வெறொன்றும் தேவையில்லை எனக்கு இனி, இந்தியாவின் கடைசி எஞ்சிய சில ஆன்மிக ஞானி ஒன்றைக் கண்டுபிடித்து விட்டேன், ஒளி பொருந்திய திருவண்ணாமலை முனிவர் இவர். எப்படி இந்தியாவில் கவித்துவமாக குரு-சிஷ்ய பாவத்தில் ‘அவர் பாதத்தில் அமர்ந்து’ என்று சொல்வார்களோ அப்படி அவர் பாதத்தில் அமர்ந்து அனுபவபூர்வமாக ‘ஆத்ம ஞானம் அடைந்த, இறப்பில்லாத ஒருவர்’ எப்படி இருப்பார் என்பதை உணர்ந்தேன். இதை விட பரிதாபத்திற்குரிய மாந்தராகிய நமக்கு வேறென்ன பொக்கிஷம் வேண்டும்?

கடலுக்குடையே இருக்கும் ஒரு பெரும்பாறை போல காலைக் குறுக்காக மடித்து இம்மஹரிஷி அசைவற்று இருக்கிறார். நாம் முட்டாள்தனமாக ‘இவர் தன் தினப்படி வாழ்வில் ஒன்றுமே செய்யவில்லை போலும்’ என்று நினைக்கிறோம், அதையெல்லாம் தாண்டிய உன்னத நிலையில் அவர் இருக்கிறார் என்பதே அறியாமல்.

“துன்பம் ஒருவனைத் தன் படைப்பாளியின் பால் திருப்புகிறது” என்றார் மஹரிஷி. வெகு எளிதான வார்த்தைகள், ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம் இதில் அடங்கியிருக்கிறது! இவை வழக்கொழிந்து போனவையாகத் தோன்றலாம், ஆனால் அவை வருவது யாரிடமிருந்து என்றால் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத ஆன்மிக எல்லைகளைத் தொட்ட, கடவுள் இருக்கும் இடத்தைப் பார்த்தவரிடமிருந்து அல்லவா வருகிறது!

The Note Books of Paul Brunton (vol. 10) இலிருந்து:

ரமண மஹரிஷி போல இப்பூமியில் அவ்வவ்போது தோன்றுபவர்கள் தனித்துவம் பெற்றவர்கள், அவர்கள் அவர்கள் தான், யாருடைய நகலும் அல்ல. மஹரிஷியின் நேர் முன்னால் இருக்கையில் அவர் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்தவர் போலவோ, நம் இனத்தைச் சேராது வேறேதோ ஒன்றைப் போலவோ தோன்றுகிறது.

எல்லையற்றதை நோக்கிக் கொண்டிருக்கும் மஹரிஷியின் விழிகளைக் காண்கையில் அரிஸ்டாட்டில் சொன்னது நினைவுக்கு வருகிறது, “நாம் அழிவற்றவர்கள் போல வாழ்வோம்” என்பது. இம்மனிதர் அரிஸ்டாட்டில் சொன்னதை ஒருவேளை கேள்விப் பட்டிருக்க மாட்டார். ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

The Silent Power புத்தகத்திலிருந்து:

(i) மேலான சக்திக்கு ஒரு உன்னத வழி: மஹரிஷியை சந்தித்து நாற்பது வருடங்கள் கழிந்து விட்டன, அவருடைய இடத்திற்குள் நுழைந்தது, சோபாவில் பாதி சாய்ந்தும் பாதி அமர்ந்துமாய் இருந்த நிலையில் அவரைக் கண்டது. இத்தனை காலத்திற்குப் பிறகு நிறைய விஷயங்கள் முற்றிலும் மறந்து விடுவது இயல்பு. ஆனால் நானறிந்த வரையில் உண்மையைச் சொல்கிறேன், எனக்கு இவை எதுவுமே மறக்கவில்லை. மாறாக, அந்த முகம், அதன் உணர்ச்சி, அவ்வுருவம், சூழ்நிலை, இவை அனைத்தும் ஏதோ இப்போது கண்டது போல மிகத் தெளிவாக இருக்கிறது. அதைவிடவும் எனக்கு முக்கியமானது என்னவெனில் – என் தினப்படி தியானங்களிலாவது – அவருடைய ஒளிமிக்க பிரத்யக்ஷம் நிஜமாகவும் உடனடியாகவும், அன்றைய தினத்தில் எவ்வாறு கிடைத்ததோ அதே போல இன்றளவிலும் தொடர்கிறது.

