சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 1

விவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதியாகி விட்டது; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளம் வந்த வண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கிறது. அதே சமயம் அவருடன் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது.

விவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதி கடந்து விட்டது; வருடங்கள் செல்லச் செல்ல அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளங்கள் வந்தவண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கின்றன. அதே சமயம் அவர் வாழ்ந்த சமயத்தில் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. எஞ்சியிருக்கும் அவரது சமகாலத்தவர்கள் அவரது நினைவுக்கும், அவர்களின் நாட்டு மக்களுக்கும், மிகப் பெரிய இந்தியர்களில் ஒருவரும், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் இருந்த ஒருவரின் நினைவுகளைப் பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கை பற்றிய விவரங்களை இங்கே திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை, அதை மிகச் சிறப்பாக அவருடைய அடியார்கள் நான்கு பாகங்களாகத் தொகுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பற்றி என்னைப் போல அவரை நேரடியாகத் தெரிந்தவர்களின் தனிபட்ட, நினைவூட்டக்கூடிய குறிப்புகளைச் சேர்க்க முயற்சிக்கலாம். அவருடைய பண்பியல்புகள், அவரைச் சுற்றியிருந்தவர்களுடன் அவர் எவ்வாறு வித்தியாசப்பட்டார் என்பது குறித்த சிறிய ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விவரங்களைச் சேர்க்க விழையலாம்.

நான் அவருடன் கல்லூரியில் பயின்றபடியால் எனக்கு அவரை அவர் யாருமறியாத சாதாரண இளைஞராய் இருந்த போதே தெரியும். பின் அவர் உலகப் புகழ் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது என்னுடன் பல நாட்கள் தங்கியிருந்து நாங்கள் சந்திக்காமல் இருந்த நீண்ட காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எவ்வித ஒளிவு மறைவுமின்றிக் கூறினார். அவர் சமாதியாவதற்கு முன் கல்கத்தாவின் பேலூர் மடத்தில் கடைசியாக ஒரு முறையும் சந்தித்தேன். அவர் குறித்து நான் பிறரிடமிருந்து அல்லாமல் அவரிடமிருந்தே கேட்டவற்றைச் சொல்கிறேன்.

விவேகானந்தர் முதன்முதலில் புகழ் பெறத் தொடங்கி இருந்த சமயத்தில் இந்தியாவில் நிலைமைகள் மிகவும் விசித்திரமாக இருந்தன. வெளிநாட்டவர் ஆளுகையும் அவர்களது கலாச்சாரமும் இந்தியர்களின் வாழ்வு மற்றும் எண்ணங்களில் தீங்கிழைக்கும் பெரியதொரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பழைய கொள்கைகள் மறந்தோ அல்லது மேற்கத்திய பகட்டு நாகரிக கவர்ச்சியினாலோ மறைக்கப்பட்டிருந்தது. முன்னேற்றத்திற்கான எந்த விஷயமும் ஒரு பொய்த் தோற்றம் கொண்டு எந்த செயலிலும் முந்தைய காலங்களில் இருந்த ச்ரத்தை, ஏகாக்ர சிந்தனை போன்றவை போய் வெறும் தற்புகழ்ச்சிப் பிசுக்குடன், ஏதோ அனைத்துமே வெளியில் இருந்து வந்தால் தான் சிறப்பு என்ற தோரணையுடனும் இருந்து வந்தது. தியாகம், சரணாகதி இவை அன்றி எதையும் அடைய முடியாது என்ற தெளிவினைப் பெற்றிருந்தான் அக்கால ஆரியன் (உயர்ந்த, உன்னதமான என்பது மட்டுமே இச்சொல்லின் பொருள் எனத் தெளிக!). இக்கால நவீன இந்தியன் வெற்றிக்கு சரணாகதி என்பது தேவையே இல்லை என்று நினைக்கிறான். மேற்கத்தியனைப் பார்த்துக் கொண்டிருந்து பெரும் பிரச்சினைகளை வெறும் நுனிப்புல் மேய்ந்து கொண்டு, எதையும் ஆழ நோக்காமல் செளகரியமாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டு பொதுச் சேவை செய்யலாம் என்று முயல்கிறான்.

