தமிழ்

ஜாதி – இந்துமதத்திற்கான சவுக்கடியா அல்லது வக்கிரபடுத்தப்பட்ட முறையான வேத கோட்பாடா? – 1

இக்கட்டுரையின் ஆங்கில மூலம் இங்கே காணவும். தள உரிமையாளர் குழுவிடம் அனுமதி பெற்றபின் ஞானபூமி நன்றியுடன் இதனைத் தமிழில் வெளியிடுகிறது.

ஜாதியப் பிரிவு என்பதின் உண்மையான காரணத்தை திரித்ததினால் இந்தியாவில் ஏற்பட்ட கலவரங்களுக்கு அளவேயில்லை – ஸ்டீஃபன் நேப்

அறிமுகம்

இந்தியாவின் ஜாதீயம் என்பது பல குற்றச்சாட்டுக்களைச் சந்தித்துள்ளது. தற்போது வழக்கிலிருக்கும் ஜாதீயம் என்பது இருக்கவே கூடாது என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. நாம் தற்போது பார்க்கும் ஜாதீயம் என்பது “வர்ணாஸ்ரமம்” என்ற வேத முறையை அப்பட்டமாகத் திரித்து, வக்கிரப்படுத்தி, மாசுபடுத்தப் பட்ட ஒன்றாகும். நம் தமிழ்நாட்டில் வர்ணாஸ்ரமம் என்றாலே ஏதோ தீட்டைக் குறிக்கும் சொல் மாதிரி தோன்றச் செய்திருப்பதும் இதன் விளைவு தான். ஆனால் நமக்கு உண்மை மற்றும் திரிபு இவற்றின் வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வதுடன் திரிபு வாதத்தை நீக்கி விட்டு உண்மையான, சுதந்திரமான போக்குடன் இருக்கும் வர்ணாஸ்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இன்றைய ஜாதீயம்

நாம் பார்க்கும் இன்றைய ஜாதீயம் என்பது பொருள்சார் முறையில் பதவி போல வகுக்கப்பட்டு சமூகத்தில் கீழான பிரிவில் வாழ்பவர்களை ஒடுக்கும் முறை ஆகும். இதன் முறைப்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி குடும்பத்தில் பிறந்து விட்டால், மாற்றம் எதுவுமின்றி அப்படியே இருந்தாக வேண்டும். பிறப்பே இதனை முடிவு செய்கிறது. மேலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும், உங்கள் குணாதிசயங்கள் போன்றவை உங்கள் பெற்றோரைப் போலவே இருந்தாக வேண்டும் என்ற பல நூறாண்டுகளாக வழக்கத்திலிருக்கும் ஒரு லேபிளை ஒட்டி விடுகிறது.

வேதம் என்பது நாலே நாலு தான். அவை ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள். மற்றவை புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அப்படி வேத முறைப்படி, நாலு பிரிவுகள் உண்டு ஜாதியில். அவை:

பிராமணர்கள் – வைதீக காரியங்கள், பூஜை, அர்ச்சகர்கள், வேத முறையை பாதுகாத்து, அவற்றைப் பின்பற்றி அதன் மூலம் ஆன்மிக விழிப்புணர்வை அடைய விழைபவர்கள் மற்றும் அறிவாளர்கள் என்பவர்களைக் குறிக்கும். உற்று நோக்கவும், பிராமணர்களாக ‘பிறப்பவர்கள்’ அல்ல.

க்ஷத்ரியர்கள் – போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள், அரசாள்பவர்கள் போன்றவர்கள்.

வைஸ்யர்கள் – வியாபாரிகள், தொழில் செய்பவர்கள், வங்கிப் பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்கள்.

சூத்திரர்கள் – தொழிலாளிகள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள் இப்படிப் பட்டவர்கள்.

தற்போதைய ஜாதீயம் சொல்வது – நீ பிராமணக் குடும்பத்தில் பிறந்து விட்டால் நீ பிராமணன் மட்டுமே, பிராமணனுக்கான எந்த குணாதிசயமும் உன்னிடம் இல்லாவிட்டாலும் சரி. நீ பிராமணன் தான் என்பது. அதே போல க்ஷத்ரியர், வைஸ்யர்கள் எல்லோரும் அப்படியே. டாக்டர் பிள்ளையாக நீ பிறந்து விட்டால் நீ டாக்டர் தான், யாரும் கேட்க முடியாது என்பது போல. ஆனால் டாக்டராவது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும், திராவிடக் கட்சிகளின் தலைமைக் குடும்பத்தில் பிறந்து விட்டாலே பதவிகள் வரும் என்பது வேண்டுமானால் சாத்தியம், ஆனால் உண்மையான டாக்டராவது அவ்வளவு சுலபமல்ல. வெறும் பிறப்பால் அமையப்படும் இந்த ஜாதீயம் எத்துணை உபயோகமற்றது என்பது இதிலிருந்தே தெரிகிறது.

ஆனால் முன் காலத்தில் பிராமணர்கள் மற்றும் சில உயர் ஜாதி பிரிவினர் தாம் கற்றவற்றை பிறருக்குத் தெரிவிக்காமல், தாங்களே வைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களின் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்வது நடந்திருக்கிறது. பல சீர்திருத்தவாதிகள், இவர்களில் பிராமணர்கள் உட்பட, கிருஷ்ண சைதன்யர் போல இவற்றை எதிர்த்தோ, பொருட்படுத்தாமலோ இருந்து வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் வர்ணாஸ்ரமம் என்பது பிறப்பால் ஏற்படுவது என்பது நிலைநாட்டப்பட்ட பொய்யாகி விட்டது.

உண்மையான வர்ணாஸ்ரமம் என்ன?

வேதங்களில் கூறியிருக்கும் வர்ணாஸ்ரமம் நான்கும் முறையான, நல்லொழுக்கத்தை புகட்டி, சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஏற்பட்டது. அதன் படி, வர்ணங்கள் நான்கும் சமூகத்தினரை அவர்தம் மனநிலை மற்றும் குணாதிசயங்களின் பால் வகுப்பது. நன்கு கவனியுங்கள், மனநிலை மற்றும் குணாதிசயங்களின் பேரில் ஒருவரின் வர்ணம் ஏற்படுகிறது (துரோணர் என்ற பிராமணர் ஏன் போர்க்கலை வல்லுநராய் தலைமை சேனாதிபதியாக இருந்தார் என்ற கேள்வி புலப்பட்டால் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்). ஒவ்வொருவருக்கும் இயற்கையாக சில குணாதிசயங்களும், ஒரு சார்பும், சில பல இயல்புகளும் இருப்பதைக் காண்கிறோம். இவை ஒருவர் தாம் பார்க்கப்போகும் வேலை என்னவென்பதை தான் தேர்ந்தெடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவையே வர்ணம் என்று அழைக்கப்படுகிறது. வர்ணம் என்றால் ஆங்கிலத்தில் கலர், இங்கே வர்ணம் என்பது அவரவர் குணாதிசயங்கள், விருப்பு, குறிப்பிட்ட சில வேலைகளுக்குத் தம் மனப்போக்கு இவைகளைக் குறிக்கிறது. எனவே வர்ணம் என்பது பிறப்பாலன்றி ஒரு மாணாக்கன் தன் வகுப்பில் காட்டும் இந்த இயல்புகளை ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டு, கணிக்கப் பட்டு ஏற்படுவது.

