சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 2

பரிவிராஜக சபதம் ஏற்று எட்டு ஆண்டுகள் ஸ்வாமிஜி வட மற்றும் தென்னிந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றார். இப்பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவகை. தொழில்முறை சாதுக்கள் மூலம் விளையும் தீய விளைவுகளை கண்ணெதிரே கண்டார். மதராஸப் பட்டிணத்தில் பெரும்பான்மையாக இருந்த அவர் தெலுங்கு மற்றும் தமிழ் கிராமவாசிகளின் வாழ்க்கையை வெகு அன்னியோன்னியமாக அறிந்திருந்ததோடு அவருடைய முதற்கட்ட ஆதரவாளர்களையும் மதராஸ பட்டிணத்திலேயே கண்டார். பீஹாரில் இருந்த போது அங்கே பரபரப்பான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது. மாமரங்களில் தானியமணி மற்றும் செந்தூரத்தினால் ஆன கலவையை களிமண்ணுடன் பிசைந்து சற்றே புடைத்தாற்போல் அப்பி விடுவர். அநேக மாமரங்கள் இதே மாதிரி காணப்பட்டன. அரசு அதிகாரிகள் என்று அழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஒரு தீய செயலுக்கான அறிகுறி போலத் தோன்றி, இவை கிளர்ச்சிகளுக்கு சற்று முன் பொதுவாக விநியோகம் செய்யப்பட்ட மர்மமான ‘சப்பாத்தி’ போலவே இருப்பதாய் நினைத்தனர். திடீரென்று படை சூழ ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் அங்குமிங்கும் வரும் அதிகாரிகளைக் கண்ட கிராமத்தவர் பயந்து போயினர். தங்களுக்கும் இந்த மர்ம சின்னத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று மறுத்தனர். உடனே அதிகாரிகளின் சந்தேகம் நாடெங்கும் சுற்றியலையும் சாதுக்கள் மீது விழுந்தது. சிறிது காலத்திற்கு கொத்துக் கொத்தாய் சாதுக்களை அரெஸ்ட் செய்து, பின் ஆதாரம் எதுவுமில்லாத காரணத்தாலும் அப்போது இவை போன்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்பது பற்றிய ஒழுங்குமுறைகள் இல்லாத காரணத்தாலும் இச்சாதுக்களை விடுவிக்க வேண்டியதுமாயிற்று. பின் இந்த மர்ம சப்பாத்தி மாமரம் போன்றவை நல்ல மகசூல் தருவதற்குச் செய்யப்படும் இயற்கை வேளாண் முறை என்பது தெரிய வந்தது.

விவேகானந்தர் அதிகாலையே எழுந்து க்ராண்ட் ட்ரங்க் ரோடு அல்லது ஏதாவது கிராமப்புற பாதையில் யாராவது வலிய வந்து சாப்பாடு தரும் வரையோ அல்லது கொளுத்தும் வெயில் அவரை நிழல் தேடி சாலையோர மரத்தடியில் நிற்கும் வரையோ நடந்து கொண்டேயிருப்பார். இது போல் ஒரு காலையில் நடந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து யாரோ அவரை நிற்குமாறு கூவியது கேட்டது. முழு யூனிஃபார்மில் ஒரு போலீஸ் அதிகாரி சில போலீஸ்காரர்கள் பின் தொடர வந்து காவலருக்கே உரிய தொனியில் அவரை யாரென்று விசாரிக்க, விவேகானந்தர் “ஃகான் சாஹேப், நானொரு சாது” என்றார்.

“எல்லா சாதுவும் பத்மாஷ்கள் (அயோக்கியர்கள்) தான்” – கர்ஜித்தார் அதிகாரி.

“நீ என்னுடன் வா, உன்னை உள்ளே தள்ளி விட்டு மறுவேலை பார்க்கிறேன்” – கொக்கரித்தார் அவர்.

விவேகானந்தர்: “எத்தனை நாளைக்கு உள்ளே போடுவீர்கள்?”

அதிகாரி: “ஓ, இரண்டு வாரத்துக்கோ ஒரு மாதமோ கூட இருக்கலாம்!”

சுவாமிஜி (அவருக்கு சற்று அருகில் போய் அவர் நல்லெண்ணத்தைப் பெறுமாறு, கவரும் ஒரு குரலில்): ஃகான் சாஹேப், ஏன் வெறும் ஒரு மாதம்? என்னை ஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே போட முடியாதா?”

அதிகாரியின் முகம் விழுந்து விட்டது, முறைத்தவாறு: “எதுக்காக ஒரு மாதத்துக்கு மேல் ஜெயிலில் போடச் சொல்கிறாய்?”

சுவாமிஜி தன்னம்பிக்கையுடன்: “ஜெயிலில் வாழ்க்கை இதை விட சிறப்பாகவே இருக்கும். அங்கிருக்கும் வேலை காலை முதல் ராத்திரி வரை இப்படி லோல் படுவதை விட எளிதாகவே இருக்கும். என் தினப்படி சாப்பாடு நிச்சயமில்லை, பல சமயங்களில் பட்டினி கிடக்கிறேன். ஜெயிலில் மணி அடித்தால் ரெகுலராய் சாப்பாடு கிடைக்கும். என்னை உள்ளே போட்டீர்களானால் நான் தங்களை என் பரோபகாரியாகப் பார்ப்பேன்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி முகத்தில் ஈயாடவில்லை, ஒரு அருவருப்பான முகபாவத்துடன் விவேகானந்தரை அவ்விடம் விட்டு உடனே சென்று விடுமாறு கூறிவிட்டார்.

போலீஸாருடனான இரண்டாவது எதிர்சேவை கல்கத்தாவிலேயே நடந்தது. அப்போது சுவாமிஜி சில சாதுக்களுடன் கல்கத்தாவில் ஒரு இடத்தில் படித்துக்கொண்டும் தன்னாலான பொதுச்சேவைகளை செய்து கொண்டுமிருந்தார். ஒரு நாள் தங்கள் குடும்ப நண்பரான ஒரு அதிகாரியைச் சந்தித்தார். கிரிமினல் புலனாய்வுத் துறையில் போலீஸ் சூப்பிரண்டெண்டட் ஆக பெயர் பெற்ற அவர் சுவாமிஜியை இரவு உணவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். விவேகானந்தர் சென்ற போது இன்னம் சிலர் அங்கிருந்தனர், சற்று நேரத்தில் விடை பெற்றும் சென்று விட்டனர். சாப்பாடு வரும் வழியைக் காணோம். அதிகாரி ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு திடீரென்று கம்மிய குரலில் அதட்டும் ஒரு முகபாவத்துடனும், “இப்போ வா, ஒழுங்காய் என்னிடம் உண்மையைச் சொல்லி விடு. உன் கதையெல்லாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது, உன் விளையாட்டெல்லாம் எனக்குத் தெரியும். நீயும் உன் கூட்டாளிகளும் ஆன்மிகவாதிகள் போல வேஷம் போட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஏதோ சதிவேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்!”

விவேகானந்தர் திகைத்துப் போனார்: “என்ன சொல்கிறீர்கள்?! நான் என்ன சதிவேலை செய்கிறேன், இவைகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

அதிகாரி: “எனக்கு இது தான் தெரிய வேண்டும். ஏதோ சதிவேலை நடக்கிறது. நீ தான் ரிங் லீடர். நீ முழு உண்மையும் கக்கி விட்டால் உன்னை அப்ரூவராக மாற்றி உனக்கு நான் உதவுவேன்.”

“உங்களுக்கு எல்லாமே தெரியுமானால் நீங்கள் ஏன் எங்களைக் கைது செய்து எங்கள் வீட்டினையும் சோதனை போடக் கூடாது?” – இவ்வாறு சொன்ன வண்ணம் விவேகானந்தர் எழுந்து சத்தமின்றி கதவைச் சாத்தினார். பார்ப்பதற்கு கட்டுமஸ்தான தேகத்துடன் இருக்கும் அவர் பூஞ்சை போலிருந்த அந்த அதிகாரி பக்கம் திரும்பி, “நீங்கள் என்னை போலியான ஒரு முகாந்திரத்தில் உங்கள் வீட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள், என் மீதும் என் சக சாதுக்கள் மீதும் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டையும் சுமத்தியிருக்கிறீர்கள். அது உங்கள் தொழில் ஆனால் நான், அவமானங்களுக்கு எதிர் வினையாற்றக் கூடாது என்று கற்றிருக்கிறேன். ஒரு வேளை நான் ஒரு குற்றவாளியாகவோ சதிகாரனாகவோ இருந்தால் நீங்கள் உதவிக்குக் கூக்குரல் இடுமுன் நான் உங்கள் மென்னியை முறிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது உங்களை நான் இப்படியே விட்டு விடுகிறேன்” என்று சொல்லி விட்டுப் பேயறைந்தது போல அரண்டு போய் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி முன் அறை கதவைத் திறந்து வெளியேறினார். அதன் பின் அவரையோ அவருடைய சக சாதுக்களையோ அவ்வதிகாரி ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவர் கூறிய மற்றொரு அனுபவம் சோகமானது. அப்போது அவர் ஏற்றிருந்த சபதத்தின் படி நாள் முழுவதும் நடந்தவண்ணம் இருப்பார், யாரிடமும் பிக்ஷை கேட்பதோ, பின்னால் திரும்பிப் பார்ப்பதோ கூடாது. ஒருவேளை யாராவது வலிய அழைத்தாலோ, கேட்காமலேயே உணவளிக்க முன்வந்தாலோ அன்றி நடப்பது நிற்காது. சில சமயங்களில் இருபத்தி நாலு முதல் நாற்பத்தியெட்டு மணி நேரங்கள் கூட உணவின்றி சென்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இம்மாதிரி ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்கு அருகில் ஒரு செல்வந்தரின் தொழுவத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தார். எதுவும் சாப்பிட்டு முழுதாய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தபடியால் மிக களைப்புடனும் சக்தியற்றும் இருந்த அவரைக் கண்டு அங்கிருந்த ஒரு குதிரைப் பாகன் வணங்கி, “சாது பாபா, இன்று எதாவது சாப்பிட்டீர்களா?” என்றார். “இல்லை, எதுவும் சாப்பிடவில்லை இன்று” என்று பதிலளித்த அவரை தொழுவத்திற்குள் அழைத்து சென்று அவர் கை, கால்களை அலம்பிக் கொள்ள தண்ணீர் கொடுத்து, தன்னுடைய உணவில் இருந்த சப்பாத்தி மற்றும் கார சட்னியை அவருக்கு தந்தார்.

இம்மாதிரியான பயணங்களில் விவேகானந்தருக்கு கிடைக்கும் ஒரெ வியஞ்சனம் மிளகாய்கள் தான், எனவே அவர் இவற்றுக்கு நன்கு பழகியிருந்தார். அவர் கை நிறைய காரமான பச்சை மிளகாய்களை சுவைத்து சாப்பிடுவதைக் கண்டிருக்கிறேன்! சட்னியுடன் சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தவர் உடனேயே வயிற்றில் கடுமையான பற்றியெரியும் எரிச்சலை உணர்ந்தார், வலியுடன் தரையில் புரளத் தொடங்கினார். குதிரைக்காரன் பாவம் நடுநடுங்கிப் போய் விட்டார், “ஐயோ என்ன செய்து விட்டேன், ஒரு சாதுவைக் கொன்று விட்டேனே?” என்று தலையில் அடித்துக் கொண்டு அரற்றத் தொடங்கினார் அவர். அந்த எரிச்சல் வெறும் வயிற்றில் அவ்வளவு கார சட்னியை உண்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும். இச்சமயம் தலையில் ஒரு கூடையுடன் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவன் இந்தக் கூக்குரலைக் கேட்டு வந்தவனிடம் விவேகானந்தர் அவன் கூடையில் என்ன இருக்கிறது எனக் கேட்க அவன் புளி இருப்பதாய் கூறினான். “ஆ! அது தான் எனக்கு வேண்டும் இப்போது” என்று கூறி அப்புளியைத் தண்ணீர் கலந்து அருந்தினார். அது வயிற்றின் எரிச்சலை கட்டுப்படுத்த சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஹிமாலயத்தில் ஆளில்லாத இடங்களில் சில ஆபத்தான அனுபவங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எதுவும் அவரை பயமுறுத்தவில்லை. தன் பயணத்தில் அதி தைரியத்துடனும் களைப்படையா சக்தியுடனும் முன்னேறினார். அவர் ஏற்படுத்திகொண்ட விதிமுறைகள் கடுமையானதும், வெகு கட்டுக் கோப்பான ஒழுக்கம், தியானம் இவற்றுடன் கூடியது. நண்பர்களோ, பணமோ எதுவும் இல்லாமல் அவர் அமெரிக்கா வந்த போது அவருடன் இருந்தது அவருடைய புத்தி கூர்மை, ஆன்மிக சக்தி இவற்றுடன் இந்தியாவில் பரிவிராஜகராக சுற்றி வந்த போது பெற்ற எதற்கும் கலங்காத தைரியமும் தான். அங்கே தன் சொந்த நாட்டிலிருந்த வந்த ஒருவரே அவர் மீது இல்லாத பொல்லாத பழிகளைப் போட்டும், சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள முடிந்தது விவேகானந்தரால். அங்கே தான் உலகளாவிய புகழ் அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்தவர்களில் அவர்தான் ஒருக்கால் இளையவராகவும் ப்ரத்யேகமானவராகவும் இருந்திருக்கக்கூடும். தானொரு ஹிந்து என்பதைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அவரிடம். அவருடைய குருவின் பெயர் ஐரோப்பா, அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. அவர் யாருமறியாத, புகழறியாத ஒரு இளைஞர், தன் நாட்டிலேயோ வெளிநாட்டிலேயோ, கல்வித்திறனுக்கோ, துறவு வாழ்வுக்கோ, தலைமைப் பண்புக்கோ, எதற்கும் பெயர் போனவர் அல்ல. உலகனைத்திலும் உள்ள சர்ச்சுகள், மடாலயங்கள் அனைத்திலிருந்தும் வந்திருக்கும் கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியுள்ள, உணர்ச்சிகளுக்கு எந்த இடமுமற்ற, ஒப்பு கூற முடியாத ஒரு உலக சமயங்களின் மாநாடு. இங்கே கூடியிருந்தவர்கள் உலகெங்கிலுமுள்ள புகழ் வாய்ந்த கோவில்கள், பகோடாக்கள், மசூதிகள், சர்ச்சுகளின் பிரதிநிதிகள், வெகு கட்டுப்பாடுகள் கொண்ட பயிற்சிகள், பொருளியல் உலகில் எதற்கும் மயங்காத திடமான மனது, தியானம், விசாரம் இவற்றில் ஆழ்மை, ஆளுமை, உலகப்புகழ் மற்றும் துறை சார் நிபுணத்துவம், அனைத்தும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரிலும் எல்லாவற்றிலும் குறைந்தவர் என்று மதிப்பிடக்கூடியவர் கிழக்கிலிருந்து சென்ற இந்த இளைஞர், யாருக்கும் இவர் யாரென்று தெரியாது. சந்தர்ப சூழ்நிலை காரணமாக இவர் இங்கு இடம் பெற்றாரே தவிர தான் சாதித்த எதையும் தகுதியாகக் கொண்டு வரவில்லை எனும்படியான நிலையில் இருந்தார். அவர் அச்சபையை எப்படி ஒரு புயல் போலத் தாக்கினார், எப்படி அமெரிக்காவின் அனைத்து பத்திரிக்கைகளும் டர்பன் கட்டிய, ஆரஞ்சு வண்ண அங்கி அணிந்த இந்த ஹிந்து துறவியின் புகைப்படத்தை பிரசுரித்து மாய்ந்ததோ, எப்படி ஆண்களும் பெண்களுமாய் அவரைப் பார்க்க, அவர் குரலைக் கேட்க படையெடுத்தார்களோ, இவை அனைத்தும் நன்கறிந்த வரலாறு.