வார்த்தை ஜாலம், வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றல் கொண்டு கேட்பவரின் உணர்ச்சிகளைத் தூண்டுவோரும் இருந்தனர், ஆனால் இவ்வகை தூண்டுதல் அதிக காலம் நிலைத்திருக்கவில்லை, காரணம் – நோக்கத்தில் உண்மை, வலிமை இல்லாமை. இளகிய வலிமையற்ற ஒன்றாய் அப்போதைய இந்தியாவை எண்ணிக் கொள்ளலாம். ஏதும் திட்டமிட்ட சுய-ஏமாற்று வேலை எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்கள் போலியை உண்மை என்று ஏற்கத் தொடங்கியிருந்தனர். பரவலாக ஒரு மந்த நிலை, போலியான சுய-நிறைவு இவை வலிமையில்லை என்பதை தெளிவாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. நெடுங்காலமாய் இந்தியாவில் நிலைத்திருப்பவை, வழக்கத்தில் இருப்பவை அனைத்தையும் இவ்வகை எண்ணங்கள் வெகுவாக பாதிக்கத் தொடங்கியிருந்தது.

இப்படியான சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலையில் அமைதியாக அபூர்வமாக நிகழ்ந்த ஒன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் உதயம். முற்கால இறைத்தூதர்கள் சிலர் போல் கல்வியறிவற்றவர் இவர், ஒரு கோவிலில் அர்ச்சகராய் இருந்து பின்னர் அவ்வேலையும் பொருந்தாதவரானார். அவருக்கு சித்தபிரமை என்றே பிறர் நினைத்தார்கள், ஆனால் அவரின் ஆன்மா உண்மை ஞானத்தையும் அதன் அனுபவத்தையும் தேடிக் கொண்டிருந்தது. அந்த அனுபவம் சித்தியான உடன் அவர் பிறரிடமிருந்து ஒதுங்காமல், இன்னும் சொல்லப் போனால் ஆர்வமிக்க இளைஞர்கள் சிலரை தன் போதனைகளால் வழிபடுத்தி, பின் அவருடய போதனைகளை அவ்விளைஞர்கள் பிறருக்கு போதிக்கவும் செய்தனர். அவருடைய போதனைகள், அவர் சொன்னவைகளில் பல இன்றளவில் பதிப்பில் உள்ளன. ஆனால் இவை அம்மனிதரின் தனித்தன்மையை ஓரளவே எடுத்துக் காட்டுகிறது. இவரை மிகப்பெரியதொரு காரணத்திற்காக உலகில் நெடுங்காலத்திற்கு ஒரு முறை தோன்றும் மஹா புருஷர்களில் ஒருவர் என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் பேசுவதைக் கேட்கும் பாக்கியம் அடைந்தவன் நான். அப்போதே நினைத்தேன், இப்போதும் சொல்கிறேன், இம்மாதிரி ஒருவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒருவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். பரமஹம்சரின் சொல்லாடல் வட்டார பெங்காலியில் இருக்கும். விலாவாரியான பேச்சாற்றல் இல்லையெனினும் மிக இனிமையானதொரு திக்கல் அதில் தொனிக்கும். ஆனால் தீரவே தீராத இனிமையுடனான புன்சிரிப்பு, உருவகங்கள், ஒப்பாரில்லாத கவனிக்கும் ஆற்றல், பிரமிக்க வைக்கும் அடிநாதமான நகைச்சுவையுணர்ச்சி, அருமையான ஞானத்துடன் கூடிய பரிவுடன் கூடிய அப்பேச்சு கேட்பவரை ஆன்மிக அனுபவ செல்வத்தில் ஆனந்திக்க வைக்கும்!