நம்மில் சிலர் உடலால் பிறருக்கு உதவுவதைக் கண்டிருக்கிறோம், அல்லது இசை, நாட்டியம் மூலமாகத் தன் இயல்பை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். சிலர் தொழில் புரிபவர்களாகவும், விவசாயம் செய்பவர்களாயும் இன்னும் சிலர் அரசுப் பணிகளிலும், ராணுவத்திலும் இருக்கிறார்கள். இவையெல்லாம் பிறப்பால் வருபவை அல்லவே. இந்த முறையே வர்ணாஸ்ரம முறையே அன்றி பிறப்பால் வருவதன்று. அதே சமயம், ஒருவர் பிறந்த குடும்பத்தில் குறிப்பிட்ட தொழில் அல்லது வேலையை அவர் தானாக எடுத்து இன்னமும் நன்றாகச் செய்வதும் உண்டு, அவ்வாறு அவர் மனநிலை ஒத்து இருப்பின் அவர் தம் குலத் தொழிலை தாராளமாகச் செய்யலாம்.

ஆசிரமங்கள் சமூகத்தை நான்காகப் பிரிக்கிறது. பிரம்மச்சாரிகள் (மாணவர்கள்), க்ருஹஸ்தர்கள் (குடும்பஸ்தர்கள்), வானப்ரஸ்தர்கள் (ஓய்வு பெற்றவர்கள், தன் வாழ்வில் பொருளீட்டும் குறிக்கோள் குறைந்து வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதில் நோக்கமுடையவர்கள்) மற்றும் சன்யாசிகள் (பொருளுலகை முற்றிலுமாகத் துறந்து ஆன்மிக செயல்களில் ஈடுபடுபவர்கள்). இன்னான்கும் மக்களை தங்களின் இயல்பின் பால் வேண்டுவதைத் தேர்ந்தெடுத்து அதே சமயம் ஆன்மிக வளர்ச்சியில் கவனம் கொள்ளவும் ஆவன செய்வது.

இதே வழியில் வர்ணாஸ்ரமம் ஒவ்வொருவரின் இயல்பின் பால் தம் வேலைகளை வகுத்துக் கொண்டு அதே சமயம் ஆன்மிக உயர்வுக்காக உழைக்கவும் விதித்து இருக்கிறது. ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் பள்ளியில் பயிலும் போதே மாணவர்களின் இயல்பினைக் கண்டறிந்து அவர்களின் போக்கின் பால் அவர்களுக்குக் கல்வியளிப்பது முறையிலிக்கிறது. எனவே டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற அவா சுத்தமாக இல்லாத டாக்டருடைய மகள் வேறு கல்வியினைத் தன்னியல்பின் பால் தேர்ந்தெடுப்பது பள்ளியில் இருந்தே தொடங்குகிறது. இது தான் வர்ணாஸ்ரமம்.

இதன் நோக்கம் ஒருவரின் நெற்றியில் லேபிள் ஒட்டுவதல்ல, தன் முனைப்புள்ள சுய-தேடலை ஊக்குவிப்பது. ஒருவர் எந்த மாதிரி வேலையில் ஈடுபட்டால் இயற்கையாகவே நன்கு பரிமளிப்பார் என்பதை அவர் இயல்பின் பால் தேர்ந்தடுக்க விடுவது.

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வது (4.13)

“நான்கு வர்ணங்களை ஒருவர் தம் மனப் போக்கு, குணாதிசயங்கள், இயல்பு சார்ந்து அவர் செய்யும் வேலையின் பால் பிராமண, க்ஷத்ரிய, வைஷ்ய, சூத்திரர் என்று என்னால் உருவாக்கப் பட்டது” என்கிறார் (BG 18.41)

மேற்சொன்ன கூற்றில் வர்ணம் பிறப்பு சார்ந்தது என்பது எங்கே இருக்கிறது? மேலும்..

“இவ்வகையினால் தேர்ந்தெடுக்கப்படும் வேலைகளின் மூலம் அனைவரும் மேன்மையடையலாம். அனைத்திற்கும் காரணமான, அனைத்திலும் வியாபித்து இருக்கும் பரம்பொருளை வணங்குவதாலும், தான் மேற்கொண்டுள்ள வேலையின் அல்லது கடமையில் இருந்து கொண்டே மேன்மையடையலாம். (BG 18.45-6)

~ தொடரும்

Featured image courtesy: ISKCON

தமிழ்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்

ஞானபூமி இக்கட்டுரையை அன்புடன் தந்தனுப்பிய திரு. ராமபத்ரன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நம்முடைய மதம் ஹிந்து மதம். இது வைதீக மதம் ஆகும். இதன் பொருள், வேதம்தான் நம் மதத்தின் அடிப்படை என்பதே. வேதம் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இருக்கின்றது. மற்ற மதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்டவரால் உருவாக்கப்பட்டது. உதாரணமாக புத்த மதம் புத்தரால் எற்படுத்தப்பட்டது. புத்தர் காலத்துக்கு முன்னால் அந்த மதம் இல்லை. ஆனால். நம் ஹிந்து மதமானது யாராலும் எற்படுத்தப்படவில்லை. காரணம் என்னவென்றால் வேதம் அபெளருஷேயம் (“अपौरुषेयम्”) – யாரும் வேதத்தை உருவாக்கவில்லை. ரிஷிகள் தங்கள் த்யானத்தில் வேத மந்த்ரங்களை உள்ளே தரிசித்து மக்களுக்கு கொடுத்தார்கள். ஆகவேதான் ரிஷிகளை மந்த்ர த்ரஷ்டா (मन्त्र द्रष्टा) அதாவது, “மந்த்ரத்தை பார்த்தவர்கள்” என்று சொல்வார்கள். வேதத்தை யாராலும் அழிக்கவே முடியாது. அவை ஒலி ஒளி அலைகளாக ஆகாயத்தில் எப்போதும் உள்ளன. எனவே தான் ஹிந்து மதத்தை அறிவியல் சார்ந்தது, ஆத்ம அறிவியலாவது என்று கொண்டாடுகிறார்கள்.

வேதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளது. அவை கர்ம காண்டம், உபாசன காண்டம் மற்றும் ஞான காண்டம். வேதத்தின் சிகரம் என்று எடுத்துக்கொண்டால் அது ஞான கண்டம் ஆகும். மற்ற இரண்டு காண்டங்களின் நோக்கமே ஞானத்தை அடைவதுதான். உபனிஷதங்கள் என்று சொல்லப்படும் வேதாந்த்ங்கள் எல்லாம், ஞான காண்டத்திலேயே உள்ளன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற பல்வேறு தத்வங்களை விளக்கிய, ஶ்ரீ சங்கரர், ஶ்ரீ ராமானுஜர், மற்றும் ஶ்ரீ மத்வர் ஆகிய மூவருமே, வேதத்தின் சாரம், உபனிடதங்கள்தான் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் இருந்தார்கள்.

இப்படிப்பட்ட வேதத்தின் சாரத்தை பகவான் ஶ்ரீ க்ருஷ்ண பரமாத்மா மஹாபாரதத்தில் பகவத் கீதையாக கொடுத்தார். இதனை ஶ்ரீ ஆதி சங்கரர் பரம்பரையில் வந்த ஶ்ரீ மதுசூதன சரஸ்வதி, கீதா த்யான ஸ்லோகத்தில் கூறுகிறார்.