ஜூலியஸ் சீஸரின் புகழ்பெற்ற வாக்கியத்தை சற்றே மாற்றி சுவாமி விவேகானந்தருக்குச் சொன்னால், “அவர் சென்றார், பார்க்கப்பட்டார், கேட்கப்பட்டார்… அவர் வென்றார்” என்று சொல்லலாம். ஒரே நிகழ்வில் யாருமறியாத ஒருவர் எல்லோரும் அறிந்தவரானார். உலகப் புகழ் வாய்ந்த பலர் கூடிய அச்சபையில் இன்று வரை நினைவில் இருப்பது சுவாமி விவேகானந்தர் என்ற ஒரு பெயர் மட்டுமே, வியப்பிலும் வியப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது இல்லை? உண்மை என்னவெனில், அவர் போல வேறொருவர் அந்த சபையில் இல்லவே இல்லை என்பதே. காரணம் மிகத் தெளிவானது. அங்கிருந்த அனைவரைக் காட்டிலும் விவேகானந்தர் கொண்ட கட்டுப்பாடுகள், ஒழுக்கம் மிக மிகக் கடினமானது. மேலும், அவர் யார் பாதத்தின் அடியில் அமர்ந்து கற்றாரோ அவர் போல ஒருவர் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒருக்கால் பிறக்கலாம் எனும்படியான ஒரு குரு. விவேகானந்தருக்கு பசி தெரிந்து இருந்தது, வறுமை பரிச்சயமாயிருந்தது, ஏழையிலும் ஏழைகளின் வாழ்வை மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறார். பழமையிலும் பழமையான ரிஷிகளின் மூலம் வந்த வற்றாத அமிர்தமாகிய ஞானத்தை அவர் பருகியிருந்தார், எதாலும் கலங்க வைக்க முடியாத தைரியத்தையும் கொண்டவராயிருந்தார். உலக சமய மாநாட்டில் அவர் குரல் வெண்கல நாதம் போல ஒலித்த போது கண்கள் வியப்பால் விரிந்தன, மெலிதாக இருந்த இதயத் துடிப்புகள் வேகமெடுத்தன, ஏனெனில் அவர் குரலின் மூலம் பேசியது காலங்காலமாக அமைதியாக இருந்த, ஆனால் கட்டுப்படுத்தப்படாத முழக்கம் கேட்டது. அங்கிருந்தவர்களில் இந்த அழகிய முகத்துடன், கனல் வீசும் கண்களையுடைய, கம்பீரத் தோற்றத்துடனும், இசை போல ஒலிக்கும் குரலுடன் வேறு யார் இருந்தார்?! அவரில் தோன்றியது பன்னெடுங்காலமாக ஞானத்தில் ஊறிய, சக்தி மிகுந்த, சகிப்புத்தன்மை மிகுந்த, இரக்கம் கொண்ட பழங்கால ஆரியர்கள் வாழ்ந்த இந்தியாவே தான் (இங்கே ஆரியர்கள் என்பது மேன்மை பொருந்திய என்ற, உண்மையான ஒரே பொருளில் ‘மட்டுமே’ குறிக்கப்படுகிறது). அவருள் இருந்த சக்தியும் கனலும் ஒவ்வொரு முறையும் பளிச்சிட்டு சுற்றியிருந்தவர் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

~ தொடரும்

சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 1

விவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதியாகி விட்டது; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளம் வந்த வண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கிறது. அதே சமயம் அவருடன் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது.

விவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதி கடந்து விட்டது; வருடங்கள் செல்லச் செல்ல அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளங்கள் வந்தவண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கின்றன. அதே சமயம் அவர் வாழ்ந்த சமயத்தில் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. எஞ்சியிருக்கும் அவரது சமகாலத்தவர்கள் அவரது நினைவுக்கும், அவர்களின் நாட்டு மக்களுக்கும், மிகப் பெரிய இந்தியர்களில் ஒருவரும், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் இருந்த ஒருவரின் நினைவுகளைப் பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கை பற்றிய விவரங்களை இங்கே திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை, அதை மிகச் சிறப்பாக அவருடைய அடியார்கள் நான்கு பாகங்களாகத் தொகுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பற்றி என்னைப் போல அவரை நேரடியாகத் தெரிந்தவர்களின் தனிபட்ட, நினைவூட்டக்கூடிய குறிப்புகளைச் சேர்க்க முயற்சிக்கலாம். அவருடைய பண்பியல்புகள், அவரைச் சுற்றியிருந்தவர்களுடன் அவர் எவ்வாறு வித்தியாசப்பட்டார் என்பது குறித்த சிறிய ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விவரங்களைச் சேர்க்க விழையலாம்.

நான் அவருடன் கல்லூரியில் பயின்றபடியால் எனக்கு அவரை அவர் யாருமறியாத சாதாரண இளைஞராய் இருந்த போதே தெரியும். பின் அவர் உலகப் புகழ் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது என்னுடன் பல நாட்கள் தங்கியிருந்து நாங்கள் சந்திக்காமல் இருந்த நீண்ட காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எவ்வித ஒளிவு மறைவுமின்றிக் கூறினார். அவர் சமாதியாவதற்கு முன் கல்கத்தாவின் பேலூர் மடத்தில் கடைசியாக ஒரு முறையும் சந்தித்தேன். அவர் குறித்து நான் பிறரிடமிருந்து அல்லாமல் அவரிடமிருந்தே கேட்டவற்றைச் சொல்கிறேன்.

விவேகானந்தர் முதன்முதலில் புகழ் பெறத் தொடங்கி இருந்த சமயத்தில் இந்தியாவில் நிலைமைகள் மிகவும் விசித்திரமாக இருந்தன. வெளிநாட்டவர் ஆளுகையும் அவர்களது கலாச்சாரமும் இந்தியர்களின் வாழ்வு மற்றும் எண்ணங்களில் தீங்கிழைக்கும் பெரியதொரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பழைய கொள்கைகள் மறந்தோ அல்லது மேற்கத்திய பகட்டு நாகரிக கவர்ச்சியினாலோ மறைக்கப்பட்டிருந்தது. முன்னேற்றத்திற்கான எந்த விஷயமும் ஒரு பொய்த் தோற்றம் கொண்டு எந்த செயலிலும் முந்தைய காலங்களில் இருந்த ச்ரத்தை, ஏகாக்ர சிந்தனை போன்றவை போய் வெறும் தற்புகழ்ச்சிப் பிசுக்குடன், ஏதோ அனைத்துமே வெளியில் இருந்து வந்தால் தான் சிறப்பு என்ற தோரணையுடனும் இருந்து வந்தது. தியாகம், சரணாகதி இவை அன்றி எதையும் அடைய முடியாது என்ற தெளிவினைப் பெற்றிருந்தான் அக்கால ஆரியன் (உயர்ந்த, உன்னதமான என்பது மட்டுமே இச்சொல்லின் பொருள் எனத் தெளிக!). இக்கால நவீன இந்தியன் வெற்றிக்கு சரணாகதி என்பது தேவையே இல்லை என்று நினைக்கிறான். மேற்கத்தியனைப் பார்த்துக் கொண்டிருந்து பெரும் பிரச்சினைகளை வெறும் நுனிப்புல் மேய்ந்து கொண்டு, எதையும் ஆழ நோக்காமல் செளகரியமாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டு பொதுச் சேவை செய்யலாம் என்று முயல்கிறான்.

வார்த்தை ஜாலம், வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றல் கொண்டு கேட்பவரின் உணர்ச்சிகளைத் தூண்டுவோரும் இருந்தனர், ஆனால் இவ்வகை தூண்டுதல் அதிக காலம் நிலைத்திருக்கவில்லை, காரணம் – நோக்கத்தில் உண்மை, வலிமை இல்லாமை. இளகிய வலிமையற்ற ஒன்றாய் அப்போதைய இந்தியாவை எண்ணிக் கொள்ளலாம். ஏதும் திட்டமிட்ட சுய-ஏமாற்று வேலை எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்கள் போலியை உண்மை என்று ஏற்கத் தொடங்கியிருந்தனர். பரவலாக ஒரு மந்த நிலை, போலியான சுய-நிறைவு இவை வலிமையில்லை என்பதை தெளிவாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. நெடுங்காலமாய் இந்தியாவில் நிலைத்திருப்பவை, வழக்கத்தில் இருப்பவை அனைத்தையும் இவ்வகை எண்ணங்கள் வெகுவாக பாதிக்கத் தொடங்கியிருந்தது.

இப்படியான சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலையில் அமைதியாக அபூர்வமாக நிகழ்ந்த ஒன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் உதயம். முற்கால இறைத்தூதர்கள் சிலர் போல் கல்வியறிவற்றவர் இவர், ஒரு கோவிலில் அர்ச்சகராய் இருந்து பின்னர் அவ்வேலையும் பொருந்தாதவரானார். அவருக்கு சித்தபிரமை என்றே பிறர் நினைத்தார்கள், ஆனால் அவரின் ஆன்மா உண்மை ஞானத்தையும் அதன் அனுபவத்தையும் தேடிக் கொண்டிருந்தது. அந்த அனுபவம் சித்தியான உடன் அவர் பிறரிடமிருந்து ஒதுங்காமல், இன்னும் சொல்லப் போனால் ஆர்வமிக்க இளைஞர்கள் சிலரை தன் போதனைகளால் வழிபடுத்தி, பின் அவருடய போதனைகளை அவ்விளைஞர்கள் பிறருக்கு போதிக்கவும் செய்தனர். அவருடைய போதனைகள், அவர் சொன்னவைகளில் பல இன்றளவில் பதிப்பில் உள்ளன. ஆனால் இவை அம்மனிதரின் தனித்தன்மையை ஓரளவே எடுத்துக் காட்டுகிறது. இவரை மிகப்பெரியதொரு காரணத்திற்காக உலகில் நெடுங்காலத்திற்கு ஒரு முறை தோன்றும் மஹா புருஷர்களில் ஒருவர் என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் பேசுவதைக் கேட்கும் பாக்கியம் அடைந்தவன் நான். அப்போதே நினைத்தேன், இப்போதும் சொல்கிறேன், இம்மாதிரி ஒருவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒருவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். பரமஹம்சரின் சொல்லாடல் வட்டார பெங்காலியில் இருக்கும். விலாவாரியான பேச்சாற்றல் இல்லையெனினும் மிக இனிமையானதொரு திக்கல் அதில் தொனிக்கும். ஆனால் தீரவே தீராத இனிமையுடனான புன்சிரிப்பு, உருவகங்கள், ஒப்பாரில்லாத கவனிக்கும் ஆற்றல், பிரமிக்க வைக்கும் அடிநாதமான நகைச்சுவையுணர்ச்சி, அருமையான ஞானத்துடன் கூடிய பரிவுடன் கூடிய அப்பேச்சு கேட்பவரை ஆன்மிக அனுபவ செல்வத்தில் ஆனந்திக்க வைக்கும்!

இத்தகைய காந்த சக்தியில் ஈர்க்கப்பட்ட பலரில் ஒருவரே பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திர நாத் தத்தா. பரமஹம்ஸரை சந்திக்க வந்த பல இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வேறுபடுத்திக் காட்டுவதற்கு அப்போது எதுவும் இல்லை நரேந்திரரிடம். சராசரி மாணவர், பயிற்றுவிக்கக்கூடிய, அல்லாத எந்த தொழில் / கல்விகளிலும் எந்த பரிசினையும் வெல்லப் பிறந்தவரல்லாத ஒருவர், ஆனால் பரமஹம்ஸர் நரேந்திரரை மற்றவரிடத்தில் இருந்து தனியாக அடையாளம் கண்டதோடல்லாமல் மிக பிரகாசமான எதிர்காலத்தையும் கணித்து விட்டார். உலகில் மிகப் பெரும் காரியத்தை சாதிக்க முழு முனைப்பு, தயார் நிலையில் வந்தவன் என்ற பொருளில் “அவன் ஒரு ஆயிரம் இதழ் கொண்ட தாமைரை!” என்றார். இது ஆன்மிக கண்ணோட்டத்தில் மட்டுமே என்பதைச் சொல்லத் தேவையில்லை, பரமஹம்ஸருக்கு உலகாயதத்தில் என்றுமே நாட்டம் இருந்ததில்லை. அவர் மற்றவர் முகத்தைப் பார்த்தே வெகு துல்லியமாய் எடை போடுவது மட்டுமல்ல, அவரிடம் சில சக்திகள் இருந்தன, அவர் விவேகானந்தரிடம் இச்சக்திகளை பிரயோகிக்கவும் செய்தார். இவ்விளைஞர் ராமகிருஷ்ணரை சந்திக்க தொடர்ச்சியாக வராமலிருந்தார். ஒரு சமயம் வாரகணக்கில் ஆளையே காணொம். பரமஹம்ஸர் மீண்டும் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்ததோடு, நரேந்திரரின் நண்பரிடம் அவரைக் கூட்டி வருமாறும் பணித்தார். மேலும் அவர் தனியே தன்னைக் காண வரவேண்டுமென்றும் கூறினார். பின் நரேந்திரர் வந்த சமயம் அங்கே அவரையும் பரமஹம்ஸரையும் தவிர யாருமில்லை. அவர் உள் நுழைந்த உடனேயே தன்னிடத்தில் இருந்து எழுந்த பரமஹம்ஸர், “நான் உன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் போது நீ ஏன் உன்னைத் தொலைவு படுத்திக் கொள்கிறாய்?” என்று கேட்டபடியே அவருடைய நெஞ்சில் லேசாகத் தட்டினார். அந்தக் கணம் – விவேகானந்தரே சொன்னது – மிகப் பிரகாசமான ஒளி வெள்ளமொன்றைக் கண்டு அவரைத் தூக்கி வீசியது போல உணர்ந்தார், பின் கிறீச்சிட்டு அலறி “என்ன செய்கிறீர்கள் நீங்கள், எனக்குப் பெற்றோர் உள்ளனர்” எனும்போது பரமஹம்ஸர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து, “இதோ இதோ, இது போதும்” என்றார்!

இச்சம்பவத்திற்குப் பின்னர் விவேகானந்தர் பரமஹம்ஸரின் சிஷ்யர்களில் ஒருவராகி விட்டார். பரமஹம்ஸரிடம் இருந்த சீடர்களோ சிறிய அளவிலானவர்கள். அவர்களை அவரே வெகு ஜாக்கிரதையாகத் தேர்வு செய்திருந்தார். ஒவ்வொரு சீடனுக்கும் தொடர்ச்சியான கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சிகளை அவர் பணித்திருந்தார். அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது. விவேகானந்தர் குறித்த தன் கணிப்பினை யாரிடமும் பிரகடனப்படுத்தவில்லை, அவரும் மற்ற சீடர்களும் ராமகிருஷ்ணரின் கண்காணிப்பில் எப்போதும் இருந்து வந்தனர். விரதங்களும் மற்ற கடுமையான அனுஷ்டானங்களும் அவர்களுக்கு இடப்பட்டிருந்தது, இவற்றை குருதேவர் மறைந்த பின்னும் அவர் சீடர்கள் பின்பற்றி வந்தனர். விவேகானந்தர் வாரணாசி சென்று, அங்கே மந்திர உச்சாடனங்களின் முறை, ஆழ்ந்த உச்சரிப்பு, இவற்றைக் கற்றார். இவற்றை ஒரு ஆழமான இசைபொருந்திய இனிய குரலில் அவ்வவ்போது ஓதுவதுண்டு. அவர் நண்பர்கள் வேண்டுகோளுக்காக பாடுவதைக் கேட்டிருக்கிறேன். பாடும் போது இனிமையும், சொற்பொழிவாற்றும் போது ஒரு சக்தி, ஆளுமையும் கொண்ட குரல் அது.

ஆன்மிக அனுபவத்தினாலோ அல்லது ஆன்மிக உணர்வின் புதியதொரு பரிணாமத்தின் காரணமாகவோ பரமஹம்ஸர் சமாதி நிலைக்கு அடிக்கடி சென்று விடுவதுண்டு. அப்படி ஒரு சமயம் – 1881 இல் – நான் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய, அவர்கள் கேஷப் சந்திர சேன் உடன் பரமஹம்ஸரை சந்திக்கச் சென்றனர். நாங்கள் சென்ற படகிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அப்படகு கேஷப் சந்திர சேனின் மருமகன் கூச் பேஹாரின் மஹாராஜா ந்ருபேந்திர நாராயண் பூப் அவர்களுடையது. பரமஹம்ஸர் காளி பக்தர் என்பது பலருக்கும் தெரியும். அதே சமயம் உருவமில்லாத நிராகார பரபிரம்மத்தை உணர்வதும் அவருக்கு நன்கு இயலும். கேஷப்புடன் இது குறித்து முன்பும் பேசியிருக்கிறார். அச்சமயம் கேஷப்புக்கு அருகில் அவரை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். பேச்சு பெரும்பாலும் ஒருவர் பேசுவதாகவே இருந்தது. கேஷப் அல்லது யாரேனும் ஒரு கேள்வியைக் கேட்க பதிலுக்கு பரமஹம்ஸர் தனக்கே உரிய பிரமிப்பூட்டும் பேச்சாற்றல், உருவகம் இவற்றைக் கொண்டு கேட்போரை ஆகர்ஷித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த நாங்கள் அனைவரும் மூச்சு விடாமல் பிரமித்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு மெல்ல உருவமில்லா நிராகார ப்ரம்ஹன் பற்றித் திரும்பியது, பரமஹம்ஸர் தனக்குத் தானே ‘நிராகார’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லிய வண்ணம் மெல்ல சமாதி நிலைக்குச் சென்று விட்டார். உடல் கல் போல் ஆனது தவிர அதிலோ நரம்புகளிலோ எவ்வித நடுக்கமோ, திடீர் அசைவுகளோ தென்படவில்லை. மடி மீதிருந்த கை விரல்கள் லேசாக சுருண்டிருந்தன. ஆனால் முகத்தில் அப்படியொரு அழகிய மாற்றம் வந்து விட்டிருந்தது. லேசாக புன்னகைப்பது போல விரிந்த உதடுகளின் நடுவில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் தெரிய, கண்கள் பாதி மூடிய நிலையில் கண்மணிகள் கொஞ்சம் தெரிய, முகபாவம் விவரிக்க கடினமான ஆனால் மிக மிக பவித்திரமான அழகைக் காட்டிக் கொண்டிருந்தது. நாங்களனைவரும் மரியாதையுடன் கூடிய மெளனம் கொண்டு மிக பிரமிப்புடன் அவரை நோக்கிய வண்ணமிருந்தோம். சில நிமிடங்கள் இப்படியே கடந்த பின் கேஷப்பின் குழாமில் பாடுவதற்கு பெயர்போன த்ரைலோக்ய நாத் சன்யால் இசைக்கருவி இசைக்க ஒரு துதிப்பாடலைப் பாடத்துவங்க, பரமஹம்ஸர் மெல்லக் கண் திறந்து நடந்தது எதுவும் அறியாதவர் போல சுற்றிலும் துழாவி விட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். சமாதி நிலை பற்றி அவரோ மற்றவரோ எதுவும் ப்ரஸ்தாபிக்கவில்லை.