இத்தகைய காந்த சக்தியில் ஈர்க்கப்பட்ட பலரில் ஒருவரே பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திர நாத் தத்தா. பரமஹம்ஸரை சந்திக்க வந்த பல இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வேறுபடுத்திக் காட்டுவதற்கு அப்போது எதுவும் இல்லை நரேந்திரரிடம். சராசரி மாணவர், பயிற்றுவிக்கக்கூடிய, அல்லாத எந்த தொழில் / கல்விகளிலும் எந்த பரிசினையும் வெல்லப் பிறந்தவரல்லாத ஒருவர், ஆனால் பரமஹம்ஸர் நரேந்திரரை மற்றவரிடத்தில் இருந்து தனியாக அடையாளம் கண்டதோடல்லாமல் மிக பிரகாசமான எதிர்காலத்தையும் கணித்து விட்டார். உலகில் மிகப் பெரும் காரியத்தை சாதிக்க முழு முனைப்பு, தயார் நிலையில் வந்தவன் என்ற பொருளில் “அவன் ஒரு ஆயிரம் இதழ் கொண்ட தாமைரை!” என்றார். இது ஆன்மிக கண்ணோட்டத்தில் மட்டுமே என்பதைச் சொல்லத் தேவையில்லை, பரமஹம்ஸருக்கு உலகாயதத்தில் என்றுமே நாட்டம் இருந்ததில்லை. அவர் மற்றவர் முகத்தைப் பார்த்தே வெகு துல்லியமாய் எடை போடுவது மட்டுமல்ல, அவரிடம் சில சக்திகள் இருந்தன, அவர் விவேகானந்தரிடம் இச்சக்திகளை பிரயோகிக்கவும் செய்தார். இவ்விளைஞர் ராமகிருஷ்ணரை சந்திக்க தொடர்ச்சியாக வராமலிருந்தார். ஒரு சமயம் வாரகணக்கில் ஆளையே காணொம். பரமஹம்ஸர் மீண்டும் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்ததோடு, நரேந்திரரின் நண்பரிடம் அவரைக் கூட்டி வருமாறும் பணித்தார். மேலும் அவர் தனியே தன்னைக் காண வரவேண்டுமென்றும் கூறினார். பின் நரேந்திரர் வந்த சமயம் அங்கே அவரையும் பரமஹம்ஸரையும் தவிர யாருமில்லை. அவர் உள் நுழைந்த உடனேயே தன்னிடத்தில் இருந்து எழுந்த பரமஹம்ஸர், “நான் உன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் போது நீ ஏன் உன்னைத் தொலைவு படுத்திக் கொள்கிறாய்?” என்று கேட்டபடியே அவருடைய நெஞ்சில் லேசாகத் தட்டினார். அந்தக் கணம் – விவேகானந்தரே சொன்னது – மிகப் பிரகாசமான ஒளி வெள்ளமொன்றைக் கண்டு அவரைத் தூக்கி வீசியது போல உணர்ந்தார், பின் கிறீச்சிட்டு அலறி “என்ன செய்கிறீர்கள் நீங்கள், எனக்குப் பெற்றோர் உள்ளனர்” எனும்போது பரமஹம்ஸர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து, “இதோ இதோ, இது போதும்” என்றார்!

இச்சம்பவத்திற்குப் பின்னர் விவேகானந்தர் பரமஹம்ஸரின் சிஷ்யர்களில் ஒருவராகி விட்டார். பரமஹம்ஸரிடம் இருந்த சீடர்களோ சிறிய அளவிலானவர்கள். அவர்களை அவரே வெகு ஜாக்கிரதையாகத் தேர்வு செய்திருந்தார். ஒவ்வொரு சீடனுக்கும் தொடர்ச்சியான கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சிகளை அவர் பணித்திருந்தார். அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது. விவேகானந்தர் குறித்த தன் கணிப்பினை யாரிடமும் பிரகடனப்படுத்தவில்லை, அவரும் மற்ற சீடர்களும் ராமகிருஷ்ணரின் கண்காணிப்பில் எப்போதும் இருந்து வந்தனர். விரதங்களும் மற்ற கடுமையான அனுஷ்டானங்களும் அவர்களுக்கு இடப்பட்டிருந்தது, இவற்றை குருதேவர் மறைந்த பின்னும் அவர் சீடர்கள் பின்பற்றி வந்தனர். விவேகானந்தர் வாரணாசி சென்று, அங்கே மந்திர உச்சாடனங்களின் முறை, ஆழ்ந்த உச்சரிப்பு, இவற்றைக் கற்றார். இவற்றை ஒரு ஆழமான இசைபொருந்திய இனிய குரலில் அவ்வவ்போது ஓதுவதுண்டு. அவர் நண்பர்கள் வேண்டுகோளுக்காக பாடுவதைக் கேட்டிருக்கிறேன். பாடும் போது இனிமையும், சொற்பொழிவாற்றும் போது ஒரு சக்தி, ஆளுமையும் கொண்ட குரல் அது.