“सर्वोपनिष्दो गावो ;दोग्धा गोपाल नन्दन:”

पार्थो वत्स: सुधी: भोक्ता दुग्धम् गीता अम्रुतम् महत्”

இதனுடய பொருள் என்னவென்றால், “எல்லா உபனிஷதங்களும் பசுக்கள். பால் கறக்கும் இடையன் கோபாலன். அர்ஜுனன் கன்று; நல்ல புத்திசாலி; பால் குடிக்க இருக்கின்றது. கீதை, சிறந்த அமுதமயமான பால்.” ஆக, இதில் இருந்து கீதை, உபனிஷதங்களின் சாரம் என்று தெரிகிறது. கண்ணன் கீதையிலே பதினெட்டு அத்யாயங்களில், 721 ஸ்லோகங்களில் வேத ஸாரத்தை பிழிந்து கொடுத்துள்ளார். அதில் மூன்று ஸ்லோகங்கள் மிகவும் முக்கியமானவை: முதலாவது,

“मत्त; परतरम् नान्यत् किन्चिदस्ति धनन्जय!

मयि सर्वम् इदम् प्रोतम् सूत्रे मणिगणाविव !!  (7-7)

இதன் அர்த்தம் என்னவென்றால், “எனக்குமேல் எந்த பரம்பொருளும் இல்லை அர்ஜுனா, இந்த உலகம் முழுவதும் என்னுள் ஒரு கயற்றில் மாலை போல உள்ளன.”

நமக்கு முதல் வாக்யம் முக்யம். அதாவது கண்ணனே பரம்பொருள். கண்ணன் நாராயணின் அவதாரமாதலால், நாராயணே பரம்பொருள் என்று கூறுகிறார். வேதத்திலும், நாரயண அனுவாகத்தில், “नारयण परम्ब्रह्म तत्वम् नारयण: पर:”  என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக

“दैवीह्येषा गुणमयी मम माया दुरत्यया!

मामेव ये प्रपध्यन्ते मायाम् एताम् तरन्ति ते !! (7-14).

இதில் கண்ணன் என்ன சொல்கிறார் என்றால், ”இந்த மாயையை கடப்பது மிகவும் கடினம். என் ஒருவனை எவன் சரண் அடைகின்றானோ, அவன் இந்த மாயயை கடக்கிறான்.”

மூன்றவதாக, சரம ஸ்லோகம் என்னும்படியான (கண்ணன் அர்ஜுனனுக்கு கூறிய) கடைசி உபதேசம்).

“सर्व धर्मान् परित्यज्य माम् एकम् शरणम् व्रज!

अहम् त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच:  !!” (18-66)

கண்ணன் உரைப்பது என்னவெனில்,” அர்ஜுனா, நீ எல்லா தர்மங்களயும் விட்டு விட்டு என் ஒருவனை சரண் அடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவித்து உனக்கு மோக்ஷம் அளிக்கிறேன் கவலைப்படாதே!”.

இந்த மூன்று ஸ்லோகங்களும், வைணவ சம்ப்ரதாயத்தின் மூன்று அங்கங்களான தத்வம், ஹிதம், புருஷார்த்தம் இவைகளை விளக்குகின்றன.

 1. ஶ்ரீமன் நாரயணே பர தத்வம் (முதல் ஸ்லோகம்)
 2. அவன் ஒருவனை சரணாகதி அடைவதே உய்ய வழி (இரண்டாவது ஸ்லோகத்தின் இரண்டாம் பகுதி மற்றும், மூன்றாவது ஸ்லோகத்தின் முதல் பகுதி).
 3. அடையவேண்டிய லக்ஷியம் மோக்ஷம். அதை கொடுப்பவன் ஶ்ரீமன் நாரயணனே. (மூன்றாவது ஸ்லோகம் இரண்டாவது பகுதி).

வேதம் நம் மதத்தின் மூலமாக இருந்தாலும், அதை அத்யயனம் செய்வதற்கோ அல்லது அதன் அர்த்தத்தை தெரிந்துகொள்ளவோ நியமங்கள் இருக்கின்றன. எப்படி ஒரு அறிவியல் பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்கள், சீதோஷணம் இன்னபிற தேவைகள் எல்லாம் அவசியமோ அது போல. வேதங்களை எல்லாரும் அறிந்துகொள்ள இயலாது. ஆனால் நம்மைப்போன்ற சாமான்ய மக்களும் வேதத்தின் உட்பொருளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ரிஷிகளும் முனிவர்களும் விழைந்தனர். ஆகவே, இதிஹாச புராணங்களை இயற்றினர்.

உதாரணமாக, தைத்தரீய உபனிடத்தில் குருவானவர் கல்வி முடிந்து வெளி உலகுக்கு செல்லும் சீடர்களுக்கு அறிவுரை கூறும் முதல் பகுதி “சிக்ஷா வல்லி”. ஆதில் ஒரு இடத்தில் “सत्यम् वद”  “सत्यात् न् प्रमतितव्यम्”. என்று சொல்கிறார். இதன் பொருள் “ உண்மை பேசு”. “உண்மையில் இருந்து வழுவாமல் இரு”. இதை உலகுக்கு உணர்த்த, வ்யாச பகவான் மஹாபாரத இதிஹாசத்தில் ஹரிசந்த்ர கதையின் வாயிலாக நம் அனைவருக்கும் உணர்த்துகிறார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், எல்லா புராணங்களும், இதிஹாசங்களும் வேதத்தை ஒட்டியே அமைந்துள்ளன.

அப்படிப்பட்ட இதிஹாசங்களுள் ஒன்றான இராமயணத்தில் இராமன் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுக்கும்போது இவ்வாறாக சொல்கிறார்.

सकृतेव प्रन्नाय तवास्मीतिच याचते ! अभयम् सर्व भूतेभ्यो ददामेतत् व्रतम् मम !!

“எந்த ஒரு ஜீவன் “நான் உன்னுடயவனாக இருக்கிறேன்” என்று என்னிடம் சரண் அடைகிறனோ, அந்த ஜீவனுக்கு நான் உடனடியாக, அபயம் அளிக்கிறேன். இது என்னுடய வ்ரதம்” என்று ஶ்ரீ இராமசந்த்ர மூர்த்தி கூறுகிறார்.. இதுவும், கீதையின் சார ஸ்லோகம் போல உள்ளது. ஆகவே, வேதத்தின் ஒரு முக்ய கருத்து, இறைவனிடம் சரண் அடைவதே.

வைணவ சம்ப்ரதாயதில் பெரியவர்களை உ.வே என்று அழைப்பார்கள். இதன் பொருள் “உபய வேதாந்தி”. அதாவது, இரண்டு வேதாந்தங்களையும் அறிந்தவர். வட மொழி வேதாந்தம் (உபனிஷதங்கள்) மற்றும் தமிழ் வேதாந்தங்கள் கற்றவர்கள். ஆழ்வார்கள் இயற்றிய திவ்யப்ரபந்தங்கள் தமிழ் வேதாந்தங்கள் ஆகும். பன்னிரண்டு ஆழ்வார்கள் நாலாயிரம் பாடல்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் பல்வேறு காலத்தில் தோன்றியவர்கள். ஆனால் மேலே கூறிய, கீதையின் சாரத்தை தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்கள். 1) ஶ்ரீமந் நாரயணனே பர தத்வம்.2) அவனிடம் பக்தி செலுத்துவதே நம் கடன். 3) மோக்ஷத்தை அடைவது நம் குறிக்கொள். அதை தருவதும் அவனே.