மற்றொரு முறை கல்கத்தாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்குச் செல்ல அவர விரும்பினார். ஒரு குழந்தையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தார், எந்தவொரு தாமதத்தையும் சகிக்கவே இயலவில்லை அவரால். முக்தன், சமூகத்தளையினால் கட்டுப்படாதவன், ஞானி, இவர்களை அவர்களுடைய குழந்தையின் குதூகலத்தினைக் கொண்டு அடையாளம் காணலாம் என்ற ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றை நினைவு படுத்தும்படி இருக்கும் சில சமயங்களில் அவருடைய செய்கைகள். ஒரு வண்டியில் சில அடியார்களுடன் பரமஹம்ஸரும் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து அலிப்பூருக்கு வெகு நேரம் பிரயாணம் செய்து வந்தனர். பூங்காவுக்குள் அவர் நுழைந்த பின் அவருடனிருந்தவர்கள் அவருக்கு அங்கிருக்கும் பல்வேறு உயிரினங்களைக் காண்பிக்கத் தொடங்கினர். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. “என்னை சிங்கத்தைப் பார்க்க அழைத்துப் போங்கள்” என்று கட்டாயப்படுத்தினார். சிங்கத்தின் கூண்டுக்கருகில் நின்று கொண்டு சிந்தனையிலாழ்ந்த வண்ணம், “அம்மாவின் வாகனம் இது” என்று சொன்ன மறுகணம் சமாதி நிலைக்குச் சென்று விட்டார். அருகில் இருந்தவர்கள் தாங்கிக் கொள்ளாதிருந்தால் கீழே விழுந்து விட்டிருப்பார். நினைவு திரும்பியதும் பூங்காவின் மற்ற தொகுப்புகளைப் பார்க்க அழைத்த போது, “மிருக-ராஜனையே பார்த்து விட்டேன், இனி என்ன இருக்கிறது பார்க்க?” என்று சொல்லிவிட்டு வண்டியை வரச்சொல்லி வீடு திரும்பி விட்டார்.

மேற்சொன்ன இரு சமாதி நிலைக்குமான காரணங்கள் முரண்பட்டவையாகத் தோன்றும், முதலில் நிராகார பிரம்மன், மிகவுயர்ந்த ஒரு ஆன்மிக தத்துவம், இரண்டாவதில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கத்தை வெறுமனே கண்டது. ஆனால் இரண்டு அனுபவங்களிலும் மனதின் குவிப்பு, ஆன்மா இரண்டும் சமமானதே. ஒன்றில் உருவமற்ற பரபிரம்மத்தின் ப்ரத்யக்ஷம், இரண்டாவதில் காளிதேவியுடன் நன்கு தொடர்புடைய ஒரு உருவகத்துடனான தொடர்பு. இரண்டிலும் மற்ற எதுவும் இல்லாத, புறவுலகின் நினைவு அறவே அற்ற ஒரே ஆன்மிக உணர்வு சமாதி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. பரமஹம்ஸரின் எந்தப் புகைப்படமும் அந்த உள் ஒளியை, தெய்வீக பிரம்மானந்தத்துடன் ஒளிரும் அந்த முகத்தைப் பிரதிபலிக்கவேயில்லை.
துடிப்பும் வேகமும் உள்ள இளைஞரான விவேகானந்தர் சீடர் என்ற சிக்ஷையில் தொடர்ச்சியான சமாதி நிலையை அனுபவிக்க வேண்டும் என்ற அவா கொண்டார். பரமஹம்ஸரோ சிஷ்யனிடம் ஆன்மிக உலகில் அவன் சாதிக்க வேண்டியவற்றை நினைவுபடுத்தி எனவே இத்தகைய அனுபவம் இப்போது சாத்தியமில்லை என்று கூறிவந்தார். ஆனால் விவேகானந்தர் கேட்பாரில்லை. ஒரு முறை தியானத்தில் இருந்த போது அத்தகைய சமாதி நிலை அவருக்கும் கிட்டியது, அது பற்றி கேள்வியுற்ற ராமகிருஷ்ணர் “சில காலம் அவன் இதை அனுபவிக்கட்டும்” என்றார். பின் விவேகானந்தரே தன் குருநாதர் சொன்னது சரியென்பதை உணர்ந்தார், கிழக்கில் இருந்தே ஆன்மிக ஒளி வீசும் என்று உலகிற்கே காட்டினார்.

~ தொடரும்

ரமண மஹரிஷியுடன் நான் – 8 – திலிப் குமார் ராய்

To see the English version of this post, click here.


8 – திலிப் குமார் ராய்

அரவிந்த ஆஸ்ரமத்தின் திலிப் குமார் ராய் அச்சமயத்தில் வெகு பிரபலமானவராயும் பல புத்தகங்களை எழுதியவராயும் இருந்தார். அவர் ஒரு பக்தர், இசையாளர். அவர் ஸ்ரீ ரமணரிடம் அவர் ஞானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தியை தள்ளுபவரா என்று கேட்டதற்கு பகவான் “பக்தியே ஞானமாதா” என்று பதிலுரைத்தார்.

“நான் அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தபோது முதன்முறையாக ரமண மஹரிஷி பற்றிக் கேள்வியுற்றேன். அவர் பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டபோது அவர் ரமணர் யோகிகளில் மிக சக்தி வாய்ந்தவர் என்றும் அவருடைய தபஸ் இந்தியாவுக்கு பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது என்றும் பதில் எழுதினார். மற்றொரு சமயம் அரவிந்தர் ரமணரை “யோகிகளில் ஹெர்குலிஸ்” என்று விளித்தார். எனவே நான் ரமணாஸ்ரமம் செல்ல வெகு ஆவலாயிருந்தேன்.

ஆஸ்ரமம் வந்த போதோ எனக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் குருநாதரின் பாதங்களில் என்னால் அடைய முடியாத அமைதியை மஹரிஷியிடம் எவ்வாறு அடைய முடியும்? என் குருவானவரும் சாதாரணமானவரில்லையே? இருந்தபோதிலும் நானே என் செயலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன், நான் ஞானம் தேடி வந்திருப்பவர் ஆன்மிகப் பாதையில் எவ்வகையினராக இருந்தாலும் அவர்கள் மிக உயர்வுடன் குறிப்பிடப்படும் மஹரிஷியாவார்.

நான் அம்மஹா முனிவர் அமர்ந்திருந்த ஹாலுக்குள் நுழைந்தேன், அவர் அங்கே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார், அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டு, அனைத்திலும் ஆர்வமுடையவராகவும் எதிலுமே பந்தமில்லாதவராகவும் இருந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எனக்கு சிவபெருமானின் அடையாளம் தெரிந்தது, கருணையின் மொத்த உருவமும், ஆனந்தமயமானவராகவும், எதிலும் அடங்காதவராகவும், அனைத்திலுமிருப்பவராகவும் இருக்கும் அந்த மஹாதேவனின் சாயல் தெரிந்தது. என்னை பெருவியப்பிலாழ்த்தியது நான் கண்டதா அல்லது உணர்ந்ததா என்று பேதப்படுத்துவது எளிதாக இல்லை. இதோ ஒருவர் கடவுளைப் போலவே வாழ்கிறார், நாம் எதன் பின்னாலெல்லாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமோ அவைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாதவராய், வெறும் கெளபீனம் அணிந்திருந்தபோதும் அவரிடத்தில் இருந்த அமைதியும் தானென்ற உணர்வற்ற ஆனந்தமும் பெரும் அணிகலனாய் திகழ்ந்தது. அவைகளைப் பற்றி நாம் பேச வேண்டுமானால் செய்யலாம், உணர்வது?

நான் அவருடைய பாதங்களைத் தொட்டு பின் உடனே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தேன். என் இதயம் வினோதமான ஆனந்தத்தில் ஆழ ஆழ மூழ்கிக் கொண்டிருந்தது, பலப்பல மணி நேரங்களுக்கு. வார்த்தையால் விவரிப்பது என்பது முடியவே முடியாத, தெளிவான, ஒரே சீரான, வெகு அடர்த்தியான நேரடி ஆன்மிக அனுபவம்!

அமைதியின் தாலாட்டுதலில் நான் ஒரு ஈஸி சேரில் நட்சத்திரங்களுக்கு அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தது போலிருந்தேன், கண்களில் ஆனந்த பாஷ்பமாய் கண்ணீருடன். ஸ்ரீ ரமணரிடம் பெரிதும் நன்றிக் கடன் பட்டவனாயிருந்தேன். அவர் சொன்ன ஒரு ஆழமான சொல்லை நினைந்தேன், “அப்படியே இரு. அனைத்தும் உன்னுள் இருக்கின்றன, ஒரே ஒரு திரை மட்டும் தான் நடுவில் உள்ளது. நீ செய்யவேண்டியது அத்திரையை நீக்குவது மட்டுமே, அதன் பின், அப்படியே இரு.” இது நாள் வரை இந்த உபதேசத்தை ஒரு மர்மமான, புரியாத ஒன்றாய் நினைத்திருந்தேன். இப்போது முதன்முறை அதன் ப்ரத்யக்ஷம் எனக்கு நேர்ந்தது. மஹரிஷி பற்றிய கவிதை ஒன்றையும் எழுதி என் வணக்கத்தைச் செலுத்தினேன்.

மஹரிஷியின் தன்னுள் தானிருந்து சுற்றி நடப்பது எதுவும் பாதிக்காத தன்மை என்னை மிகவும் வசீகரித்தது. சூரிய அஸ்தமனத்தின் மேகம் போல அழகு போல மேன்மை அவரிடம் வெகு எளிதாக அமர்ந்திருந்தது, ஆனால் தூக்கியடிக்கும் அளவிற்கு. ஒரு பெரியவரான ஒருவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற நம் கணிப்பு, எண்ணம் அனைத்தையும் வார்த்தைகளற்ற வெறும் புன்னகையால் கரைத்து ஒன்றுமில்லாதவைகளாக்கி விடுகிறார். நான் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் அவரை தினம் தினம் கண்டு வந்தேன், தனித்துவம் வாய்ந்த இவர் போல மற்றொருவர் இந்தப் பரந்த உலகில் வேறெங்கும் காணக் கிடைக்க மாட்டார்.

என் வாழ்வில் நான் கண்ட பலவித அனுபவங்கள், விரிவான பிரயாணங்களில் இவரைப் போல வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அதே சமயம் மிக மிக சக்திவாய்ந்த மாற்றத்தை உருவாக்குபவருமான யாரையும் நான் கண்டதேயில்லை. அவர் கண்களில் எந்த பந்த-பாச உணர்வும் தெரிவதில்லை, ஆனால் அக்கண்கள் என்னைக் காண்கையில் என்னை என்னுள் ஆழச் செலுத்தி வெகு உன்னதமான ஆனந்தத்தை அளிக்கும் அமைதியை நான் உடனே உணர்ந்தேன்.

அவரிடம் எந்த வித சுய தம்பட்டமோ நடிப்புகளோ துளிக் கூட இல்லை. அவர் யாரையும் எவ்விததிலும் ‘போதனைகளாலோ’ கட்டுப்படுத்தவேயில்லை.

நான் கண்ட இம்மஹரிஷி வெளிப் பார்வைக்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கான எதுவுமே கொண்டவர் அல்ல எனினும் – அதை எப்படிச் சொல்ல – அவர் எவ்வளவு பாதிக்கிறார் நம்மை! அவருடைய ஆசாரமான அதே சமயம் வெகு கனிவான முகத்தை மின்சார விளக்கின் ஒளியில் கண்ட போது என் மனது எப்படி ஆழமாக கிளர்ந்து எழுந்தது என்பதை நான் மறக்கவே முடியாது. பால் ப்ரண்டன் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிடுகிறது, “இந்த மனிதர், இம்மஹரிஷி, ஆன்மிக அமைதி என்ற நறுமணத்தை மலர்கள் அதனுடைய இதழ்களில் இருந்து வெளிவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறாரா?”

அவர் முன்னிலையில் பாடல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாடினேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கனிவான புன்சிரிப்புடன் கூடிய பார்வை என்னைக் கவர்ந்து கொண்டேயிருந்தது. முதன் முறையாக நான் அவ்வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டேன் – புனிதம்!

கவிதைகளில் சில:

ஸ்ரீ ரமணருக்கு,

விடியலின் செல்வனே! சூரியனை மட்டும்
ஞானத்தின் கண்கள் கொண்டு அனைத்தையும் –
அனைத்தும் வெளிபடுத்தப் பட்டுக் காண்பவனே
சூரியனின் புதல்வர்கள் மட்டுமே உணரக்கூடிய
குறையேதும் இல்லாத நிறைவே!

தேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே இவ்வுலகின்
காயங்களுக்கும் அழுகைகளுக்கும் பின்
பளிச்சிடும் அவ்வுண்மையைக் கண்டவராகிறார்;
மிகவுயர்ந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் – உண்மையின் ஸ்வரூபமான –
யார் உமைக் காண்கிறாரோ
அவர் கணநேரமாயினும் அனைத்துங்கடந்த ஆனந்தத்தை அனுபவிப்பர்.
நீர் பாடுகிறீர் – ‘இல்லை, அது இங்கே இப்போதே இருக்கிறது’ என்று –
இருப்பினும் ஐயா உமது கருணையின்றி – அச்சிலரும் எவ்வாறு உணர்ந்திடுவார்?
தெளிவெனும் இசைவாணரே, உமக்கு என் அஞ்சலி!

ஆங்கில மூலம்:

To Sri Ramana Maharshi

O Son of Dawn! Who only knowest the Sun,
And through His eyes of Light see’st all that lies
Revealed – a flawless Plentitude which none
But Sun’s own children ever might surmise!

For only the chosen few so far have won
The Truth that shines beyond world’s wounds and cries;
Who see Thee, throned in the high dominion
Of Self’s invulnerable Verities,
Enjoy a glimpse of Bliss of the Beyond.
Thou singest: ‘Nay, ‘tis here’ – yet without Thy
Compassion’s pledge – how few would understand?
Homage to Thee, O minstrel of Clarity!

ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நான் – 5, 6 & 7

5 – மனு சுபேதார்

மனு சுபேதார் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.

காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த காரில் தனியாக இருந்த நான் என் கேள்விகளை எண்ணி சரிபார்த்துக் கொள்ள விரும்பினேன். ஒவ்வொரு கேள்வியையும் எப்படிக் கேட்க வேண்டும் என்று உருவேற்றிக் கொண்டிருக்கையில் அதற்கான பதில்களும் எனக்குத் தெரிந்திருந்ததை உணர்ந்தேன். மஹரிஷியை சந்தித்த போது ஒரு கேள்விகளும் கேட்கத் தோன்றவில்லை.

அவரிடம் நான் சேர்மனாக அஹமதாபாத்திலிருந்த சாஸ்து சாஹித்ய முத்ரனாலயா ட்ரஸ்ட் பதிப்பித்திருந்த ‘அவதூத கீதை’ மற்றும் ‘அஷ்டவக்ர கீதை’ பிரதிகளை சமர்பித்து அவர் கவனத்தை அவதூத கீதையின் முதல் வரியின் பால் கொணர்ந்தேன். அது சொல்வது: “கடவுளின் அருளால் மாத்திரமே ஒரு புத்தியுள்ள மனிதனின் பால் அண்டவெளியிலுள்ள ஒற்றுமை பற்றி அறியும் ஆசை எழுகிறது. அவ்வாசையே அவர்களை சம்சாரத்தில் இருக்கும் பலவித ஆபத்துகளிலிருந்தும் காக்கிறது.”