ஆன்மிக அனுபவத்தினாலோ அல்லது ஆன்மிக உணர்வின் புதியதொரு பரிணாமத்தின் காரணமாகவோ பரமஹம்ஸர் சமாதி நிலைக்கு அடிக்கடி சென்று விடுவதுண்டு. அப்படி ஒரு சமயம் – 1881 இல் – நான் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய, அவர்கள் கேஷப் சந்திர சேன் உடன் பரமஹம்ஸரை சந்திக்கச் சென்றனர். நாங்கள் சென்ற படகிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அப்படகு கேஷப் சந்திர சேனின் மருமகன் கூச் பேஹாரின் மஹாராஜா ந்ருபேந்திர நாராயண் பூப் அவர்களுடையது. பரமஹம்ஸர் காளி பக்தர் என்பது பலருக்கும் தெரியும். அதே சமயம் உருவமில்லாத நிராகார பரபிரம்மத்தை உணர்வதும் அவருக்கு நன்கு இயலும். கேஷப்புடன் இது குறித்து முன்பும் பேசியிருக்கிறார். அச்சமயம் கேஷப்புக்கு அருகில் அவரை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். பேச்சு பெரும்பாலும் ஒருவர் பேசுவதாகவே இருந்தது. கேஷப் அல்லது யாரேனும் ஒரு கேள்வியைக் கேட்க பதிலுக்கு பரமஹம்ஸர் தனக்கே உரிய பிரமிப்பூட்டும் பேச்சாற்றல், உருவகம் இவற்றைக் கொண்டு கேட்போரை ஆகர்ஷித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த நாங்கள் அனைவரும் மூச்சு விடாமல் பிரமித்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு மெல்ல உருவமில்லா நிராகார ப்ரம்ஹன் பற்றித் திரும்பியது, பரமஹம்ஸர் தனக்குத் தானே ‘நிராகார’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லிய வண்ணம் மெல்ல சமாதி நிலைக்குச் சென்று விட்டார். உடல் கல் போல் ஆனது தவிர அதிலோ நரம்புகளிலோ எவ்வித நடுக்கமோ, திடீர் அசைவுகளோ தென்படவில்லை. மடி மீதிருந்த கை விரல்கள் லேசாக சுருண்டிருந்தன. ஆனால் முகத்தில் அப்படியொரு அழகிய மாற்றம் வந்து விட்டிருந்தது. லேசாக புன்னகைப்பது போல விரிந்த உதடுகளின் நடுவில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் தெரிய, கண்கள் பாதி மூடிய நிலையில் கண்மணிகள் கொஞ்சம் தெரிய, முகபாவம் விவரிக்க கடினமான ஆனால் மிக மிக பவித்திரமான அழகைக் காட்டிக் கொண்டிருந்தது. நாங்களனைவரும் மரியாதையுடன் கூடிய மெளனம் கொண்டு மிக பிரமிப்புடன் அவரை நோக்கிய வண்ணமிருந்தோம். சில நிமிடங்கள் இப்படியே கடந்த பின் கேஷப்பின் குழாமில் பாடுவதற்கு பெயர்போன த்ரைலோக்ய நாத் சன்யால் இசைக்கருவி இசைக்க ஒரு துதிப்பாடலைப் பாடத்துவங்க, பரமஹம்ஸர் மெல்லக் கண் திறந்து நடந்தது எதுவும் அறியாதவர் போல சுற்றிலும் துழாவி விட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். சமாதி நிலை பற்றி அவரோ மற்றவரோ எதுவும் ப்ரஸ்தாபிக்கவில்லை.