இந்த பன்னிரெண்டு ஆழ்வார்களிலே பெண் ஆழ்வாராக இருப்பவர் கோதையாகிய நம் ஆண்டாள். இவருடய இயற்பெயர் கோதா. வடமொழியிலே “கோதா” என்றால் பூமியால் கொடுக்கப்பட்டவள் என்று பொருள். இந்த கோதா நாச்சியார் அயோனி ஜன்மத்தவர். கர்பவாசம் செய்யாதவர். பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டவள். இவள் பூமி தேவியின் அம்சமாக பிறந்தவள் என்று கூறுவர். ஶ்ரீ வேதாந்த தேசிகன் தம்முடய “கோதா ஸ்துதி “ என்ற க்ரந்தத்திலே முதல் ஸ்லோகத்தில் கோதா தேவி சாக்ஷாத் பூமி பிராட்டி என்று சொல்கிறார்.

“साक्षात् क्षमाम् करुणया कमलाविव अन्याम् ! गोदाम् अनन्य शरणम् शरणम् प्र्पद्ये !!

வராஹ புராணத்தில் பகவான் வராஹ உருவம் எடுத்து பூமி தேவியை ஹிரண்யாக்ஷனிடம் இருந்து காப்பாற்றி பூமி பிராட்டிக்கு உபதேசம் செய்தார். பூமி தேவி கோதாவாகத் தோன்றி மக்களுக்கு 143 பாசுரங்கள் கொடுத்தார். அந்த நாச்சியார் திருமொழியிலே முக்யமானது திருப்பாவை. என்ற முப்பது பாசுரங்கள். எம்பெருமானார் ஶ்ரீ ராமானுஜர் இந்த முப்பது பாசுரங்களை எப்போதும் அனுசந்தானம் செய்து வந்ததனால் அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதப்பிரான் பட்டர் தென்கலை ஆசார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகளின் பேரன் ஆவார். அவர் ஆண்டாளுக்கு “வாழி திருநாமம்” பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல், ஆண்டாள் பிறந்த ஶ்ரீ வில்லிபுத்தூரையும் மற்றும் திருப்பாவையையும் உயர்வாகப் பாடி உள்ளார். திருப்பாவையைப் பற்றி கூறும்போது,

“வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐந்தும்
ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு”

என்று சொல்கிறார். இந்த முப்பது பாசுரமும் வேதம் அனைத்துக்கும் வித்து. நமக்கு நியாயமான ஒரு ஐயம் தோன்றுகிறது. “வேதம் அனாதி காலத்தில் இருந்து உள்ளது. திருப்பாவை இந்த யுகத்தில் இயற்றப்பட்டது. அப்படி இருக்க, அது எப்படி வேதத்துக்கு விதை ஆக முடியும்?”.

திருப்பாவைதான் வேதத்துக்கு காரணம் என்பது இதன் பொருள் அல்ல.

விதை சூக்ஷ்மமாக மரம், கிளை, பூ, பழம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண்டு மரதின் சாரமாக உள்ளது. அதே போல, திருப்பாவை, வேதத்தின் சாரமாகவே உள்ளது. இது எப்படி என்பதை கீழே பார்ப்போம்.

 1. நாம், வேதத்தின் சாரமான கீதையில், பரத்வம் ஶ்ரீமன் நாரயணன் (நான்) என்று கண்ணன் சொன்னதை மேலே பார்த்தோம். அதை கண்ணன் ஏழாவது அத்யாயத்திலே கூறினான். அனால் கோதா நாச்சியாரோ முதல் பாசுரத்திலேயே, “நாரயணனே நமக்கே பறை தருவான்” என்று ஏகாரத்துடன் பரத்வத்தை நிர்ணயம் செய்கிறாள். கண்ணனே நாரயணன் என்பதையும், முதலில் உள்ள விசேஷணங்களால் நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம், போன்ற சொற்களால் விளக்குகிறாள். ஶ்ரீமத் பாகவதமும் “कृष्णस्तु भगवान् स्वयम्” அதாவது கண்ணன் ஶ்ரீமன் நாராயணனே என்று அறுதியிட்டு சொல்கிறது.
 2. அவனை சரண் அடைவதே நாம் செய்யவெண்டியது. (கீதை ஸ்லோகம் 7-14 மற்றும் 18-66). ஆண்டாள், 24 வது பாசுரத்திலே, “அன்றி இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி. சென்று எங்கும் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று, பகவான் திருவடிகளில் சரண் அடைகிறாள்.
 3. அடையவேண்டிய லக்ஷியம் மோக்ஷம்; மோக்ஷத்தை அளிப்பவன் ஶ்ரீமன் நாராயணன். முதல் பாசுரத்திலேயெ ஆண்டாள், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று சொல்கிறாள். இதில் “பறை” என்ற சொல், நோன்புக்கு தேவையான இசைக்கருவி ஆகும். அனால் இதன் உள்ளர்த்தம் “ மோக்ஷம்”. ஆண்டாள் “நாரயண” நாமத்தை மூன்று பாசுரங்களில் உபயோகித்துள்ளாள். முதல் பாசுரம், ஏழாம் பசுரம் மற்றும் பத்தாம் பாசுரம். இதில் முதல் பாசுரம் மற்றும் பத்தாம் பாசுரத்தில், “நாராயண” நாமம் வரும் இடத்தில் “பறை” என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளாள். ஆகவே “மோக்ஷம் தருபவன் நாராயணணே” என்று தெள்ளத்தெளிவாக உரைக்கின்றாள்.
 4. வைணவ சித்தாந்த்திலே மோக்ஷம் என்பது ஶ்ரீ வைகுண்டத்தை அடைந்து பகவானுக்கு தொண்டு புரிவதே ஆகும். இதை ஆண்டாள், இருபத்தொன்பதாவது பாசுரதின் இறுதியில் பகவத் கைங்கர்யத்தை விழைகிறாள் “உனக்கே நாம் ஆட்செய்வோம்”.

வேதங்கள் பல்லயிரக்கணக்கான மந்த்ரங்கள் மூலமாகக் கூறிய கருத்துக்களை, கண்ணன், பல நுறு ஸ்லோகங்களில் சொன்னார். அதை மேலும் சுருக்கி கோதா நாச்சியார் முப்பது பாசுரங்களில் திரட்டி கொடுத்தாள். ஆகவே வேதம் அனைத்தும் மரம் என்றால் திருப்பாவை, விதை ஆகும். அது மட்டுமல்லாமல் வேதங்கள் (மறை) மறைமுகமாக கூறியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனியாக உரைத்தாள் ஆண்டாள். ஆகவே, தமிழ் கற்ற நாம் அனைவரும் திருப்பாவை கற்று அதன் பொருளை அறிந்து பிறவிப்பயனை அடைவோமாக. அவ்வாறு செய்யாவிட்டால் வேதப்பிரான் பட்டர் கூறியதுபோல்,” கோதை தமிழ் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு”; அதாவது நாம் பூமிக்கு பாரமாகிவிடுவோம்!

~ ராமபத்ரன்

~ படங்கள் உதவி – Flickr, Pinterest – நன்றி!

தமிழ்

கோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை!

[stextbox id=”stb_style_916025″]

வேத தர்மம் தொடர்பான பதிவுகள்

ஆரிய-திராவிடப் புளுகுமூட்டை

ஆரிய-திராவிடப் புளுகுமூட்டை-2

[/stextbox]

குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.

“வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!”