மஹரிஷி என்னை அளவுகடந்த கருணையுடன் நோக்கினார். பின் தன் உதவியாளர்கள் ஒருவரிடம் ஒரு புத்தகத்தை எடுத்து வரச்சொன்னார். அது நாபாஜி எழுதிய ‘மஹா பக்த விஜயம்’, அதைத் திறந்து படிக்கத் தொடங்கினார். (அவர் படிக்க எண்ணிய அதே பக்கத்தை மிகச்சரியாக திறந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்). மஹரிஷி அதை மிகவும் ஆழ்ந்து அனுபவிப்பவர் போலத் தோன்றினார்.

தம்மைத் தொடர்பவர்களை வியப்பிலாழ்த்துவதற்காக சில குருமார்கள் மந்திர தந்திர சித்துக்களை நாடுவதுண்டு. மஹரிஷி மாறாக ஒரு நேர் வழியை உபயோக்கிறார். உண்மை என்பதை வெளிச் சொல்லிவிடுகிறார், அது மிக எளிதாக, அவர் எண்ணத்தில் உதித்ததாயும் அவரே அனுபவித்து உணர்ந்ததாயும் இருக்கிறது.

அவர் உங்களைப் பார்க்கும் பார்வையில் ஒரு கேள்வி தொனிக்கிறது, என்னைப் பொறுத்தவரை. அது கேட்பது, “நான் ஒரு ஒற்றுமையைப் பார்க்கிறேன், ஆனால் நீங்கள் வேற்றுமையை மட்டும் கவனிக்கிறீர்கள். நீங்கள் உங்களையே ஏன் நன்கு அறிந்து கொள்ளக் கூடாது, அறிந்து உங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணரக்கூடாது? அதன் பின் உங்களால் உங்களுடைய நிஜ சுயத்துடன் ஒற்றுமை என்ற அந்த ஒன்றில் ஒன்றி இருக்க முடியுமே?” என்பதே அது. எவரொருவர் உண்மையான ஆன்மிகத் தேடலில் இருக்கிறாரோ அவருக்கு மஹரிஷியின் அருகாமை போல வேறெதுவும் உதவாது.

அவருடைய பார்வையில் ஒரு ஆன்மிக ரீதியான தொடர்பும் கனிவும் தென்படுகிறது, ஒரு மனிதரிடத்தில் சிறந்தது என்ன என்பதைப் பார்க்கிறது. மெளனமான அந்த மணித்துளிகளில் அவருடைய இருப்பு ஒரு சாதகருடைய ஆன்மிக ஏக்கத்துக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. அவர் பக்தர்களைப் பார்க்கும் அக்கனிவு மிகுந்த பார்வை ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்ப்பது போலிருக்கிறது.

6 – வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்)

நியூயார்க்கின் வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்) மஹரிஷியை 1930களில் சந்தித்தார்.

மஹரிஷியின் முன் முதன்முறை அமர்ந்திருந்த போது ஒரு மிக சக்தி வாய்ந்த அனுபவம், அதை வார்த்தையால் விவரிக்க வேண்டுமானால் தொட்டு உணரக்கூடிய ஒரு தங்க பேரொளி என்று சொல்லலாம், மிக சக்திவாய்ந்த ஒரு ஆன்மிக சக்தி. அவரிடமிருந்து ஒரு மெல்லிய ஆனால் அடர்த்தியான ஆன்மிக உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, அதை உணர்ந்த மறுகணமே கேள்விகள், வார்த்தைகள், தியானம் செய்யும் வழிமுறைகள், இவை எல்லாம் உடனடியாக மறைந்து விடுகின்றன. க்றிஸ்தவ சர்ச்சுகளில் ஒரு சில செயிண்ட்களுடன் ஒப்பிடப் படும் தெய்வீகம் பொருந்திய எதையும் சட்டை செய்யாத நிலையையும் மஹரிஷியிடம் காணக்கிடைக்கிறது. இதை வெளிப்படையாக ‘அலட்சியம்’ என்று நினைத்து விடலாகாது, மாறாக அனைத்தும் உணர்ந்த ஒருவரிடமிருந்து அனைத்தையும் ஆற்றும் சக்தியாக வெளிப்படுகிறது.

7 – க்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி)

க்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி), 1930 களில் சென்னை மாகாணத்தின் அரசாங்க உத்தியோகஸ்தரும், பண்டிதரும் ஆவார். இவர் 1880 களில் சென்னை கவர்னராக இருந்த ஸர். மெளண்ட் ஸ்டௌர்ட் க்ராண்ட் டஃப் இன் மருமகனாவார்.

மஹரிஷியை முதன் முதலாய் பார்த்த போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நோக்கிய அந்த கணம் இவர் தான் உண்மையும் ஒளியும் என்பதை நான் உணர்ந்தேன். பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த சந்தேகங்கள் அனைத்தும் இப்புனிதமானவர் பார்த்ததும் மறைந்து விட்டன. நான் ஆஸ்ரமத்துக்கு வந்த நேரம் குறைவானதாக இருப்பினும் ஒவ்வொரு முறையும் அங்கே இருக்கையில் என்னுள் அழிக்க முடியாத ஏதோ ஒன்று மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.

உணர்வுகளைக் கடந்த, பரத்துக்குள் தன்னை முழுவதுமாய் கரைத்துக் கொண்டு விட்ட, பிறரின் நன்மைக்காக சில ஆண்டுகள் இப்பிறவியில் இறங்கி இருக்கும் ஒருவரின் நேரடி தொடர்பில் இருக்கிறேன் நான் என்பதைக் கண்டு கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை எனக்கு. (இக்கருத்து எப்படி இவருக்கு ஏற்பட்டது என்று கேட்கையில் உடனடியாக ஒப்புக்கொண்டார்) – என்னால் பதிலுரைக்க இயலவில்லை, எப்படி ஜன்னல் வழியே சூரியனை எப்படி பார்த்தாய் என்று கேட்பது போல, என் கண்கள் மற்றும் பிற உணர்வுகளின் மூலமாக என்று வேண்டுமானால் சொல்லலாம். எனக்கு சூரியனின் இருப்பு தெரிவதற்க்கு அல்ஜீப்ராவோ மற்ற அறிவியல் ஞானமோ தேவையிருக்காது அல்லவா, அது போல மஹரிஷியின் ஆன்மிக மேதமைக்கு எந்த ஆதாரமும் தேவைப் படவில்லை.

ஆஸ்ரமத்துக்கு வருகை தர முடிபவர்கள் வராமல் நேரங்கடத்திக் கொண்டிருந்தால் அதற்காக தங்களுடைய பின்னாளில், அடுத்த பிறவிகளில் தங்களையே நொந்து கொள்வார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையாக, மஹா பெரும் உண்மை, சத் – அறிவதற்கரிய பேறு நம் முன்னால் இவ்வளவு எளிதான உருவத்தில் அமர்ந்திருக்கிறது. இதோ நாம் தகுதி அடைந்திருக்கிறோமோ இல்லையோ, உண்மையை நெருங்கலாம்! வந்து போவதற்கான பிரயாணச் செலவை மட்டும் தரவேண்டும், அதற்குக் கிடைப்பது ‘தங்களுடைய சுயத்தைப் பற்றிய ஞானம்’.

(இது லண்டனிலிருந்து 1935 இல் எழுதப்பட்டது. ரமணாஸ்ரமம் பதிப்பித்த ஸ்ரீ ரமண கீதையின் முன்னுரையைப் பார்க்கவும்).

மஹரிஷி பிறரைப் பற்றி அசாத்தியமான உள்ளுணர்வு கொண்டவர். தன்னைச் சந்திக்க வருபவர்கள் பற்றி அனைத்தையும் அறிந்தவர். அவர் என்னைக் கவர்ந்ததன் குறிப்பிடத்தக்க காரணம் அவருடைய எளிமையும், மென்மையும், அமைதியுமே. எப்படிப்பட்ட மென்மை என்றால் மென்மைத்தன்மை என்பதையே கடந்த ஒரு மென்மை. என் வாழ்வின் மிகப் பெரும் நிகழ்வு நான் அருணாச்சலத்தின் முனிவரை அங்கு சந்தித்ததே.

இவருடைய கவிதையிலிருந்து:

அருணாச்சலத்தின் ரமணருடன்:

நான் தொலை தூரம் அலைந்திருக்கிறேன்: ஆம்
ஓரிடம் விட்டு மற்றொரிடமிருந்து மீண்டும் வேறோரிடம்
முனிவர்களைக் கண்டிருக்கிறேன், பெரும் மன்னர்களும் அரசிகளையும்
அன்புமயமான, அறிவார்ந்த, பிரமிப்பானவர்களை
ஆனால் இங்கு மட்டும் – அருணாச்சலத்தின்
ஆஸ்ரமத்தில் மட்டும்
எந்தக் கலப்புமற்ற ஆனந்தத்தை உணர்ந்தேன்
நான்! நான்! நான்!
***

ரமண மஹரிஷியுடன் நான் – 3 & 4

Read the English version here.

3
ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 3 – ஃப்ரொபஸர் பேன்னிங் ரிச்சர்ட்ஸன் எம்.ஏ (Hons) (Cantab), A.B (Princeton)

திரு. ரிச்சர்ட்ஸன் 1930 இல் புது தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் காலேஜில் ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்க வந்தவர். A Search in Secret India (no. 1) இல் மஹரிஷி பற்றிப் படித்து மெய்மறந்து:

“மஹரிஷியின் முன் ஒரு உள்ளார்ந்த ஆனந்தத்தை நான் உணர்ந்தேன், அது என் உணர்வின் மீது படர்ந்து எண்ணுவது என்பதையே ஒரு தேவையற்றதாக்கி விட்டிருந்தது. ஆன்மிகத்திலேயே மிகவும் புனிதமான வகையின் சமீபத்தில் வந்து இருக்கிறேன். மஹரிஷியுடன் இருக்கையில் ஆனந்தம், அமைதியினால் நான் நிரம்பியிருந்தேன், கேள்வி கேட்பதற்கு ஆசையே எழவில்லை. நான் அங்கிருந்த 3 நாட்களும் (1937) இதே நிலை தான்.

தவற்றைப் புறக்கணிப்பதாலேயே ஒருவரை நல்லவர் என்று சொல்லமுடியாது, ஆனால்
அவருடைய அன்பானது சூரியனின் ஒளி போல அனைவரிடத்திலும் ஒரே மாதிரி வெளிப்படும் போது உடனடியாக தெரிவது என்னவென்றால் ‘உலகின் பார்வையில்’ மதிக்கப்படும் ஒன்றல்லாமல் நிஜமாகவே ஒரு மாணிக்கம், மரகதம் போன்ற ஒப்பற்றவர். தரத்தினால் வித்தியாசப்படுபவர் மட்டுமல்ல, அவரே ஒரு தனித்துவமானவர். இயேசுபிரான் 2000 ஆண்டுகளுக்கு முன் போதித்த “நான் என் தந்தையுள் இருக்கிறேன், என் தந்தை என்னுள் இருக்கிறார். நானும் என் தந்தையும் ஒன்றே” என்பது திருவண்ணாமலையில் வாழும் இம்முனிவர் போதிப்பதும் அதையே.

4

 

ஜஸ்டிஸ் திரு. கே. சுந்தரம் செட்டியார் B.A. B.L – சென்னை உயர்நீதிமன்றம்

சுந்தரம் செட்டியார் அவர்கள் பி.வி. நரசிம்ஹ சுவாமி 1931 இல் எழுதிய பிரபலமான Self Realization என்னும் ரமண சரிதத்தில் முன்னுரை எழுதினார்.

திருவண்ணாமலையின் மாவட்ட முன்சீப் ஆக 1909, 10 மற்றும் 1911 ஆம் ஆண்டின் முதற்பகுதியிலும் இருந்த நாட்கள் என்னைப் பொறுத்தவரை மிகவும் மங்களகரமானவை என்று கருதுவேன், ஒரே காரணம் நான் இச்சமயம் அருள்மிகு பகவானின் பாதங்களுக்கடியில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றேன். அவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போதும் அவர் மீது பக்தி அதிகரித்துக் கொண்டே போனது. அவர் ஞானத்தின் ஊற்று. எளிதில் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் மிகவும் தெளிவாக பதில் பெற்றது. இது ஒரு ஜீவன்முக்தரிடத்தில் இருந்து அல்லாமல் வேறொருவரிடத்தில் இருந்து வருவது சாத்தியமே இல்லை. அவர் தன்னில் அனைத்தையும் அனைத்திலும் தன்னைக் காண்கிறார். உலகில் என்ன நடந்தாலும் அது அவருடைய அமைதியை அசைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அவர் அனைத்திலும் எதிரும் புதிருமாய் தெரியும் த்வைதத்தைக் காண்பதைத் தாண்டி அனைத்தையும் ஒன்றேயான அதன் ஒளியில் காண்கிறார். ஒரு போதும், ஒரு போதும் அவர் தன்னுடைய சொந்த விருப்பத்துக்காகவோ வேறேதோ ஒன்றை நிறைவேற்றுவதற்காகவோ சொல்லவில்லை. பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கும் “ஸ்திதப் ப்ரஞர்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் இவரிடத்தில் இருக்கின்றன.

அவருடைய இருப்பே ஒரு அமைதியை நிலவச் செய்கிறது. அது அவரை உண்மையான நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் சந்திக்க வரும் அனைவரும் உணருகின்றனர். சில கேள்விகளுடன் அவரைச் சந்திக்க வரும் சிலரில் அக்கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது. சில சந்தேகங்கள் அவர் முன் பேசாமல் அமர்ந்திருந்த போதே தெளிவடைந்தது, மஹரிஷி ஒரு வார்த்தை பேசாமலிருக்கும் போதும்!

ரமண மஹரிஷியுடன் நான் – சாது ஏகரஸ

To read the English version of this post, click here.

சாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு மஹரிஷியிடம் ஆழமான பக்தி ஏற்பட்டது.

கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) அவர்கள் வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே (Wen-Poh-Hsuche-Tse) அவர்களைச் சந்தித்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ட்ஸே-லு அவரிடம், “மாஸ்டர், தாங்கள் வெகு நாட்களாக வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே வை சந்திக்க விரும்பினீர்கள், ஆனால் இப்போது அவரைக் கண்டபின் ஏன் ஒரு வாத்தை கூட பேசவில்லை?” என கேட்க, கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) “இவரைப் போன்றவர்களை வெறுமனே பார்த்தாலே போதும், பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை. இவரைப் பற்றிய அனுபவம் ஏற்பட ஒரு முனிவரை சந்தித்திருக்க வேண்டும்” என்றார்.

மஹரிஷியை முதன்முதலில் பார்த்த போது அதே அனுபவம் ஏற்பட்டது எனக்கு, ஒருமுறையல்ல, மறுபடி மறுபடி நான் அங்கு சென்று அவரைப் பாக்கும்போதெல்லாம், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அங்கு நான் அவருடன் எந்தத் தடையுமின்றி தங்கியிருந்த மூன்றாண்டுகள். பலர் பல முறை என்னிடம் கேட்டுக் கொண்ட போதும் அவரைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு வெகு கடினமாய் இருப்பதும் மேல்சொன்ன இதே காரணம் தான். தன்னில் தான் ஆழ்ந்து இருக்கும் ஒரு முனிவரைப் பற்றி செயிண்ட் டியானிசியஸ் சொன்னது நன்கு பொருந்துகிறது, “கடவுளைப் பற்றி நீர் சொல்வது அனைத்தும் பொய். கடவுள் என்பவர் சொற்களுக்கு அப்பாற்ப்பட்டவர். எனவே நீர் கடவுள் பற்றி சொல்வது அனைத்தும் வேறெதையோ தான் குறிக்கிறது.” எனவே இந்தியாவில் யாரேனும் என்னை மஹரிஷி பற்றி பேசவோ எழுதவோ சொன்னால் அவர் மஹரிஷியை சந்தித்து தானே பார்த்துக் கொள்ள வெண்டியது தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலைநாட்டினர் என்னிடம் அடிக்கடி கேட்பது இன்னொன்று: “மஹரிஷி என்னதான் செய்வார்?” இதற்கு ஒருவேளை இப்படி பதில் சொல்லலாம், “அவருடைய தினப்படி வேலை அவர் அவராகவே இருப்பது மட்டுமே”. ஏனெனில் அவர் இவ்வேலையில் மிகவும் வெற்றியடைந்தவராய் இருக்கிறார், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார். அவர் தரும் மாற்றம் என் போன்றவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒன்றும் ‘செய்யாமல் செய்வது’ இதைத் தான். இவருக்கு முன்னால் இப்பூமியில் வாழ்ந்த ‘தி க்ரேட்’ கள் அனைவரும் ஏதோ ஸ்கூல் பையன்கள் மாதிரி தெரிகிறார்கள். மைசூரின் மறைந்த மஹாராஜா அவர் முன் பவ்யமாக மண்டியிட்டு, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்கிக் கொண்டு ஏதும் அசைவற்று நின்று கொண்டிருந்தார். பின் மற்றொரு முறை தண்டனிட்டு விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெளியேறினார்.