மற்றொரு முறை கல்கத்தாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்குச் செல்ல அவர விரும்பினார். ஒரு குழந்தையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தார், எந்தவொரு தாமதத்தையும் சகிக்கவே இயலவில்லை அவரால். முக்தன், சமூகத்தளையினால் கட்டுப்படாதவன், ஞானி, இவர்களை அவர்களுடைய குழந்தையின் குதூகலத்தினைக் கொண்டு அடையாளம் காணலாம் என்ற ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றை நினைவு படுத்தும்படி இருக்கும் சில சமயங்களில் அவருடைய செய்கைகள். ஒரு வண்டியில் சில அடியார்களுடன் பரமஹம்ஸரும் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து அலிப்பூருக்கு வெகு நேரம் பிரயாணம் செய்து வந்தனர். பூங்காவுக்குள் அவர் நுழைந்த பின் அவருடனிருந்தவர்கள் அவருக்கு அங்கிருக்கும் பல்வேறு உயிரினங்களைக் காண்பிக்கத் தொடங்கினர். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. “என்னை சிங்கத்தைப் பார்க்க அழைத்துப் போங்கள்” என்று கட்டாயப்படுத்தினார். சிங்கத்தின் கூண்டுக்கருகில் நின்று கொண்டு சிந்தனையிலாழ்ந்த வண்ணம், “அம்மாவின் வாகனம் இது” என்று சொன்ன மறுகணம் சமாதி நிலைக்குச் சென்று விட்டார். அருகில் இருந்தவர்கள் தாங்கிக் கொள்ளாதிருந்தால் கீழே விழுந்து விட்டிருப்பார். நினைவு திரும்பியதும் பூங்காவின் மற்ற தொகுப்புகளைப் பார்க்க அழைத்த போது, “மிருக-ராஜனையே பார்த்து விட்டேன், இனி என்ன இருக்கிறது பார்க்க?” என்று சொல்லிவிட்டு வண்டியை வரச்சொல்லி வீடு திரும்பி விட்டார்.

மேற்சொன்ன இரு சமாதி நிலைக்குமான காரணங்கள் முரண்பட்டவையாகத் தோன்றும், முதலில் நிராகார பிரம்மன், மிகவுயர்ந்த ஒரு ஆன்மிக தத்துவம், இரண்டாவதில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கத்தை வெறுமனே கண்டது. ஆனால் இரண்டு அனுபவங்களிலும் மனதின் குவிப்பு, ஆன்மா இரண்டும் சமமானதே. ஒன்றில் உருவமற்ற பரபிரம்மத்தின் ப்ரத்யக்ஷம், இரண்டாவதில் காளிதேவியுடன் நன்கு தொடர்புடைய ஒரு உருவகத்துடனான தொடர்பு. இரண்டிலும் மற்ற எதுவும் இல்லாத, புறவுலகின் நினைவு அறவே அற்ற ஒரே ஆன்மிக உணர்வு சமாதி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. பரமஹம்ஸரின் எந்தப் புகைப்படமும் அந்த உள் ஒளியை, தெய்வீக பிரம்மானந்தத்துடன் ஒளிரும் அந்த முகத்தைப் பிரதிபலிக்கவேயில்லை.
துடிப்பும் வேகமும் உள்ள இளைஞரான விவேகானந்தர் சீடர் என்ற சிக்ஷையில் தொடர்ச்சியான சமாதி நிலையை அனுபவிக்க வேண்டும் என்ற அவா கொண்டார். பரமஹம்ஸரோ சிஷ்யனிடம் ஆன்மிக உலகில் அவன் சாதிக்க வேண்டியவற்றை நினைவுபடுத்தி எனவே இத்தகைய அனுபவம் இப்போது சாத்தியமில்லை என்று கூறிவந்தார். ஆனால் விவேகானந்தர் கேட்பாரில்லை. ஒரு முறை தியானத்தில் இருந்த போது அத்தகைய சமாதி நிலை அவருக்கும் கிட்டியது, அது பற்றி கேள்வியுற்ற ராமகிருஷ்ணர் “சில காலம் அவன் இதை அனுபவிக்கட்டும்” என்றார். பின் விவேகானந்தரே தன் குருநாதர் சொன்னது சரியென்பதை உணர்ந்தார், கிழக்கில் இருந்தே ஆன்மிக ஒளி வீசும் என்று உலகிற்கே காட்டினார்.

~ தொடரும்

4 thoughts on “சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s