நான் கண்டறிந்த மேலை, கீழை நாடுகளின் கணக்கிலடங்கா யோகிகள், அசாதாரணமானவர்களில் என்னுள் இத்தனை தாக்கத்தை மஹரிஷி ஒரு சாதாரண யோகியாய் இருந்திருந்தால் ஏற்படுத்தியிருக்க முடியாது. மஹரிஷியை யார் எப்படிப்பட்ட நிலையில் வைத்திருந்தாலும் என்னுடைய நிலைப்பாடு சார்பற்றது, தன்னிச்சையானது. இந்நிலைப்பாடு மஹரிஷியைப் பிறர் அறிவதற்கு வெகு முன்னரே இருந்து வருவது, புகழ் கொண்டு வரும் கூட்டம் அவரை அணுகும் முன் நடந்தது, அவருடன் நடந்த பல பிரத்யேக உரையாடல்களில் கண்டது. அவரை அப்போது சுற்றியிருந்த அணுக்கத் தொண்டர்களிடம் நடத்திய உரையாடல்களில் நேர்ந்த நிலைப்பாடு அது. இப்படி பலதரப்பட்ட தகவல்களின் பேரில் கிடைத்த ஒரே ஒரு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட உண்மை இது – மஹரிஷி மேலான ஒரு சக்திக்கு ஒரு உன்னத வழி – என்பதே.

எந்தவொரு வெளித்தோற்றத்திற்கான சடங்கோ, வினோதமான பழக்கங்களோ இருந்ததே இல்லை, வெளித்தோற்றதுக்கு எதுவுமே நடக்கவில்லை. உலகாயதத்தில் ஊறாமலும், சந்தேகம், தர்க்கம் இவைகளினால் ஆட்படாமல் இருந்தவர்களுக்கு தம்மிடையே அவர் ஏற்படுத்திய குறிப்பிடத்தகுந்த உள் மாற்றத்தை நன்கு கண்டனர். அவர்களை அது மேன்மைப் படுத்தியது, தம்முடைய குறுகிய ‘தன்னுள்’ இருந்து ஒரளவேனும் வெளிக் கொணர்ந்தது.

(ii) ஆன்மிக டார்ச்: அவரை சமாதி நிலையில் கண்ட அன்றைய முதல் தினத்திலிருந்து எங்கு நான் சென்றாலும் என் நினைவுகள் திருவண்ணாமலையை நோக்கி ஒரு முஹம்மதியன் தொழுகையின் போது மெக்கா இருக்கும் திசை நோக்கித் திரும்புவதைப் போலத் திரும்பி விடும். இந்த குழப்படி மிகுந்த உலகத்தில் எனக்கென வெகு புனிதமான ஒரு இடம் உள்ளதென்பதை நான் அறிவேன்.

மஹரிஷியின் பாதத்தில் இருந்து மேலை நாட்டில் காத்து தாகத்துடன் இருக்கும் ஆன்மாக்களுக்கு ஒரு டார்ச்சை கொண்டு சென்றேன். அவ்வொளியை அவர்கள் வெகு ஆர்வத்துடன் வரவேற்றனர். இதில் என் செயல் என்று குறிப்பிட எதுவுமேயில்லை, அம்மக்கள் அடைந்த உள் ஒளியானது மஹரிஷி ஏற்றி வைத்ததேயன்றி நான் முக்கியத்துவம் ஏதும் இல்லாத வெறும் தொடர்பு ஏற்றியவன், ஒரு தாழ்மையான மெசென்ஜர், தொடர்பாளன், அவ்வளவே.

தொடரும்…!

பதிவில் இருக்கும் படத்தின் மூலம், நன்றியுடன் – blog.daum.net

One thought on “ரமண மஹரிஷியுடன் நான் – 3 – பால் ப்ரண்டன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s