ஒரு மனிதன் உலகில் செயற்கரிய செயல் எதையேனும் செய்து விட்டு மஹரிஷி முன் வந்தமர்ந்தால் அவர் உணரும் விஷயம், மஹரிஷியின் தன்னைத் தான் உணர்ந்து அதில் லயித்திருக்கும் செயலுக்கு முன்னால் தான் செய்தது ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகும்.

யாரேனும் உலகிலேயே மிகச்சிறந்த புத்தகமொன்றை எழுதி விட்டு அதை மஹரிஷிக்கு சமர்ப்பிக்க வந்தால் மஹரிஷியே ஒரு பெரும் புத்தகம் என்பதையும், அது எழுத்தாணியோ, இங்க்கோ பேப்பரோ இன்றி, எந்தவித முயற்சியுமின்றி, யாரும் நடுநிலை வகிக்கத் தேவையின்றி, ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வருபவர் விரும்பினால் படிக்க இயலும் பெரும் புத்தகம் என்பதையும் அறிவார்.

மற்றைய பெரியோரிடத்தில் சொல் மற்றும் செயல், ஆன்மிகம், புத்திகூர்மை ஒருபுறமும் செயலாற்றல் என்பது மறுபுறமும் இருப்பதை எளிதாகக் காணலாம். மஹரிஷியிடம் ஆனால் இத்தகைய வேறுபாடுகள் இருந்ததேயில்லை.

மஹரிஷி காலம் என்பதைக் கடந்தவர். அவரின் நிலைத்த தன்மை அவர் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பார்வையிலும் தனித்துவமாக தெரிகிறது. அத்தன்மை அவரை நாடி வந்து அவரிடத்தில் இருக்கும் அனைவருடைய அந்தராத்மாவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அத்தன்மை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் வெகு சொற்பமாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. பின் வேறெப்படி இருக்குமது? யாரால் விளக்க முடியும் உண்மையை, கடவுளை? ஒரு வேளை முடிந்தாலும் கடவுளின் மைந்தனை, உண்மையில் ஸ்வரூபத்தை எவ்வாறு விளக்க முடியும்?

பல்வேறு சன்யாசிகளையும், முனிவர்களின் வாழ்வு, போதனைகள் பற்றி படித்தபின் மிகத் தெளிவாகத் தெரிவது ரமண மஹரிஷி இவர்களில் தனித்து நிற்கிறார் என்பதே. கடவுளின் சாக்ஷாத்காரம் என்பதை எவர் ஒருவரும் கடவுளின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அடைந்ததில்லை. ஸ்ரீ ரமணருக்கு ‘தீக்ஷை’ அருணாச்சலம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கிடைத்துவிட்டது, அதுவும் அச்சொல் ஒரு பயணம் பற்றிய விவரத்தைச் சொல்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது.

ஸ்ரீ ரமணர் தன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அப்படி ஒரு பாரம்பரியம் அடைய இருக்கிறது என்று யாரும் சொல்லாமலேயே அடைந்து விட்டார். குரு, இருளை அகற்றுபவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் ஆகிறார் ரமணர். அவருடைய வழிமுறையானது மிக மிக நேரானது, ஏனெனில் அது மிக எளிதானதும். அப்படி நேராக, மிகத் தெளிவாக இருப்பதாலேயே பலருடைய கவனத்திலுமிருந்து அது எளிதாக விலகி விடுகிறது. அவரை நாடி வருபவர்கள் வேறெதையோ, ஏதோ நிச்சயமான ஒன்றைத் தேடி வருகிறார்கள், அதுவே நிச்சயமற்றதாய் விடுகிறது. அவர்களுக்கு தங்களுடைய நிஜ ஸ்வரூபத்தை அறியச் செய்யும் தீக்ஷைக்கும் தமக்கும் நடுவே தாங்களேதான் தடையாக நிற்கிறார்கள் என்பதை அறிவதில்லை.

மஹரிஷியிடம் பல முறை அவர்கள் தீக்ஷை, அருள், ஆன்மிக அனுபவம், கருணை முதலியவற்றைத் தருமாறு வேண்டுவதுண்டு, அதற்கு அவர் “நான் இவற்றை எப்போதும் தந்து கொண்டுதான் இருக்கிறேன், அதை நீங்கள் உணர முடியாமல் நான் என்ன செய்வது?” என்று சொல்வதுண்டு.

பல குருமார்கள் தங்களை ஆன்மீக மேன்மையை எப்போதும் கருத்தில் கொண்டவர்களாக இருப்பதைப் போல் அல்லாமல் மஹரிஷி அனைவரிடத்திலும் அவர்களுக்கே தெரியாமல் இருந்த போதிலும் அவர்கள் கடவுளின் உள் ஒளியைத் தங்களுக்குள் கொண்டவர்களாக இருக்கும் எதிர்கால ஞானிகள் என்றே கருதினார். அவர் கூறிய சில வார்த்தைகள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹுயி நெங்க் சொன்னதுடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள் – “புத்தருக்கும் சாதாரணமானவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அவர் உணர்ந்ததை (realizes) இவர் தூக்கியெறிந்து (discards) விடுகிறார் என்பதே”. மஹரிஷி கூறுவது: ஆன்மீகப் பாரம்பரியம் என்பது எப்போதும் உள்ளதே, அதை ஸ்வீகரித்துக் கொள்வதற்காக அது காத்துக் கொண்டிருக்கிறது, கடவுள்-தன்மை அனைவரின் இதயத்திலும் உள்ள ஒன்று தான்.

சாதாரணமான மனிதர் மஹரிஷியைக் கண்டு பரிதாபப்படக் கூடும், அடடா வாழ்க்கையின் அவ்வளவு சுகங்களையும் இவர் இப்படி பார்க்காமல் இருக்கிறாரே என்று. மஹரிஷி ஆனால் இம்மனிதர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார் – இவர்களுக்கு நிஜமான சுகம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்று!

ஓய்வின்றி, சதா மாற்றம் மற்றும் அசைவில் திளைத்து உளையும் ஒரு உலகாயத மனதிற்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பது என்பதே ஒரு அசகாய செயல் போலத்தான் தெரிகிறது. இது ப்ரத்யேகமானதும் கூட. ஆனால் மஹரிஷி இதையெல்லாம் எந்த அசகாயத்தனத்திலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. அவர் உலகின் காந்தத்தை, தன் இதயத்தின் மையத்தைத் தன்னகத்தே கொண்டு, தன் தந்தையான அருணாச்சலேஸ்வரர் போலவே அசைவற்றவராகி விட்டார்!

சாது ஏகரஸவின் கவிதைகளில் இருந்து:

ஸ்ரீ ரமணருக்கு இதயத்தின் அஞ்சலி

ஒப்பாரில்லாத, அனைவரின் தாய்-தந்தையுமான மஹரிஷிக்கு
எவரில் சிவமும் சக்தியும் என்றும் ஆனந்தத்தில் இணைந்திருக்கிறதோ
எவரின் இருப்பு இதயத்தை மகிழ்விக்கிறதோ,
எவருடைய லீலை அனைவரின் ஆச்சர்யமாக இருக்கிறதோ –
அவருக்கு மனம், இதயம், உடம்பு – படைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம்!

***

எதிர்கால சந்ததியினர் ஒருக்கால்
மஹரிஷியின் ப்ரத்யேகம் என்னவென்று
நான் சொல்வேன்; எதுவாயினும், அது நிச்சயத்தன்மை;
அசைவற்ற பாறை தரும் பாதுகாப்பு போல,
புயலால் தாக்குண்டும் அசைவற்றிருக்கும் கடல் போல,
கம்பீரமான மெளனத்துடனிருக்கும் மாமலை போல,
தத்துவங்களாலும் கொள்கைகளாலும் சதா அலையுறும் உலகில்,
ஆம், உண்மையில் நீரே ‘அருணாச்சலத்தின்’ முனிவரே!

***

ரமண மஹரிஷியுடன் நான் – 3 – பால் ப்ரண்டன்

டாக்டர் பால் ப்ரண்டன் – சில நிகழ்வுகளின் சிறு தொகுப்பு

இதன் ஆங்கிலப் பதிப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

A Search in Secret India:

(i) ஆஸ்ரமத்துக்கு வரும் பலவகைப்பட்ட மனிதர்களுள் ஒரு விலக்கப்பட்ட மனிதர் பெருந்துயரத்துடன் திடீரென்று வந்து மஹரிஷியின் பாதங்களில் கதறியழுகிறார். அவருடைய மெளனமும் விலகி இருத்தலும் பழகிய ஒன்றாதலால் அவர் பதிலேதும் சொல்லாமல் ஆனால் அம்மனிதரைப் பேசாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய அழுகை சிறிது நேரம் கழித்து மெள்ளக் குறைந்து இரண்டு மணி நேரம் கழித்து அவர் ஆஸ்ரமத்திலிருந்து புறப்படுகையில் வெகு வலிமையுள்ளவனாயும் தெளிவானவனாகவும் வெளியேருகிறார்.

(ii) ஒரு கல்லூரியில் பயிலும் கற்றறிந்த பிராமணன் சில கேள்விகளுடன் வருகிறார். மஹரிஷி வாயைத் திறந்து பதில் ஏதும் சொல்வாரா என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் வாயே திறக்காமல் அனைத்திற்கும் பதில் சொல்வதில் வல்லவர் அவர். இன்றைய தினம் ஏனோ அவர் உரையாடும் மனநிலையில் இருக்கிறார். சொற்செறிவுடைய ஆழமான அர்த்தங்களுடன் அவர் சொல்லும் பதில்கள் கேட்பவருக்குள் பலப்பல படிமங்களைத் திறந்து விடுகிறது.

(iii) ஒரு படிப்பறிவில்லாத கிராமப்புறத்தார் ஒருவர் மஹரிஷிக்கு வணக்கத்தைத் தெரிவிக்க சில நூறு மைல்கள் பிரயாணப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு தன் தினப்படி வேலையைத் தவிர ஆன்மிகம், தன் மதத்திற்குரிய வழிமுறைகள், தம் முன்னோர்களின் மூட நம்பிக்கைகள், என்று எதுவும் தெரிந்திருக்கவில்லை. மஹரிஷியை மூன்று முறை நமஸ்கரித்த பின் அமைதியாகத் தரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய குடும்பம் அமைதியாக ஆனால் ஆழ்ந்த ஒரு மரியாதையுடன் மஹரிஷியை தரிசித்த வண்ணம் அமர்ந்திருக்கிறது. அவருடைய இருப்பே அக்குடும்பதினருக்குத் தேவையான ஆன்மிக உத்தரவாதத்தையும் ஆதாரத்தையும் தந்து கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

(iv) ஹாலில் பெருந்திரளான மக்களும் அடியார்களுமாய் அமர்ந்திருக்கையில் யாரோ ஒருவர் வந்து பிரபலமான குற்றப் பிண்ணனியுடைய இன்னாருடைய இறப்புச் செய்தியை அறிவிக்கிறார். உடனே அவர் பற்றிய அபிப்ராயங்கள் அலசப் படுகின்றன, அவரைப் போல மோசமானவர் ஒருவரைப் பார்க்க இயலாது, எப்படிப்பட்ட கொடுஞ்செயல்களை அவர் செய்திருக்கிறார் என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. அனைத்தும் முடிந்ததும் மஹரிஷி மெல்ல வாய் திறந்து, “ஆமாம், ஆனால் அவர் தன் வரையில் வெகு சுத்தமாயிருந்திருக்கிறார், தினத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அவர் குளிப்பதுண்டு!” என்றார்.

ப்ரண்டனின் இரண்டாம் புத்தகம் The Secret Path இலிருந்து:

மஹரிஷியிடம் என் போன்றவர்கள் கேள்வி மட்டுமே பட்டு வெகு சிலருக்கே காணக்கிடைக்கும் கீழை நாடுகளைப் பற்றிய ‘மர்மமான கிழக்கு’ என்ற சொற்றொடரின் மிச்சத்தைக் கண்டேன். என் தாழ்மையான மரியாதையை வெகு விரைவில் பெற்றுவிட்ட ஒரு அரிய மனிதரை சந்தித்திருக்கிறேன். கீழை நாடுகளின் ஞானிகளில் ஒருவராக போற்றத்தக்க மஹரிஷி தன் குறித்த சுய விளம்பரம் எதையுமே நாடியவரில்லை.

உலகமானது அதில் வாழ்ந்த பெரிய மனிதர்களின் வாழ்வை அவர்கள் விட்டுச் சென்றதை வைத்து நிறுவ முயற்சிக்கிறது, ஆனால் இவ்வகை மனிதர்கள் தங்களை முன்னிறுத்தாமல் தொன்று தொட்டு வரும் ஞானத்தில் திளைத்தவர்களாக, அதன் சாரத்தை பரப்புபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்விலும் விதியிலும் அந்த ஞானமானது ஒளிந்துமிருக்கிறது.

தன்னைச் சுற்றிலும் இருப்பவைகளில் இருந்து விலகியிருப்பவராய் இருந்தும், பிறருக்கு ஞானம் தரும் முறைகளாக வெளிப்பார்வைக்கு எதுவுமே தெரியாத நிலையில் இருப்பினும் மஹரிஷி என்னை வெகுவாகக் கவர்ந்தார். அவர் வாய் திறந்து பதில் கூறுவதென்பது எப்போதாவது தான், மனிதனின் ஆன்மா பற்றியோ, கடவுள் என்பவரின் மர்மம் குறித்தோ, மனித மனத்தினுள் உறையும் வியத்தகு ஆற்றல் குறித்தோ, இது மாதிரி தான். அப்படி அவர் பேசுகையில் மெய்மறந்து அமர்ந்து அவருடைய மெல்லிய குரலில் இருந்து வரும் ஞான அம்ருதத்தைப் பருகுகிறேன், அவருடைய ஒளிரும் கண்கள் ஊக்கமளிப்பதாயும் இருக்கின்றன. அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நிலைத்து இருக்கும் பேருண்மையின் ஒரு துளியாகவே தோன்றுகிறது.

மஹரிஷியின் இருப்பில் ஒரு பாதுகாப்பையும் அமைதியையும் ஒருங்கே உணர்வர். அவரிலிருந்து வரும் ஆன்மிக அலை அனைத்தையும் ஊடுறுவதாய் உள்ளது. தோற்றத்தில், சூழ்நிலையில் ஒரு புனிதத்தை உணரும் அதே சமயம் அவருடைய போதனையில் ஆழமான உண்மைகளையும் இனங்காணக் கற்றேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தோற்றத்தை உடையவராக விளங்குகிறார் மஹரிஷி. அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை சிறு குறிப்பெடுத்துக் கொண்டிருக்கலாம், அவர் பேசியதை அப்படியே குறிப்பெடுத்து அச்சிட்டு இருக்கலாம், ஆனால் அனைத்திலும் வெகு முக்கியமானதான அவரிலிருந்து வெளிவரும் உள்ளார்ந்த ஆன்மிக அருளைக் குறிப்பெடுக்கவோ விளக்கவோ முடியவே முடியாது.

அனுபவம், துன்பம் இவற்றை வென்ற ஞானமும் அமைதியும் அரும்பும் அவருடைய புன்னகையை யாருமே மறக்க இயலாது. மிக மிக புரிதல் கொண்ட இவ்ரைப் போல நான் யாரையுமே கண்டதில்லை, அவருடைய ஒரு பதில் உங்களுடைய மனதின் ஆழம் உங்களுக்கு ஒன்றைப் பற்றி என்ன நினைத்திருந்தீர்களோ அதை நிச்சயம் உறுதிப் படுத்தி, உங்களை நல்வழிப் படுத்தும்.

அவருடைய வார்த்தைகள் என் நினைவுக்குள் ஒரு கலங்கரை விளக்கினைப் போல் ஒளிர்ந்தது. “கிடைப்பதற்கரிய ஞானிகளிடன் சந்திப்பில் தங்கப் பழங்களைப் பறித்து வருவேன்” என்று அட்லாண்டிக் எம்ர்ஸன் தன் டைரியில் குறிப்பிடுகிறார். நான் மஹரிஷியிடமிருந்து கூடைகள் நிறைய தங்கப் பழங்களைக் கொணர்ந்தேன். ஐரோப்பாவின் மிகச் சிறந்த தத்துவவியலாளர்கள் மஹரிஷியின் ஞான ஒளிக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி அளவிற்குக் கூட சமமாக மாட்டார்கள்.

ப்ரண்டன் தனது நான்காவது புத்தகம் A Message from Arunachala வில்:

எனக்கு பெரும் பொக்கிஷமொன்று கிடைத்து விட்டது, வெறொன்றும் தேவையில்லை எனக்கு இனி, இந்தியாவின் கடைசி எஞ்சிய சில ஆன்மிக ஞானி ஒன்றைக் கண்டுபிடித்து விட்டேன், ஒளி பொருந்திய திருவண்ணாமலை முனிவர் இவர். எப்படி இந்தியாவில் கவித்துவமாக குரு-சிஷ்ய பாவத்தில் ‘அவர் பாதத்தில் அமர்ந்து’ என்று சொல்வார்களோ அப்படி அவர் பாதத்தில் அமர்ந்து அனுபவபூர்வமாக ‘ஆத்ம ஞானம் அடைந்த, இறப்பில்லாத ஒருவர்’ எப்படி இருப்பார் என்பதை உணர்ந்தேன். இதை விட பரிதாபத்திற்குரிய மாந்தராகிய நமக்கு வேறென்ன பொக்கிஷம் வேண்டும்?