வேதச் சொற்களின் மூலத்தை, அவை சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலை, அதன் சொல்வளம், இலக்கணம்,  மொழி ஆய்வு, மற்றும் வேத மந்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாத இன்னபிற வழிகளைக் கொண்டும் செய்யப்பட்ட மிக ஆழமான, எதிலும் சார்பற்ற ஒரு ஆய்வின் விளைவே இக்கட்டுரை.  மேலும், மேக்ஸ் முல்லர், க்ரிஃப்பித், வில்சன், வில்லியம்ஸ் மற்றும் பல இந்தியவியலாளர்கள் வேதங்களையும் அதன் மொழிகளையும் பற்றிப் படைத்தவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மறுபதிவு செய்ததில்லை இத்தொகுப்புகள். அவை மேலை நாட்டுக் கல்வியுலகின் பிரபலமான கருத்துக்களாக இருப்பினும் அவை நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமானவை அல்ல என்ற நிலைப்பாடு  எமக்குண்டு. அது ஏன் என்ற ஆதாரங்களையும் இத்தொகுப்புகளில் காணலாம்.

ஞானத்தின் முதற்புத்தகங்களான வேதங்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்து உண்மையை ஆராய்ந்தறியும் கட்டுரைத் தொகுப்பின் முதற்பகுதிக்கு தங்களின் நல்வரவு.

பூமியில்  ஞானத்தின் முதல் வழிவகையான, ஹிந்து தர்மத்தின் வேர்களாகிய
வேதங்கள் மனித இனம் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான
வழிவகைகளைச் சொல்வதற்காக ஏற்பட்டது.

நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் புனித கிரந்தங்களாகிய வேதங்களில் புனிதமற்ற, தீங்கான கருத்துக்களிருப்பதாக அவதூறு பரப்பப்பட்டது. இக்கருத்துக்களை அப்படியே நம்பத்தொடங்கி விட்டால் ஹிந்து தர்மம், கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம் இவை காட்டுமிராண்டித்தனம், விலங்கினம் மற்றும் நரமாமிசமுண்ணும் நெறிகள் அன்றி வேறொன்றுமில்லை என எண்ணத் தோன்றும்.

உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களை சங்கடப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே கீழாக எண்ணச் செய்யும் பொருட்டு இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள்  பல்வேறு தரப்பினரால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரங்கள் வேதங்களிலிருந்தே  ஆதாரங்களைக் காட்டுவதாய்ப் பீற்றிக் கொண்டன.

இவை ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாத இந்தியர்களை அவர்களுடைய தர்மத்தின் ஆதாரமாகிய வேதங்கள்  பெண்மையைக் கீழ்த்தரமாக சித்தரிப்பதாயும், பலதாரமணத்தை ஊக்குவிப்பதாயும்,  ஜாதி வெறி பிடித்தவர்களாயும், அனைத்திற்கும் மேலாக பசு மாமிசமுண்ணுபவர்களாயும் காட்ட வெகு வசதியாயிருந்தது. இது அவர்களிடத்தில்  வேதங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்ய வெகு செளகரியமாயிருந்தது. 

இவை போதாதென்று மிருகங்களைக் கொன்று யாகம் என்ற ஒன்றை செய்பவர்களாயும் சித்தரித்தார்கள். கேலிக் கூத்தாக, பாரதத்திலிருந்து உதித்து, பண்டைய இந்தியாவைப் பற்றி வெகு ஆழமாய்ப் படித்ததாய்ச் சொல்லிக் கொள்ளும் சில அறிவாளிகளும் இந்த மேலைநாட்டு அறிஞர்களின் (?!) கூற்றை ஆதாரமாய்க் காட்டி ஆம், ஆம், வேதங்களில் இவை இருக்க்த்தான் செய்கின்றன என்று மார்தட்டினார்கள்.

வேதங்கள் கோ-மாமிசம் உண்ணுவதையும், பசுவதை செய்வதையும் அனுமதிக்கிறது என்பது ஒரு ஹிந்துவின்  ஆத்மாவிற்கே பேரிடியாகும். பசு ரக்ஷணம் என்பது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராம். இப்படியிருக்கையில் ஆதார ஸ்ருதியான வேதங்களே இவற்றை ஊக்குவிக்கின்றன என்று சொல்லி விட்டு அதிலிருந்து ஆதாரங்களையும் காட்டுவதாய் சொன்னால்? இந்தியன் வெகு எளிதாக குற்றஞ்செய்தவன் போல எண்ணுவான். இவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இரையுமாவான்.  இப்படி பல கோடி ஹிந்துக்கள் இப்பொய் பிரச்சாரத்தை அதன் அடிவேரை ஆட்டும் வண்ணம் எதிர்-வாதம் செய்ய இயலாமல், தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள், இன்னமும்!!!

இப்பிரச்சாரக் கூட்டம் வெறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு இந்திய மொழியாய்வாளர்களைக் கொண்டது மட்டுமல்ல, ஹிந்துக்களில் ஒரு சாராரே வேதங்களில் சொல்லியிருப்பவையாகக் கண்டதையும் கூறி அவற்றை ஏற்குமாயும் அப்படி ஏற்காதவர் பாதகர்களாவார்கள் என்றும் பசப்பி சமூகத்தில் மெலிவடைந்த பிரிவினரை மிரட்டி வந்தனர். இந்த புனைச்சுருட்டின் மையமாக மஹிந்தர், உவாத் மற்றும் சாயான் போன்றவர்களின் கருத்துக்களைச் சொல்லலாம், மேலும் தாந்திரிகர்கள் வேதங்களின் பெயரால் தம் புத்தகங்களில் பரப்பியவையும் சேரும்.

நாளடைவில் இப்பொய்கள் நன்கு பரவி மேலைநாட்டு அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மஹிதர், சாயான் போன்றவர்களின் கருத்துக்களை தங்களது அரை வேக்காட்டு சமஸ்க்ருத அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததோடு அவற்றை வேதங்களின் மொழிபெயர்ப்பு என்றும் பெயர் கொடுக்கலாயினர்.

ஆனால் இவர்கள் வேதங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அறிவதற்கும் முதற்படியாகிய சிக்ஷை (ஒலியியல் அல்லது உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் – phonetics) , வியாகரணம் (இலக்கணம் – grammar), நிருக்தம் (மொழியியல் அல்லது பாஷாவிலக்கணம் – philology),  நிகந்து (சொல்வளம் – vocabulary), ச்சண்டா (யாப்பிலக்கணம்-prosody), வானியல் அல்லது வானசாஸ்திரம் (astronomy), கல்ப இவைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக இல்லை.

அக்னிவீர் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் வேதங்களின் மீதுள்ள இவ்வகை தூற்றுதலை தெளிவாகவும், ஆதாரத்துடனும் தகர்த்தெறிந்து அவற்றின் பெருமை, ஞானோபதேசங்கள், அதன் தூய்மை – ஹிந்துக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதருக்கும், ஜாதி, இன, நிற வேறுபாடுகளின்றி அவை காட்டும் நன்னெறிகளை மீண்டும் நிலைநாட்டுவதே!

பகுதி 1 – மிருகங்களிடத்தில் காட்டும் அஹிம்சை

யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:

தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ் ஏகத்வமனுபச்யத:

யஜுர் வேதம் – 40.7

“எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பவர் அதன் புறத் தோற்றத்தில் மயக்கமோ துயரமோ அடைவதில்லை, ஏனெனில் அவர் தன்னிலும் அவைகளிடத்திலும் வேறற்ற தன்மையைக் காண்கிறார்”  

அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ

சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:

மனுஸ்ம்ருதி – 5.51

“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும்,
அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”

ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்

ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள  மா ஹின்சிஷ்டம்

பிதரம் மாதரம் ச

அதர்வ வேதம் – 6.140.2

“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள்.  இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”

யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:

கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி

அதர்வ வேதம் – 8.6.23

“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”

அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே

மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:

அதர்வ வேதம் – 10.1.29

“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!

இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?

அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:

யஜுர் வேதம் – 1.1

“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”

பஷுன்ஸ்த்ராயேதாம்

யஜுர் வேதம் – 6.11

“மிருகங்களைக் காப்பீர்”

த்விபாதவா சதுஷ்பாத்பாஹி

யஜுர் வேதம் – 14.8

“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”

க்ரவி த – க்ரவ்ய (மிருக வதை செய்பவரிடமிருந்து பெறப்பட்ட மாமிசம்) + அத (அதை உண்பவர்) – மாம்ஸமுண்பவர்

பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ (உண்பவர்) – மாமிசமுண்பவர்

அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப (தன்னைத் திருப்தி படுத்திக் கொள்பவர்) – தன் உணவிற்காக பிற உயிர்களைக் கவர்பவர்

கர்ப த & அண்ட த – கரு மற்றும் முட்டைகளை உண்பவர்

மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்

மாமிசம் உண்பவர்களை எப்போதும் கீழானவர்களாகவே பார்க்கிறது வேத இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள், பிஷாசர்கள் என்றெல்லாம் அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட சமுதாய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதியிருக்கிறது.

ஊர்ஜம் நோ தேஹி த்விபாதே சதுஷ்பதே

யஜுர் வேதம் – 11.83

“இரு காலுள்ளவையும் நான்கு கால்களுள்ள ஜீவன்களும் பலமும் ஆஹ்ருதியும் பெறட்டும்”

இம்மந்திரம் பெரும்பாலான ஹிந்துக்களால் உணவருந்துவதற்கு முன் சொல்லப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் எக்கணமும் நலமுற்று வாழப் பிரார்த்திக்கும் தத்துவம் மிருக வதையை எவ்வாறு அங்கீகரிக்கும்?

லோக சமஸ்தா சுகினோ பவந்துஇந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமல்லவா? சமஸ்த என்றால் அனைத்தும் என்றர்த்தம்.

[பாகம் 2] – வேதங்கள் அஹிம்சையையே போற்றுகின்றன!

யஞங்கள் பலரின் விருப்பமான மற்றும் அவர்கள் பிரபலப்படுத்திய நம்பிக்கைப்படி மிருக வதையைக் குறிப்பதில்லை. யக்ஞம் என்ற சொல் வேதங்களில் ஒரு புனிதமான செயல் அல்லது மிகவுயர்ந்த தூய்மைப் படுத்தும் செயல் என்றே குறிக்கப் படுகிறது.

அத்வர இதி யக்ஞநாம – த்வரதிஹிம்சாகர்மா தத்ப்ரதிஷேத:

நிருக்தம் 2.7

யாஸ்க ஆச்சார்யரின் கூற்றுப்படி, நிருக்தத்தில் (பாஷாவிலக்கணம்) யக்ஞம் என்ற பதத்தின் ஒரு பொருள் அத்வர என்பதாகும். த்வர என்பது ஹிம்சை அல்லது வன்முறை என்றாகும். எனவே அ-த்வர என்பது அ-ஹிம்சை என்பது தெளிவாகிறது. வேதங்களில் பல இடங்களில் அத்வர பிரயோகம் காணக்கிடைக்கிறது.

மஹாபாரதக் காலத்திற்குப் பின்னர் வேதங்களைத் திரித்துக் கூறுதல் மற்றும் மற்ற புனித நூல்களில் இடைச்செறுகல்கள் பல நடைபெற்றன. சங்கராச்சாரியார் வேதங்களின் மாண்பை ஒருவாறு மறுபடி நிலைநாட்டினார். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வேதங்களை அவற்றின் வழிமுறைகளுக்கேட்ப, நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பொருள்படுத்தினார்.  அவருடைய வேதங்களைப் பற்றிய கருத்து, பொழிப்புரை அடங்கிய இலக்கியங்கள் சத்யார்த் ப்ரகாஷ் என்பவரால் “உண்மையின் ஒளி (Light of Truth), வேதங்கள் ஓர் அறிமுகம் (An Introduction to the Vedas) மற்றும் இன்னும் பலவாறாக மொழிபெயர்க்கப்பட்டுப் பல்கிப் பரவி வேத தர்மத்தின் சார்பில் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கியதோடு வேதங்களைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்கியது.

 வேதங்கள் யக்ஞங்கள் பற்றி என்ன கூறுகின்றன பார்ப்போம்..

அக்னே யம் யக்ஞமத்வரம் விஷ்வத: பரி பூரஸி

ச இத் தேவேஷு கச்சதி

ரிக் வேதம் 1.1.4

 ஓ ஒளிர்விடும் கடவுளே! நீங்கள் எல்லா திக்குகளிலிருந்தும் போதிக்கும் அஹிம்சை யக்ஞம் அனைவருக்கும் பயனுள்ளதாகிறது, தெய்வீக நிலைகளைத் தொடுகிறது, மேலும் மேம்பட்ட ஆத்மாக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.

ரிக் வேதம் யக்ஞம் என்பதை அத்வர (அஹிம்சை) என்றே எங்கும் குறிப்பிடுகிறது. மற்றைய மூன்று வேதங்களிலும் அங்ஙனமே. இவ்வாறிருக்கையில் வேதங்கள் மிருக வதையை ஊக்குவிக்கிறதென்று எவ்வாறு முடிவு செய்யலாம்?

கால்நடை மற்றும் பசு வதை வேதங்களில் இருக்கிறது என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு அவை தொட்டு வரும் பெயர்களினாலேயே திரிபடைந்து வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அஸ்வமேத யக்ஞம், கோமேத யக்ஞம், நரமேத யக்ஞம் முதலியன. மிக அதீத கற்பனையிலும் இச்சொற்களில் வழங்கப்பெறும் “மேத” என்பது “பலி” என்பதாக வழங்கப்படமாட்டாது.

 யஜுர் வேதம் குதிரையைப் பற்றி என்ன சொல்கிறதென்ற அற்புதமானதொன்றைப் பார்ப்போம்.

இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு

யஜுர் வேதம் – 13.48

“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”

அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல!
யஜுர் வேதம் மிகத் தெளிவாகக் குதிரையைப் பலி கொடுக்காதீர் என்று சொல்லி விட்டது.

ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம் அல்லது சாம்ராஜ்யம் என்று பொருள்படும்.

அஸ்வமேத யக்ஞம் என்றால் என்ன?
அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல!

மேத என்றால் வதை அல்ல. அது புத்திக்கு ஏற்றாற்ப்போல செய்யப்படும் ஒரு காரியம் என்றும் ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம் என்றும் பொருள் பட ஏதுவாகிறது. இதன் மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-மே

ராஷ்டிரம் வா அஷ்வமேதா:
அன்னம் ஹி கெள
அக்னிர்வா அஷ்வா:
ஆஜ்யம் மேதா:
(ஷத்பதம் 13.1.6.3)

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உண்மையின் ஒளியில் (Light of Truth) கூறுகிறார்:

“ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின் பெருமை, நலன் மற்றும் வளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம் எனப்படும்.”