கடலுக்குடையே இருக்கும் ஒரு பெரும்பாறை போல காலைக் குறுக்காக மடித்து இம்மஹரிஷி அசைவற்று இருக்கிறார். நாம் முட்டாள்தனமாக ‘இவர் தன் தினப்படி வாழ்வில் ஒன்றுமே செய்யவில்லை போலும்’ என்று நினைக்கிறோம், அதையெல்லாம் தாண்டிய உன்னத நிலையில் அவர் இருக்கிறார் என்பதே அறியாமல்.

“துன்பம் ஒருவனைத் தன் படைப்பாளியின் பால் திருப்புகிறது” என்றார் மஹரிஷி. வெகு எளிதான வார்த்தைகள், ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம் இதில் அடங்கியிருக்கிறது! இவை வழக்கொழிந்து போனவையாகத் தோன்றலாம், ஆனால் அவை வருவது யாரிடமிருந்து என்றால் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத ஆன்மிக எல்லைகளைத் தொட்ட, கடவுள் இருக்கும் இடத்தைப் பார்த்தவரிடமிருந்து அல்லவா வருகிறது!

The Note Books of Paul Brunton (vol. 10) இலிருந்து:

ரமண மஹரிஷி போல இப்பூமியில் அவ்வவ்போது தோன்றுபவர்கள் தனித்துவம் பெற்றவர்கள், அவர்கள் அவர்கள் தான், யாருடைய நகலும் அல்ல. மஹரிஷியின் நேர் முன்னால் இருக்கையில் அவர் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்தவர் போலவோ, நம் இனத்தைச் சேராது வேறேதோ ஒன்றைப் போலவோ தோன்றுகிறது.

எல்லையற்றதை நோக்கிக் கொண்டிருக்கும் மஹரிஷியின் விழிகளைக் காண்கையில் அரிஸ்டாட்டில் சொன்னது நினைவுக்கு வருகிறது, “நாம் அழிவற்றவர்கள் போல வாழ்வோம்” என்பது. இம்மனிதர் அரிஸ்டாட்டில் சொன்னதை ஒருவேளை கேள்விப் பட்டிருக்க மாட்டார். ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

The Silent Power புத்தகத்திலிருந்து:

(i) மேலான சக்திக்கு ஒரு உன்னத வழி: மஹரிஷியை சந்தித்து நாற்பது வருடங்கள் கழிந்து விட்டன, அவருடைய இடத்திற்குள் நுழைந்தது, சோபாவில் பாதி சாய்ந்தும் பாதி அமர்ந்துமாய் இருந்த நிலையில் அவரைக் கண்டது. இத்தனை காலத்திற்குப் பிறகு நிறைய விஷயங்கள் முற்றிலும் மறந்து விடுவது இயல்பு. ஆனால் நானறிந்த வரையில் உண்மையைச் சொல்கிறேன், எனக்கு இவை எதுவுமே மறக்கவில்லை. மாறாக, அந்த முகம், அதன் உணர்ச்சி, அவ்வுருவம், சூழ்நிலை, இவை அனைத்தும் ஏதோ இப்போது கண்டது போல மிகத் தெளிவாக இருக்கிறது. அதைவிடவும் எனக்கு முக்கியமானது என்னவெனில் – என் தினப்படி தியானங்களிலாவது – அவருடைய ஒளிமிக்க பிரத்யக்ஷம் நிஜமாகவும் உடனடியாகவும், அன்றைய தினத்தில் எவ்வாறு கிடைத்ததோ அதே போல இன்றளவிலும் தொடர்கிறது.

நான் கண்டறிந்த மேலை, கீழை நாடுகளின் கணக்கிலடங்கா யோகிகள், அசாதாரணமானவர்களில் என்னுள் இத்தனை தாக்கத்தை மஹரிஷி ஒரு சாதாரண யோகியாய் இருந்திருந்தால் ஏற்படுத்தியிருக்க முடியாது. மஹரிஷியை யார் எப்படிப்பட்ட நிலையில் வைத்திருந்தாலும் என்னுடைய நிலைப்பாடு சார்பற்றது, தன்னிச்சையானது. இந்நிலைப்பாடு மஹரிஷியைப் பிறர் அறிவதற்கு வெகு முன்னரே இருந்து வருவது, புகழ் கொண்டு வரும் கூட்டம் அவரை அணுகும் முன் நடந்தது, அவருடன் நடந்த பல பிரத்யேக உரையாடல்களில் கண்டது. அவரை அப்போது சுற்றியிருந்த அணுக்கத் தொண்டர்களிடம் நடத்திய உரையாடல்களில் நேர்ந்த நிலைப்பாடு அது. இப்படி பலதரப்பட்ட தகவல்களின் பேரில் கிடைத்த ஒரே ஒரு தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட உண்மை இது – மஹரிஷி மேலான ஒரு சக்திக்கு ஒரு உன்னத வழி – என்பதே.

எந்தவொரு வெளித்தோற்றத்திற்கான சடங்கோ, வினோதமான பழக்கங்களோ இருந்ததே இல்லை, வெளித்தோற்றதுக்கு எதுவுமே நடக்கவில்லை. உலகாயதத்தில் ஊறாமலும், சந்தேகம், தர்க்கம் இவைகளினால் ஆட்படாமல் இருந்தவர்களுக்கு தம்மிடையே அவர் ஏற்படுத்திய குறிப்பிடத்தகுந்த உள் மாற்றத்தை நன்கு கண்டனர். அவர்களை அது மேன்மைப் படுத்தியது, தம்முடைய குறுகிய ‘தன்னுள்’ இருந்து ஒரளவேனும் வெளிக் கொணர்ந்தது.

(ii) ஆன்மிக டார்ச்: அவரை சமாதி நிலையில் கண்ட அன்றைய முதல் தினத்திலிருந்து எங்கு நான் சென்றாலும் என் நினைவுகள் திருவண்ணாமலையை நோக்கி ஒரு முஹம்மதியன் தொழுகையின் போது மெக்கா இருக்கும் திசை நோக்கித் திரும்புவதைப் போலத் திரும்பி விடும். இந்த குழப்படி மிகுந்த உலகத்தில் எனக்கென வெகு புனிதமான ஒரு இடம் உள்ளதென்பதை நான் அறிவேன்.

மஹரிஷியின் பாதத்தில் இருந்து மேலை நாட்டில் காத்து தாகத்துடன் இருக்கும் ஆன்மாக்களுக்கு ஒரு டார்ச்சை கொண்டு சென்றேன். அவ்வொளியை அவர்கள் வெகு ஆர்வத்துடன் வரவேற்றனர். இதில் என் செயல் என்று குறிப்பிட எதுவுமேயில்லை, அம்மக்கள் அடைந்த உள் ஒளியானது மஹரிஷி ஏற்றி வைத்ததேயன்றி நான் முக்கியத்துவம் ஏதும் இல்லாத வெறும் தொடர்பு ஏற்றியவன், ஒரு தாழ்மையான மெசென்ஜர், தொடர்பாளன், அவ்வளவே.

தொடரும்…!

பதிவில் இருக்கும் படத்தின் மூலம், நன்றியுடன் – blog.daum.net

ரமண மஹரிஷியுடன் நான் – 2 – பால் ப்ரண்டன்

Read the second part of the English version here.

பின்வரும் நிகழ்வுகள் ப்ரண்டன் சில மாதங்கள் கழித்து இரண்டாம் முறை வருகை தந்து ஸ்ரீ ரமணருடன் தங்கியது பற்றியது.

இவ்விடத்தின் ஒரு வித மர்மமான சூழ்நிலை மற்றும் சாத்வீகமான அதிர்வலை மெல்ல ஆனால் சீராக என்னில் படருவதை கவனிக்கத் தவறியதேயில்லை, நான் என்ன செய்து கொண்டிருந்த போதிலும். மஹரிஷி முன் சும்மாவேனும் அமர்ந்திருந்த போதிலும் ஒரு பேரமைதி நிலவுவதை நன்கு அனுபவித்தேன். கவனத்துடனும் பல முறை ஆராய்ந்த பின்னரும் சந்தேகமில்லாத தெளிவு ஏற்பட்டது, ஒரு எப்போதெல்லாம் இவரின் சமீபம் ஏற்படுகிறதோ அப்போது ஓர் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகிறது. அது வெகு செளகரியமாயும், எவ்வித சந்தேகங்களுமின்றி இருக்கிறது. என் பகுத்தாராயும் அறிவுக்குப் பல மடங்கு பெரிதான ஓர் சக்தி என்னை அதில் வியப்பிலாழ்த்தி கடைசியில் மூழ்கடிக்கிறது. ஒரு முடிவில்லாத விளையாட்டின் அங்கமே என் கேள்விகள் என்ற விழிப்புணர்வு உண்டாகிறது, முடிவில்லாத எண்ணங்கள், என்னுள்ளேயே ஒரு தெளிவான கிணறு இருக்கிறது, அது என் எல்லா தாகங்களுக்கும் ஏற்ற தண்ணீரைத் தரும் ஆதலால் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு என் சுயத்தின் நிஜ ஸ்வரூபத்தை அறிய முற்பட்டேனானால் போதும். எனவே நான் அமைதியாகக் காத்திருக்கிறேன்.

எனக்கு மற்றொன்றும் நன்கு தெரியும். என்னுள் திடீரென்று வியாபித்திருக்கும் இந்த உயர்ந்த அனுபவம் இம்மர்ம மனிதரிடத்திலிருந்தே வரும் ஒரு சிற்றலை தான். மஹரிஷி என்னிடம் ஒரு முறை சொன்னார், “மனிதனிடத்தில் இருக்கும் பெரிய தவறு என்னவெனில் அவன் தன்னை வலிமையற்றவன், பாவி என்று எண்ணிக் கொள்வது தான். ஒவ்வொரு மனிதனும் புனிதன், அளப்பறிய சக்தியுடையவன். வலிமையற்றதும் கொடியதுமானவை அவனது பழக்கங்கள், ஆசைகள் மற்றும் எண்ணங்களே, அவை அவனல்ல!” – இச்சொற்கள் புத்துணர்ச்சியைத் தூண்டுவதாய் இருந்தன. இவை வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் ஏற்றுக் கொண்டே இருக்க மாட்டேன், மாறாக அதை மறுத்து வாதிடவும் செய்வேன். ஆனால் என்னுள் ஒன்று இம்முனிவர் சொல்வது தம்முள் ஆழ்ந்திருந்த ஆன்மிக அனுபவங்களின் சாரமாக அன்றி ஏதோ ஒரு தத்துவ ஞானி தன் கருத்தை எடுத்து விடுவதாகத் தோன்றவில்லை. மஹரிஷியின் வாழ்வு பெரும்பாலான மேலை நாட்டினருக்கு ஏதோ வீணடிக்கப் பட்டதாய் தோன்றாது, இம்மாதிரி ஒருவர் முடிவற்ற சுழற்சி போன்ற நம் வாழ்வை தூரத்தில் இருந்து பார்த்து அலசுவது வெகு நன்மையாய் இருக்கும். கானகத்தில் இருக்கும் தன்னை வென்ற ஒரு முனிவர் உலகாயதத்தில் சுழலும் ஒரு முட்டாளை விட எவ்வளவோ மேலானவர்.

ஒவ்வொரு நாளும் மஹரிஷியின் ஆன்மிக மேதமை பற்றிய புரிதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவரின் அமைதியும் மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பது பழகி விட்டது. ஒரு நாள் முழுதுமாய் அவர் பேசும் வார்த்தைகளை எண்ணி விடலாம்.

நான் கவனித்த மற்றொரு விஷயம், மஹரிஷியின் வழிமுறை பண்பட்ட, புண்பட்ட ஆத்மாக்களுக்கு மெளனத்தின் மூலம், சீரான, தடங்கலற்ற அருட்பேரினை என்பதையும் கவனிக்க முடிந்தது. என்றாவது ஒருநாள் அறிவியல் இந்த மர்மத்தை விவரிக்கலாம்.

அவருடைய வெறும் இருப்பே பலருக்கும் ஆன்மிக உத்தரவாதத்தை, உற்சாகத்தை, நம்பிக்கையைத் தந்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக எந்த நம்பிக்கையைப் பின்பற்றுவோரும் இவரிடம் தம் நம்பிக்கை பற்றிய புதிய புரிதலும் பற்றும் ஏற்படுகிறது. அவருக்கு எல்லோரும் ஒன்றே, க்றிஸ்துவை க்ருஷ்ணருக்கு எவ்விதத்திலும் குறைவாக மதிப்பிடுவதில்லை அவர்.

மஹரிஷியின் அருகாமையில் தியானம் செய்யும் போது என் எண்ணங்களை மனதின் புதிய ஆழத்திற்கு செலுத்துவதைக் கற்றேன். இப்படி ஓய்வாக அமர்ந்திருக்கும் சமயங்களில் என் மனதினை அவர் தன் வளிமண்டலத்தின் பால் ஈர்ப்பது எனக்கு மறுபடி மறுபடி புலனாகியது. இம்மாதிரி தருணங்களே இவருடைய மெளனம் இவர் பேசுவதை விட எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் இந்த சக்தியானது எவ்வளவு பெரியது என்றால் அவர் என்னிடம் மிகுந்த சங்கடமளிக்கும் எதையாவது உத்தரவிட்டாலும் அதை செவ்வனே செய்து முடித்து விடுவேன். ஆனால் மஹரிஷி தன்னிடம் கீழ்ப்படியும் கூட்டத்தை உருவாக்குவதில் சிறிதளவும் நாட்டம் கொள்ளவில்லை, மாறாக அனைவரிடத்திலும் அளவற்ற சுதந்திரத்தையே விரும்பினார். இவ்விதத்தில் இந்தியாவில் நான் சந்தித்த பல ஆசான்கள், யோகிகளிடத்திலும் இவர் முற்றிலும் வேறுபடுகிறார்.

அவர் கூற்று இது தான்: “நான் யார்?” என்ற விசாரத்தை இடைவிடாது மேற்கொள். உன் சுயத்தை முற்றிலும் அலசு. உன்னுள் எங்கிருந்து அந்த ‘நான்’ எழுகிறது என்று பார். தியானம் மேற்கொள், கவனத்தை உள்நோக்கித் திருப்பு. அந்த உள்ளுணர்வைப் பின்தொடர், எண்ணம் மறையட்டும், மறைந்து உன்னை உன் இலக்கினை அடையச் செய்யும்.”

நான் என் எண்ணங்களினால் அலைக்கழிக்கப் பட்டு பின் மெள்ள என் மனதின் ஆளத்தினுள் செல்ல ஆரம்பித்தேன். மஹரிஷியின் அருகாமையின் பலத்தால் என் தியானங்கள் களைப்படைதல் குறைவாகவும் பயன் அதிகமாகவும் உருவெடுத்தன. ஒரு தொடர்ந்த எதிர்பார்ப்பும், வழிநடத்தப் படுகிறோம் என்ற நினைவும் என்னுடைய முயற்சிகளுக்கு வெகு உற்சாகமளிப்பதாய் இருந்தன. சில வித்தியாசமான நேரங்களில் உணரமுடியாத மஹரிஷியின் சக்தி என்னை நன்கு பாதிப்பதையும், அதன் விளைவாக என் சுயத்தை சுற்றியுள்ள எல்லைக்கோட்டை இன்னமும் ஆழமாக துளைக்க முடிந்தது.

இவரை நன்கு கவனிக்கையில் ஏதோ முன்காலத்தில் தங்கச் சுரங்கத்தைக் கண்டது போல ஆர்வமடைந்த குழந்தை போல் தெரிகிறது. ஏதோ தென்னிந்தியாவின் ஒரு மூலையில் ஆரவாரமற்ற இந்த சிற்றூரில் என்னை இந்தியாவின் ஆன்மிக பெரியோர்களில் கடைசியில் ஒருவரிடம் சேர்த்து இருப்பது மெள்ளத் தெளிவாகிறது. இம்மஹரிஷியின் இருப்பு இம்மாபெரும் நாட்டின் பண்டைய ரிஷிகளை என் அருகே கொணர்ந்தது போல் உள்ளது. இவரின் மிக அற்புதமான இயல்பில் ஒன்று மறைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இவருடைய ஆழமான ஆன்மா, பார்ப்போரை இவர் உயர்ந்த ஞானத்தின் இருப்பிடம் என்று உடனே நம்பவைக்கும். சில சமயங்களில் இவர் ஏதோ ஒரு தொலைவிலிருப்பது போல் தோன்றுகிறார், சில சமயங்களில் இவருடைய ஊடுறுவும் பார்வை என்னை இரும்பு கிராதி போலக் கட்டி வைக்கிறது. என்னை நான் இவரிடத்தில் சரணடைய கற்கிறேன். எனக்கு இவரை மிக மிக பிடித்துப் போனதன் காரணம் இவருடைய எளிமை, அடக்கமான இருப்பு, இருப்பதிலேயே மிகவுயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாய் இருந்தும் இவர் இந்தியர்களை மிகவும் கவரும் சித்துகளையோ சித்தாந்தங்களைப் பற்றிய வியாக்கியானங்களையோ தருவதில்லை, மேலும் தன்னை முன்னிலைப் படுத்தும் எந்த செயலையும் இவர் செய்வதில்லை.

எனக்குத் தோன்றுவதெல்லாம், மஹரிஷியைப் போன்றவர்கள் சுலபத்தில் எல்லோருக்கும் கிடைக்காத, தொன்று தொட்டு வரும் தெய்வீக செய்தியொன்றை தரும் பணியைச் செய்ய வருபவர்கள். மேலும் இம்மாதிரி முனிவர் நமக்கு எதையோ வெளிப்படுத்த்வே வருகிறார்கள், நம்மிடம் எதையும் விவாதிக்க அல்ல! எப்படி இருப்பினும், இவருடைய போதனைகள் எனக்கு வெகு ஏற்புடையதாய் இருக்கிறது. இவர் எந்த அமானுஷ்ய சக்தியையோ குருட்டு நம்பிக்கையையோ வேண்டுவதில்லை. முக்கியமாக, இவர் பலரும் முயன்று, பிரவேசித்து சின்னா பின்னமான சித்து வேலைகளை அறவே தவிர்க்கிறார். இவர் சொல்லும் முறை தன்னாய்வு, எல்லோராலும், எங்கேயும், பழைய, புதிய என்று எப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்டவராயிருப்பினும் பின்பற்றக் கூடிய முறை, இதன் மூலம் ஒருவரால் தன் நிஜமான இயல்பை கண்டுகொள்ள முடியும். நான் மறுபடி மறுபடி உணர்வது இதைத்தான், மஹரிஷியின் மனதானது என் மனதுடன் தொடர்பு கொண்டு எதையோ தருகிறது, எங்களுக்கிடையில் எந்தவொரு வார்த்தைப் பரிமாற்றமும் இல்லாத போதும்!

ஆன்மிக ரீதியில் என் வாழ்வு அதன் உச்சத்தை எட்டுகிறது. நான் ஹாலுக்குள் நுழைந்து உடனே தியானம் செய்யும் நிலையில் அமர்கிறேன். கண்களை மூடிய உடனே அடர்த்தியான உள்நோக்கிய உணர்வொன்று என்னை வியாபிக்கிறது. என் மனக்கண்ணுக்கு முன் அமர்ந்திருக்கும் மஹரிஷியின் உருவானது மிகத் தெளிவாக மிதக்கிறது. அவருடைய மிக அருகாமையை உணர்ந்த நிலையை மட்டும் விட்டு விட்டு பின் அவ்வுருவம் மறைந்து விடுகிறது. இன்றிரவு மனங்குவிந்த நிலையை ஒரு சொடக்குப் போடுவதற்குள் அடைந்து விட்டேன். ஏதோ தடுக்கவியலாத புதிய சக்திமிக்க ஆற்றல் ஒன்று என் உள் உலகத்தினுள் என்னை அளவில்லாத வேகத்துடன் உள்ளெடுத்துச் செல்கிறது. அடுத்த கட்டத்தில் நான் என் மனதினை விட்டு, என் எண்ணங்களை விட்டு விலகிய நிலையில், நான் எண்ணுவதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெருமைக்குரிய, ஆனால் சாதாரணமான இயல்பான சிந்திப்பது என்பது இப்போது தப்பிக்க வேண்டிய ஒன்று என்பதையும், எப்படி அதனுள் நானே தெரியாமல் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அதிரவைக்கும் தெளிவுடன் கண்டு கொண்டிருக்கிறேன்.

ஏதோ அறிவு வேறு யாருடையது போல வெளியே நின்று அதன் ஒவ்வொரு செயலையும், எப்படி எண்ணம் உருவாகி பின் மறைகிறது என்பதைப் பார்ப்பது வெகு வினோதமாயிருக்கிறது. வேறொருவர் நம் மனதின் அடியாழத்தினுள் துளைத்து பார்க்க முடியுமென்பது அதை விடவும் வினோதம். ஏதோ ஒரு கொலம்பஸ் வந்து ஆளில்லா இடத்தில் தடாரென்று இறங்கப் போவது போலத் தோன்றுகிறது. கடைசியில் அது நடக்கிறது. நான் மிக அமைதியாக ஆனால் பெரும் உணர்வுடன் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவனாயும் இருக்கிறேன். என் உணர்வு நிலை குறுகிய ஒரு கூண்டுக்குள் இருந்து விசாலமான ஒன்றாக, அனைத்தையும் அணைக்கும் பேருணர்வாகத் தோன்றுகிறது. என் சுயம் என்பது இன்னமும் இருக்கிறது, ஆனால் அது மாறி விட்டிருக்கிறது, மிக மிக பிரகாசமான ஒரு சுயமாய் இருக்கிறது. இதனுடனுன் உணரப் பெறும் மாபெரும் சுதந்திரம் ஒன்று, இங்கும் அங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருக்கும் எண்ணம் என்பதே இல்லாமல் சிறையிலிருந்து வெளிவந்து சுத்தமான காற்றை சுவாசிப்பது போல ஒரு சுதந்திரம்!

உலகாயத ப்ரக்ஞைக்கு வெளியில் என்னை நானே கண்டுகொண்டேன். இதுகாறும் என்னைப் பேணி வந்த இப்பூமிக் கிரகமானது மறைந்து விட்டது. நான் ஒரு பெருங்கடல் போன்ற பேரொளிக்கு நடுவில் இருக்கிறேன். அவ்வொளிதான் முதற்பொருள், மற்றைய அனைத்து உலகையும் படைக்கும் முதற்பொருள் என்பதை நினைவற்ற நிலையில் உணரவே செய்கிறேன். இது விவரிக்க இயலாத முடிவேயில்லாத பெருவெளியில் வியாபித்து முற்றிலும் உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது. நான் ஒரு தெய்வீக இன்பத்தின் மடியில் இளைப்பாறுகிறேன். அமிர்தம் பருகியவன் போல நேற்றைய கெட்ட நிகழ்வுகள், நாளை பற்றிய கவலைகள் எல்லாம் மொத்தமாக மறைந்து விட்டன. நான் ஒரு தெய்வீக சுதந்திரத்தையும் விவரிக்க முடியாத பேற்றையும் அடைந்து விட்டேன். என் இருகரம் கொண்டு அனைத்தையும் அணைக்கத் தோன்றுகிறது. அனைத்தையும் அறிவது என்பது அனைத்தின் மேலும் அன்பைப் பொழிவது அல்லாது மன்னிப்பது அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறேன். என் இதயம் முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டுவிட்டது.

சந்தியாகாலத்தில் மஹரிஷியைத் தவிர அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். நிறைந்த ஒரு மனநிலை என்னுள், ஏனெனில் பகுத்தாராய்ந்து விடை காணுல் இயல்பை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையிடம் தொலைக்கத் தேவையின்றி என் ஆன்மிகத் தேடலின் போராட்டம் இனிதே வெற்றியடைந்தது. ஆனால் மஹரிஷி முற்ற்த்துக்கு வந்த போது என் நிறைந்த மனநிலை திடீரென்று மறைந்து விட்டது. இம்மனிதர் என்னை வினோதமாக வென்று விட்டார், இவரை விட்டு விலகுவது என்பது மிகுந்த வேதனைக்குரியதாய் இருக்கிறதே. இவர் என்னைத் தன் ஆன்மாவுடன் இரும்புச் சங்கிலிகளை விடவும் கடினமான வஸ்துவால் கட்டி வைத்து விட்டார், அதே சமயம் இக்கட்டு அடிமைத்தளை போலல்லாமல் மனிதனை விடுவிக்கச் செய்யும் செயலே. இவர் என்னை என் தெய்வீகம் தோய்ந்த சுயத்துள் எடுத்துச் சென்று எனக்கு உதவியிருக்கிறார், ஜடம் போன்ற மேலைநாட்டினனான எனக்கு அர்த்தமில்லாத ஒன்றை உயிர்ப்புடன், ஆனந்த அனுபவமாக்கியிருக்கிறார். என் சுய-பரிணாம மாற்றம் முடிவடைந்தது.

~ தொடரும்.

அடுத்த பதிவில் டாக்டர். பால் ப்ரண்டன் மஹரிஷியைப் பற்றி நிகழ்வுகளை தன் பல புத்தகங்களில் எழுதியிருப்பது பற்றிய தகவல்கள் இடம்பெறும்.

ரமண மஹரிஷியுடன் நான் – 1 – பால் ப்ரண்டன்

Read the English version of this story  here.

ரமண மஹரிஷியை பார்த்து, பேசி, தொண்டு செய்து, வாழ்ந்து, அவருடய பிரத்யக்ஷத்தின் அருகிலும் இருந்த புண்ணியசாலிகளின் மகத்தான அனுபவங்களின் தொகுப்பை வழங்கும் பேற்றினை ஞானபூமி வணக்கத்துடன் போற்றுகிறது. இவற்றில் தொனிக்கும் வியப்பும் பிரமிப்பும் படிப்பவரின் உள்ளத்தைக் கிளறி ஒரு மகோன்னதமான உணர்வைத் தோற்றுவிக்கும். மஹரிஷியின் ஞானம், தத்துவம் மற்றும் தெய்வீகத்தன்மை முதலியவையும் இதில் ஆங்காங்கே பளிச்சிடும்.

மூலம் – Face to face with Sri Ramana Maharishi, ரமண கேந்திரம், ஹைதராபாத்

1 – பால் ப்ரண்டன்

பிரிட்டிஷ் பத்திரிக்கைக்காரரான டாக்டர் பால் ப்ரண்டன் (1898-1981) பாரதத்தின் ஆன்மிகத்தின் பால் ஈர்க்கப்பட்டு 1930ல் இங்கு வந்தார். பதினோரு புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர் நம்முள் உறையும் ஆன்மா பற்றி குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். தியானத்தை வெளிநாட்டினருக்கு அறிமுகம் செய்தவர் என்று பொதுவாக அறியப்படும் இவர், “ரமணர் மேலை நாட்டில் ஒளிக்காகக் காத்திருந்த ஆன்மாக்களுக்கு சென்றடைந்த ஆன்மிக டார்ச். அவ்வொளியை கொண்டு சென்ற முக்கியத்துவம் ஏதும் இல்லாத வெறும் கேரியர் மட்டுமே நான்” என்கிறார். The Paul Brunton Philosophic Faoundation, நியூயார்க் அவர் காலத்திற்குப் பிறகு அவர் எழுத்துக்களை 16 பகுதிகளாகப் பதிப்பித்தது. இவருக்கு அமெரிக்காவின் ரூஸ்வெல்ட் காலேஜ் தத்துவத்தில் டாக்டரேட் பட்டமும் தந்து கெளரவித்தது.

தம்முடைய முதல் வருகையின் போது பால் ப்ரண்டன் பல்வேறு சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்துப் பின் ரமணரையும் சந்தித்தார். (மஹரிஷியை சந்திக்கும் முன் பால் காஞ்சிக்குச் சென்றதாயும் மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவரிடம் மறுபடி மறுபடி திருவண்ணாமலை சென்று ‘பால ஸ்வாமி’ யை சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும் சொல்வர்). மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு அருகில் ஒரு குடிலில் தங்கிய பால் ப்ரண்டனுக்கு அச்சமயங்களில் வருகை தரும் மக்கள் கூட்டம் வெகு குறைவாக இருந்ததால் மஹரிஷியிடம் நிறைய அளவளாவ முடிந்தது. மஹரிஷியின் தெய்வீகத் தன்மை, அதன் பாதிப்புகள் குறித்து உணர்ச்சிமயமற்ற, சார்பற்ற, நெருங்கிய, ஒளியேற்றக் கூடிய வகையில் A Search in Secret India வில் குறிப்பிடுகிறார்.

“இவரிடம் உள்ள ஏதோ ஒன்று என் சிந்தையை இரும்புக் கிராதிகளை ஈர்த்து இருக்கும் காந்தம் போல பிடித்து வைத்திருக்கிறது. என்னால் அவரிடம் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. என் மனதினுள் ஏற்படும் அமைதியான, ஆனால் எதிர்ப்புகளற்ற மாற்றத்தை நான் நன்கு உணர்கிறேன். ஒன்றின் பின் ஒன்றாக நான் வெகு ஜாக்கிரதையாக கோர்த்து வைத்து தொடுக்கவிருந்த கேள்விகள் அனைத்தும் வீழ்ந்து போகின்றன. அமைதி என்னும் ஆறு ஒன்று எனக்கருகில் சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

என் சுயத்தினுள் ஒரு பேரமைதி ஊடுறுவிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன். எண்ணக் குப்பைகளால் முட்டி மோதப்பட்ட என் மூளை ஓய்வை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு திடீர்த் தெளிவு ஏற்பட்ட எனக்குள் ‘அறிவானது தானே ஒரு பிரச்சினையத் தோற்றுவித்துக் கொண்டு அதனைத் தீர்க்க அதுவே படாத பாடு படுவதை’ பார்க்க முடிந்தது. சிந்தித்து, ஆராய்ந்து தெளிவு பெறும் சுயஅறிவு பற்றிய மிக உயர்ந்த எண்ணம் உடைய என் போன்றவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பிட்டு சொல்லக் கூடியதாய் இருக்கிறது.

மெள்ள ஆழமாகிக் கொண்டிருக்கும் அவ்வமைதியிடம் நான் சரணாகதி அடைகிறேன். மனம் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சினைகள் என்னும் சங்கிலி உடைத்துத் தூர எறியப் பட்டுவிட்டதால் காலப் பிரமாணம் என்னுள் எவ்வித எரிச்சலையும் தோற்றுவிக்கவில்லை.

மெள்ள மெள்ள ஒரு கேள்வி மேலெழுகிறது. ஒரு மலரானது தன் இதழ்களிலிருந்து வெளிப்படுத்தும் சுகந்தம் போல இவர், இந்த மஹான், தன்னிலிருந்து இந்த ஆன்மிக அமைதியை வெளிப்படுத்துகிறாரா?! அலைக்கழிந்து கொண்டிருந்த என் ஆன்மாவை ரேடியோ ஆக்டிவிட்டி போல, டெலிபதி போல தொடர்பு கொள்ளும் இந்த அசைவற்ற அமைதி இவரிடம் இருந்துதான் வருகிறதோ என்று எண்ணி வியந்திருந்தேன். இவ்வமைதி என்னை மூழ்கடிக்கிறது, என்னுள் மூழ்குகிறது.

மஹரிஷி திரும்பி என் முகத்தை, என் முகத்தினுள் நோக்குகிறார். நான் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் அவரை பதில் நோக்குகிறேன். அந்தக்கணம் என் இதயம், மனதினுள் வெகு வேகமான, ஒரு மர்மமான மாற்றம் உருவாகிக் கொண்டிருப்பதை உணரத்தொடங்குகிறேன். இதுநாள் வரை ஒட்டிக்கொண்டிருந்த பழைய காரணகாரியங்கள் விலக ஆரம்பித்தன. எங்கெங்கெலாமோ என் கால்களை அலைய வைத்த பல்வேறு ஆசைகள் வெகு வேகமாக மறையத் தொடங்கியிருந்தன. என்னை செலுத்தி வந்த என் விருப்பு வெறுப்புகள், தப்பர்த்தங்கள், சுயநலம், அனைத்தும் சூன்யத்தில் மறைந்தன. இனங்கானமுடியாத ஓர் அமைதி என்னில் படர்ந்தது. வாழ்வில் இதற்கு மேல் வேண்டுவது ஒன்றுமில்லை என்பதை நான் நன்கறிந்தேன். 

இம்முனிவர் ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கிறார், ஆனால் என்னால் அது என்ன என்பதை தீர்மானமாக சொல்ல முடியவில்லை. அது ஸ்தூலமன்று, எண்ணத்திற்குள் அடங்காததும் கூட, ஒருவேளை ஆன்மிகமாயிருக்கலாம். அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு ப்ரத்யேக உணர்வு என்னை துளைத்து என் இதயத்தை தெளிவில்லாத ஆனால் ஒரு மிகவுயர்ந்த எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கிறது.