“உணவைப் புனிதமாக வைக்கவும் அல்லது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது உணவைப் புனிதமாக ஆக்கவும் அல்லது சூரியனின் கதிர்களை நற்பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும், பூமியை அசுத்தத்திலிருந்து காக்கவும் செய்யப்படும்  யக்ஞம் கோமேத யக்ஞம் எனப்படும்”

ஞானபூமி — இதில் நம் தமிழ் மொழியில் கோமகன் என்றால் கொற்றவன் / மன்னவன் என்றும் கண்டிருக்கிறோம், கோமகன் என்றால் பசுவின் மகன் என்றா பொருள்படும்? ஒரு வேளை மேதாவிலாசம், மேதை என்ற சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும் ஒன்றையொன்று வார்த்தைப் பிரயோகங்களை கொடுத்து வாங்கியது என்பது மொழியாய்வாளர்களின் கருத்தே —

“கெள என்றால் பூமி, பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் காக்கவென்று செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்” 
“வேதங்களின் அடிப்படையில் உருவான வழிமுறைகளின் படி இறந்தவரின் உடலை எரியூட்டுவதன் பெயர் நரமேத யக்ஞம்”

[பாகம் 3] – வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை

வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.

க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:

யஜுர் வேதம் – 13.49

“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து

ரிக் வேதம் – 7.56.17

“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம

அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ

ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20

அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.

கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே –

அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று

பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.

அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய

ரிக் வேதம் – 1.164.27

“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”

சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:

ரிக்வேதம் – 5.83.8

“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்”

யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா

ரிக் வேதம் – 10.87.16

“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”

விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா

யஜுர் வேதம் 12.73

“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”

மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா

ரிக் வேதம் 8.101.15

“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”

அந்தகாய கோஹாதம்

யஜுர் வேதம் – 30.18

“பசுவதை செய்பவர்களை அழி!”

யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்

தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ

அதர்வ வேதம் – 1.16.4

“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”

வத்ஸம் ஜாதமிவாக்ன்யா

அதர்வ வேதம் – 3.30.1

பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்

தேனு சதனம் ரயீநாம்

அதர்வ வேதம் – 11.1.34

பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்

ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.

ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:

 

Vedas Shun Beef
Protect the cows!
 1. அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிருந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
 2. பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
 3. பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
 4. பசு வதை யாரும் செய்யக் கூடாது.
 5. பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
 6. பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
 7. பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்கட்டும். அவைகளைக் கொல்ல
  வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.


இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறது வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது. படித்தவர்கள் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். வேதங்கள் உயிர்வதையை, மேலாக பசுவதையையும் மாட்டிறைச்சியையும்  எதிர்க்கிறதென்பதை.  

ஆதார நூல்கள்:

1.    Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati

2.    Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati

3.    No Beef in Vedas by BD Ukhul

4.    Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati

5.    All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar

6.    Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur

7.    The Myth of Holy Cow – by DN Jha

8.    Hymns of Atharvaveda – Griffith

9.    Scared Books of the east – Max Muller

10.    Rigveda translations by Williams/Jones

11.    Sanskrit English Dictionary – Monier Williams

12.    Commentary on Vedas by Dayanand Sansthan

13.    Western Indologists – a study of motives by Pt Bhagvadutt

14.     Satyarth Prakash by Swami Dayanand Saraswati

15.     Introduction to Vedas by Swami Dayanand Saraswati

16.     Cloud over understanding of Vedas by BD Ukhul

17.    Shathpath Brahman

18.     Nirukta – Yaska Acharya

19.     Dhatupath – Panini

இக்கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்.

 1. இதை எழுதிய பின் எனக்குப் பின்னூட்டங்களாக பலப் பல கருத்துக்கள், வேத ஸ்லோகங்களையும் மனு ஸ்ம்ருதிகளையும் காட்டி அவை பசு மாமிசத்தை காட்டுவதாய்க் கூறின. மனு ஸ்ம்ருதியை பற்றிய ஒழுங்கான கருத்துக்களைப் படிக்க டாக்டர் சுரேந்திர குமாரின் புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: கிடைக்குமிடம் – http://vedicbooks.com
 1. இவர்கள் கூறும் ஒரு வழக்கமான சாக்கு மான்ச என்பதை மாமிசம் என்று மொழிபெயர்ப்பதே. உண்மையில் மான்ச என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.
 1. இவர்கள் மேலும் சுட்டிக் காட்டுவது ரிக் வேதம் 10/85/13 ஐ. இது சொல்கிறதாம் “ஒரு பெண்ணின் திருமணத்தின் போது பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டன” என்று.

உண்மை –  இந்த மந்திரம் சொல்வதென்னவென்றால், பனிகாலத்தில் சூரியனின் கதிர்கள் ஹீனமடைந்து மறுபடி வசந்தத்தின் போது பலமடைகிறது என்பது. சூரியக் கதிரைக் குறிக்க பயன்படுத்தப் பட்ட சொல், பசுவையும் குறிக்கும் “கோ” என்பது. எனவே பசு என்று எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஹீனமடைவதற்கான சொல் “ஹன்யதே” என்பது, அது வதைப்பது என்றும் பொருள்படும். இது இவ்வாறானால், எதற்காக அம்மந்திரம் மேலும் அடுத்த வரியிலேயே “வசந்தத்தில் இவை மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து விடும்” என்று சொல்ல வேண்டும்? பனிகாலத்தில் வதை செய்யப்பட்ட பசு எவ்வாறு வசந்தத்தில் மீண்டும் உயிர்பெறும்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது வண்டவாளம்?

மேலும்…

ரிக்வேதம் 6/17/1 – “இந்திரன் பசு, கன்று, குதிரை மற்றும் எருதுகளின் மாமிசத்தை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்”
– என்பது.

உண்மை – இம்மந்திரம் “அதிபுத்திசாலிகளாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி” – இதில் இந்திரன், பசு, குதிரை அவைகளின் மாமிசங்கள் இவையெல்லாம் எப்படிப் புகுந்தன என்று வியப்பாயிருக்கிறது!

முடிவாக, வேதங்களில் ஒரு மந்திரமாவது பசுவதையையோ அல்லது பசு இறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகவோ இல்லை, இல்லை, இல்லையென்பதே நிரூபணமாகிறது!

படங்களின் மூலம் (நன்றியுடன்):

http://www.agniveer.com
http://ilikelite.blogspot.in/
http://gjkmediareligion.blogspot.in/2012/02/blog-post_14.html
http://www.paulmason.info/gurudev/godhana.htm

தமிழ்

ஆரிய திராவிடப் புளுகுமூட்டை

[stextbox id=”stb_style_916025″]

வேத தர்மம் தொடர்பான பதிவுகள்

கோமாமிசம்  உண்ணுமாறு  வேதங்கள்  சொல்லவில்லை!

[/stextbox]

குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை. மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட்டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.

[பாகம் 1]
வேதங்கள் உலகிலுள்ளோர் அனைவரும் அக ஒளி அல்லது ஞானமடைவது எப்படி என்று வழி  காட்டுகிறது. நாம் ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்னும் நான்கு (இவை நான்கு மட்டுமே வேதங்கள் எனப்படும்). வேதங்களை ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்பதற்கு முன் அக ஒளியை நமக்களிக்க அக்னியை வணங்குவோம். அக்னி என்பது நெருப்பு என்பதைக் குறிப்பதோடல்லாமல் ஞானத்தை தருவது என்றும் சமஸ்க்ருத மொழியில் வழங்கப்படும். நாம் வேதங்களை கற்றுணர வேண்டும் என்ற சுபமான நினைவுடன் இதைத் தொடங்குவதால் மங்கல அடையாளத்தின் ஒன்றான அக்னியை வணங்கித் தொடங்குவோம். அக்னிக்கு எரிவதற்கு எதைத் தருவது? வாஸ்தவத்தில் மன அழுக்கினை நம்முள் இருக்கும் அக்னிக்குத் தாரை வார்த்து விட்டோமானால் நாமே ஞானமயமாகி விடுவோமல்லவா? எனவே வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பொய், புனைச்சுருட்டு போன்றவற்றினால் மெருகூட்டப் பட்ட ஒரு சில கதைகளை அக்னிக்குத் தாரை வார்த்து விடுவோம் வாருங்கள்.