நான் முனிவரை நோக்குகிறேன். அவர் மாபெரும் ஒரு உயரத்தில் அமர்ந்து வாழ்க்கை என்பதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் இதுவரை சந்தித்த அனைவரிடமும் இல்லாத ஒரு மர்மமான ஒன்று இவரிடம் உள்ளது. ஆண்டாண்டுகளாக இவருடன் இருக்கும் பல அடியார்கள் சூழ்ந்துள்ள போதிலும் அவர் அனைத்திலிருந்தும் விடுபட்டு தனிப்பட்டு இருக்கிறார். சில சமயங்களில் எனக்கு இவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதராக இருக்கக் கூடாதா, நம்மால் கணிக்கக் கூடிய ஒரு எல்லையில் இருக்கக் கூடாதா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறது.

அது ஏன் இவரின் அருகாமையில் எனக்கு ‘ஏதோ ஒரு மகத்தான் வெளிப்படுத்தல் ஏற்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தோன்றிக் கொண்டே இருக்கிறது? இம்மாமனிதர் தம்மை அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டார். யாரும் இவரைத் தொட முடியாது. இவர் பேசுகையில் தத்துவாச்சாரியார் போலவோ, ஏதோ கொள்கையை விவரிக்கும் பண்டிதர் போலவோ அல்லாமல் தன் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுகிறார்.

நான் ஆஸ்திகனல்ல, ஆனால் ஒரு வண்டு நன்கு மலர்ந்த தேனுடைய மலரில் இருந்து தன்னைத் தானே நிறுத்திக் கொள்ள முடியாதோ அது போல மெள்ள அதிகரிக்கும் ஒரு வியப்பு என் மனதைக் கெளவுவதை தடுக்கவே முடியவில்லை. அவர் அமர்ந்திருக்கும் அறையில் சூழ்ந்துள்ள ஒரு சக்தியானது என்னை வெகு ஆழமாக பாதிக்கிறது. என்னால் ஒன்றை உறுதியாக, எந்த சந்தேகமும் தயக்கமுமின்றி கூற முடியும், இந்த சக்தியின் ஊற்று மஹரிஷியைத் தவிர வேறெங்கிலும் இருந்து வரவில்லை.

அவர் கண்களில் தென்படும் ஒரு அசாதாரணமான ஒளி என் மனதில் வியத்தகு உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது, இவரால் என் இதயத்தில் பார்க்க முடிந்தது எல்லாம் எனக்குத் தெரிகிறது. அவருடைய ஆழ்ந்த பார்வை என் எண்ணங்களை, உணர்வுகளை, ஆசைகளை ஊடுறுவுகிறது, என்னால் ஏதும் செய்ய முடியவில்லை அதன் தீர்க்கத்தின் முன்னால்.

முதலில் அப்பார்வை சிறிது சங்கடப் படுத்துகிறது, இவர் நானே மறந்த என் கடந்தகால பக்கங்களைப் பார்க்கிறார் என்று உணர்கிறேன். எனக்கு நிச்சயம் தெரியும், இவர் அனைத்துமறிவார். என்னால் தப்ப முடியாது, ஏனோ நான் தப்ப விரும்பவும் இல்லை. இவர் என் மனதை தன்னுடன் இணைக்கிறார், என் இதயத்தை தான் எப்போதும் இடைவிடாது அனுபவிக்கும் அந்தப் பேரமைதியை அனுபவிக்கத் தூண்டுகிறார். இப்பேரமைதியில் நான் லேசானதாகவும் உயர்ந்த நிலையிலும் இருப்பதை உணர்ந்தேன். காலநேரம் என்பது அசையாது நின்றுவிட்டது. இதயமானது விடுதலையடைந்து இருக்கிறது. இனி ஒருபோதும் நான் கோபம், தீராத ஆசையினால் விளையும் துன்பம் என்பது என்னைத் தீண்டாது. என் மனது மஹரிஷியில் ஆழ்ந்து விட்டது, எனவே ஆத்மானுபூதி என்பதை மட்டுமே அது உணரும். என்ன ஒரு பார்வை இவருடையது? மந்திரக்கோல் கொண்டு அசைத்தது போல மகத்தானதொரு ஒரு உலகை என் ஊனக்கண்ணுக்குக் காட்டி விட்டாரே!

மஹரிஷியுடன் பல வருடங்களாக இருக்கும் அடியார்கள் அவருடன் எப்படி வெகு குறைவான வார்த்தை பரிமாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளார்கள் என்று என்னையே நான் பலமுறை கேட்பதுண்டு, குறைவான செளகரியம், வெளிப்புற செயல்பாடுகள் ஏதும் இல்லாத போது எப்படி அது என்று. ஆனால் இப்போது புரிகிறது, எண்ணங்களால் கூட அல்ல, இவர்கள் அனைவரும் ஒளியேற்றப்படுகிறார்கள் – இத்தனை ஆண்டுகளாக இவர்கள் அனைவரும் அமைதியான ஆனால் ஆழமான பலன்களை அனுபவித்து வருகிறார்கள், பாக்கியசாலிகள்.

இதுவரை ஹாலில் இருந்த அனைவரும் மரணித்தது போன்ற அசைவற்ற நிலையில் இருந்தார்கள். எப்போவாவது யாரேனும் எழுந்து வெளியே செல்வதுண்டு, ஒருவர் செல்ல, பின் மற்றொருவர் சிறிது கழித்து, இப்படியே அனைவரும் சென்றுவிட்டனர். இப்போது நான் மட்டும் மஹரிஷியுடன்! இப்படி இது வரை நடந்ததேயில்லை. அவர் பார்வையில் ஒரு மாற்றம். எப்படி காமிராவின் லென்ஸ் குவிந்து பின் ஓரிடத்தில் நிலைத்து நிற்குமோ அப்படி என்னில் நிலைத்து விட்டது. ஏறக்குறைய மூடிய நிலையில் இருக்கும் இமைகளின் நடுவில் இருந்து ஒரு தீர்க்கமான தீக்ஷண்யம், சல்லென்று அதிகரித்தது. திடீரென்று என் உடம்பு மறைந்து விட்டது, நாங்களிருவரும் அண்ட வெளியில் இருக்கிறோம்!

இது ஒரு முக்கியமான தருணம்! நான் தயங்குகிறேன், இந்த நிலையை துண்டித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன். அம்முடிவு சக்தியளிக்க இதோ மீண்டும் சதைப்பற்றுள்ள நான், அதே ஹாலில். ஒரு வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை. நான் முயன்று, பின் எழுகிறேன் அமைதியாக. கிளம்பும் சமயம். அவருக்குத் தலை வணங்கி விட்டு வெளியேறுகிறேன்.

~ தொடரும்

சாத்தானின் கூடாரம் மிஷ நரிகளே!

முருகன் என்ற பெயரிலிருந்து மதமாற்ற வியாபாரத்தில் விலைபோய் மோகன் லாசரஸ் என்று பெயர் மாற்றம் கொண்ட அடிமை ஒன்று சமீபத்தில் இந்துக்களுடைய கோவில்கள் சாத்தானின் கூடாரம் என்று கொக்கரித்து இருந்தது. பொதுவாக இந்த சில்லறைகளை இந்துக்கள் பொருட்படுத்துவதில்லை, ஞானபூமியிலும் இவ்வகை கட்டுரைகள் வருவதில்லை. ஆனால் அமைதியாக இருப்பது என்பது அடிக்க அடிக்க வாங்கிக் கொண்டிருப்பதல்ல என்பதும் இந்துக்கள் இம்மாதிரி பிதற்றல்களை இனியும் வாய்மூடி மெளனிகளாய்க் கேட்டுக் கொண்டிருப்பது தகாது என்பதாலும் விளைந்த கட்டுரை இது.

இந்துக்களின் ஒவ்வொரு பழக்கத்தையும் வெறும் ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கூட்டத்துக்கு கோவில்களின் அறிவியல்பூர்வமான அமைப்பு, அதனுள் இருக்கும் உயிர்சக்தி போன்றவை தெரியாது என்பது ஆச்சர்யமேயில்லை. வாஸ்துப்படி, நல்ல நேரம் குறித்து, பூரண கும்பமெல்லாம் வைத்து சர்ச்சுக்கான அடிக்கல் நாட்டியதில் இருந்து, தேரோட்டம் போன்ற இந்துக்களின் வழக்கத்தை அப்படியே பின்பற்றுவதும், சர்ச்சில் த்வஜஸ்தம்பம் வைப்பது போன்ற உச்சகட்ட காமெடிகளை அரங்கேற்றுபவர்களையும் பார்த்து இந்துக்கள் மட்டுமல்ல, க்றிஸ்துவின் போதனைகளை உண்மையாக கடைபிடித்து வரும் க்றிஸ்தவர்களும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவில்கள் சாத்தானின் கூடாரம் என்ற உளறலை க்றிஸ்தவர்களே ஏற்கவில்லை, இணையத்தில் கிழித்து நாறடித்து விட்டார்கள். ஆனால் சாத்தானின் உண்மையான ‘கூடாரம்’ எங்கே என்று தெரிய வேண்டாமா?

அ) எங்கெல்லாம் பேரிடர் நடக்கிறதோ அங்கே மனிதாபிமானம் கொஞ்சமும் இன்றி ‘அறுவடை செய்ய வேண்டும்’ என்ற கேவலமான அணுகுமுறை கொண்டவர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடம்.

ஆ) இயேசு முடவனைப் பார்க்கச் செய்கிறார்…ஊமையை நடக்கச் செய்கிறார் என்று அவர் மீது உச்சகட்ட கேலிகளை பிரச்சாரம் செய்பவர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடாரம்.

இ) இயேசு போதனை சி.டியை வயிற்றுவலி வந்தது போல பீலா விடும் ஒரு பெண்ணின் வயிற்றில் வைத்து ‘யேசுவின் பவர் இறங்கி வயிற்றில் இருக்கும் கட்டி மறைந்து விட்டது பாருங்கள்’ என்று தமிழ்நாடு மட்டுமல்ல, அகில உலக காமெடியர்களையே பிச்சையெடுக்க வைக்கும் காமெடியர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடாரம்.

ஈ) ‘ஆண்டவனுக்கு ஊழியம் செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டு மிஷநரிகள் தரும் பெரும் பணத்தில் வயிறு வளர்ப்பவர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடாரம். இயற்கையை வழிபடுபவர்களை சூனியக்காரர்கள் என்று உயிரோடு எரித்தது சாத்தானின் கூடாரம். ‘எங்கு காணினும் சக்தியடா’ என்று முழங்குவது சனாதனம்.

உ) கன்யாஸ்த்ரீகளை வன்கொடுமை புரிந்தும் எந்த விஷயமும் வெளிவராத வகையில் அமுக்கிப் போடுவதும் அப்படியும் அதிரிபுதிரியாய் ஏதாவது வெளிவந்துவிட்டால் பணத்தைக் கொண்டு அதை அடைப்பதும் பன்னெடுங்காலமாய் புரிபவர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடாரம்.

ஊ) ‘நான் கூறியவற்றை ஆராய்ந்து உன் இயல்பிற்கேற்றவற்றை ஏற்றுக்கொள்’ என்று கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனிடமும், இதற்கு மேல் பகுத்தறிவுடன் கேட்க முடியுமா என்று வியப்புற வைக்கும் உபநிஷதங்களும், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்று முழங்கிய வள்ளுவரும் தந்த சனாதனம் எங்கே, ‘தேவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்று வெட்கமில்லாமல் முதலிலேயே பயமுறுத்தும் கூட்டம் எங்கே? இதுவல்லவோ சாத்தானின் கூடாரம்?

எ) //கடவுள், மனிதனைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே சர்வசிருஷ்டிக்கும் ‘முந்தின பேறான’ தம் மகனைப் படைத்தார். அவரே பிறகு இயேசு என அழைக்கப்பட்டார். (கொலோசெயர் 1:15) அதன் பிறகு தேவதூதர்கள் எனப்படும் ‘தேவபுத்திரரை’ படைத்தார். (யோபு 38:4-7) அவர்கள் அனைவரும் பரிபூரணர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒரு தூதன் சாத்தானாக மாறிவிட்டான்.//

ஆக, கடவுளின் படைப்பு அப்பாடக்கர் ஆகிவிட்டது. இறைவன் முதலில் யேசுவைப் படைத்தாரேயானால் ஆதாம்-ஏவாள் ஆப்பிள் கதையான முதற்பாவம் செய்யத் தூண்டியது எந்த சாத்தான்? இந்தப் படைப்பு படைத்ததற்கே ஏழாவது நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டியதாயிற்று தேவனுக்கு. அப்படிப் பார்த்தால் சாத்தானின் கூடாரம் தேவகூட்டம் புறப்பட்ட இடத்திலேயே இருக்குதே ஷண்முகா, வேலாயுதா, என்னடா கொடுமை இது?

ஏ) Kill those who worship other gods – என்று உளறுபவர்கள் இருக்குமிடம் சாத்தானின் கூடம். ‘சர்வ ஜனா சுகினோ பவந்து’ என்று முழங்குவது சனாதனம்.

ஐ) கலீலியோ போன்ற அறிவியலாளர்களை மிரட்டி அறிவியலுக்குப் புறம்பானதை புத்தகத்தில் எழுதியிருப்பதாலேயே ஒப்புக் கொள்ள வைத்து நூற்றாண்டுகள் கழித்து ‘அபாலஜி’ விடும் இடம் சாத்தானின் கூடாரம். சில்ப, வான, கட்டிட சாஸ்திரங்கள் மிகுந்த கோவில்கள் அல்ல.

இன்னும் பல உண்டு. ஆனால் க்றிஸ்துவை நம்புபவர்களின் மனம் இதைப் படித்தால் புண்படக் கூடும் என்பதினால் இங்கே நிறுத்திக் கொள்கிறோம்.

சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை:

1) உங்களுடைய தர்மம் எதைப் போதிக்கிறது, என்ன சொல்கிறது, வேதோபநிஷதங்களின் சாரம் என்ன என்பதை ஆழமாகத் தெரிந்து கொள்ளுங்கள். வியாதியே போ என்றால் அது போய்விடாது, நீ பலம் பெற வேண்டும் என்று முழங்கிய விவேகானந்தர் கூற்றினை நினையுங்கள்.

2) உங்கள் தர்மத்தை நன்கு அறிந்து கொள்வதுடன் இம்மாதிரி ‘விலை போனவர்கள்’ உங்களை அணுகி குழப்ப முயன்றால் அவர்களிடம் என்ன கேட்பது எப்படி பதில் சொல்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அப்படிப் பேசுபவர்களிடம் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று சொல்லாதீர்கள். அவர்களின் வேலையே இது தான். அவர்களின் சேவை இங்கே தேவை இல்லை என்பதைப் புரிய வையுங்கள்.

3) க்றிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே ஞானத்திலே பர மோனத்திலே – உயர் மானத்திலே அன்னதானத்திலே கானத்திலே மிக உயர்ந்த பாரத நாட்டின் சனாதனிகள் நீங்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். உங்களை பொய்யைக் கொண்டு குழப்ப முயலும் வியாபாரிகளுக்கு விற்காதீர்கள்.

4) இறைவனை அடைய பல வழிகள் உண்டு என்று முழங்கிய நம் சனாதன் தர்மமே – அதே இறைவனை அடைவதில் பழ வழி, முது வழி என்பதையும் உணருங்கள்.

5) ஜாதி, இன மத வேறுபாடுகளைத் தூக்கித் தூற எறியுங்கள். நான்கு வேதங்களிலும் அப்படி எந்த பாகுபாடும் இல்லை. ஒன்றுபடுங்கள்.

6) வேறு ஏதாவது மதத்தைப் பற்றி இந்த விலைமகன் இவ்வாறு பேசியிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று சற்றே யோசியுங்கள். எந்த அளவிற்கு ஜடப் பொருள் போலவும் சுரணை ஏதுமின்றியும் இருக்கிறோம் என்பதை உணருங்கள்.

7) உங்களிடம் வந்து ஏதாவது அரைவேக்காட்டுப் புத்தகத்தைக் கொடுத்து படியுங்க, திருந்துங்க என்றெல்லாம் சொன்னால் மெதுவாக ஆனால் உறுதியாக அதனை அவர்கள் முன்னாலேயே கிழித்து, பக்கத்திலிருக்கும் குப்பையில் போடுங்கள், தெருவை ஏன் குப்பையாக்க வேண்டும்?

வெறும் எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்டன ஊர்வலங்கள் நடத்துவதும் இதனை நிறுத்தப் போவதில்லை. இதற்காக வன்முறையையோ கீழ்த்தரமான யுக்திகளையோ கையிலெடுப்பதற்கு நம் தர்மம் போதிக்கவில்லை. அது சொல்வது ஒன்றே – பலமே வாழ்வு, பலவீனமே மரணம் என்பதையே. பலம் பெறுங்கள். ஆன்ம பலம் பெறுங்கள். உங்கள் முன் தாய் திருநாட்டின் மகோன்னதமான தர்மம் தன் பரந்த வேர்களை எங்கும் பரவ விட்டிருக்கிறது. அதை உணருங்கள். அரை வேக்காடுகளின் கூவலுக்குப் பயப்படாதீர்கள்.