இதில் முதலாவதாக நம் நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழ்நாட்டினரிடையே ஓர் அடிப்படை உண்மையை உணராமல் செய்து, அவர்களை மதிமயக்கியதில் முக்கியமானதும், புரட்டிலேயே அதி உன்னதப் புரட்டான வந்தேறிகள் என்று தூற்றப்பட்ட ஆரியர்களின் ஆதிக்கம்  பற்றிய அற்புதமான கட்டுக்கதை தான் நாம் அக்னிக்குத் தரும் முதல் ஹவிஸ்.

ஆங்கிலத்தில் ஆரியன் இன்வேஷன் தியரி (Aryan Invasion Theory) என்று பெரிதும் அழைக்கப்பட்டுப் பின் அத்தியரி திரிந்து, அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவராலும் ஊசிப் போன கதை  என்றான பின் இப்போது வசதிக்கேற்ப இண்டோ-ஆரியன் மைக்ரேஷன் (Indo-Aryan Migration) என்ற புதுப் பெயர் சூட்டி இப்புரட்டினை பரப்பிய, பரப்பும் பெருமை வெளிநாட்டவர்களுக்கு முதுகு தண்டு வளையும் வண்ணம் கூழைக் கும்பிடு போடும் ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைச் சாரும்.

இப்பதிவில் 1) வேத சம்ஹிதைகள் மற்றும் சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றில் காணப்படும் சார்பினைக் காட்டி அதன் மூலம் மேற்கூறிய புரட்டானது எப்படி கட்டுக்கதை என்று நிரூபணமாகிறதென்றும் 2) எப்படி சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அழகான தென்மதுரையிலும்  தற்போது புறத்தே வற்றினாலும் நம் அகத்தேயும் புராண சாஸ்திரங்களிலும் வாழ்ந்து வரும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்தவர்களின் வழிபாட்டு முறையில், தெய்வங்களில் காணப்படும் ஒற்றுமையும் தொடர்புடையதாய் இருப்பதைக் காணலாம். இதில் தமிழை திராவிட மொழிகளின் பிரதிநிதியாகத் தேர்வு செய்தமைக்குக் காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தினின்றும் முன் தோன்றிய தமிழ் மொழியின் பழமையும் தொன்மையும் வேதத்திற்கும் சமஸ்க்ருதத்திற்கும் ஒப்பானதல்லவா? மேலும்  மற்றைய மூன்று தென்னிந்திய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த ஆரிய-திராவிட பிரிவு என்பது வெளிப்படையாகவும் அரசியல் ரீதியாகவும் பேசப்படுகிறது.

ஆரிய – திராவிடப் பிரிவு

மானுடத்தின் ஒப்பற்ற மற்றும் மிக முதலானதுமான ரிக் வேதத்தில் ஒரு கடுகளவிற்குக் கூட வெளியிலிருந்து ஆதிக்கம் (invasion) அல்லது  குடிபெயர்தல் (இடமாறுதல்) என்பதோ நடந்ததாக ஒரு ஆதாரமோ அல்லது குறிப்போ காணப்படவில்லை. வேத கால ரிஷிகளோ பாரதத்திற்குள் வேறெங்கிலும் இருந்தோ நுழைந்ததாய்க் கூறவில்லை. ஆனால் இந்திய ஆய்வாளர்களும்  (Indologists) வாதிடுபவர்களும் இதே ரிக் வேதத்தையே தங்கள் பொய்க் கூற்றினை மெய்யாக்க உபயோகப் படுத்துகிறார்கள். 

 இதற்கு இவர்கள் மேற்கோள் காட்டும் ரிக் வேதத்தில் ஆங்கிரஸ பரம்பரையில் வந்த ரிஷிகள் தஸ்யுக்களை  வெல்வதற்காக இந்திரனை ஆவாஹனம் செய்த கதையைக் கூறி அப்படிப் போர் செய்ய வந்தவர்கள் ஆரியர்கள் என்றும் அவர்களால் விரட்டப்பட்ட மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்றும் அவிழ்த்து விட்டனர். இதில் தஸ்யுக்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு அழகான விவரிப்பை இங்கு காணுங்கள்.

இப்படி அவிழ்த்து விடப்பட்ட மூட்டையை அவர்கள் முதுகிலேயே மறுபடி ஏற்றுவதற்கு முன்னால் சிலவற்றைப் பார்த்து விடுவோம்.

திராவிட என்பது தமிழ் வார்த்தை அல்ல. இதன் சமஸ்க்ருத மூல வார்த்தை “திரவ” ஆகும்,  நீர் போன்ற என்ற பொருள் படும். இதில் முக்கியமாக, சங்க இலக்கியங்களில் திராவிடன், திராவிட என்ற சொல் எங்கும் கூறப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் செளந்தர்ய லஹரி 75ஆவது கவியில் திருஞான சம்பந்தரைக் குறித்து இவ்வார்த்தையைப் பிரயோகிக்கிறார்  (இது தன்னைத் தானே குறிக்க அவர் உபயோகித்த சொல் என்றும் கூறுவர்):

Tava stanyam manye dharani-dhara-kanye-hrdayatah
paya-pArAvArah parivahati sArasvata iva;
DayAvatyA dattam dravida-sisur AsvAdya tava yat
kavInAm praudhAnAm ajani kamaniyah kavayitA
http://www.nandhi.com/soundarya_lahar%C2%ADi_sri_adi_shankara.htm

தமிழ்ச் சங்க இலக்கியங்கள் காலம்,  இறையாண்மை,  நிகழ்வுகள், போர், தொழில், இயற்கை சீற்றங்கள் போன்ற பல நிகழ்வுகளின் சந்தேகத்திற்கிடமில்லாத் தொகுப்பாகும். ஆர்யர்கள் படையெடுப்பின் மூலம் திராவிடர்களை விந்திய மலையின் தெற்கே தள்ளியிருப்பின், அவர்களில் பலரைக் கொன்றிருப்பின், நிச்சயமாகத் தமிழ் இலக்கியங்களில்  இத்தகைய கொடுஞ்செயல்கள் குறித்த பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இலக்கியங்கள் திராவிட என்ற சொல்லையே கி.பி 9ஆம் நுற்றாண்டில் அதுவும் மொழியாய்வில்  பயன்படுத்தியிருக்கின்றனர். சேந்தன் திவாகரம் (திவாகர முனிவர்) திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்று குறிக்க பயன்படுத்தியிருக்கிறார்.

ஆரிய-திராவிடப் பிரிவு ஒரு கட்டுக்கதை என்பதும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாதது என்று அறிய மேற்கூறிய உதாரணமே போதுமானது. 19ஆம் நூற்றாண்டில் தான் ராபர்ட் கால்டுவெல் என்பவர் க்றிஸ்துவ மதத்தைப் பரப்ப இங்கு வந்து “திராவிடன்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் இச்சொல் அரசியல் சாயம் பூசிக்கொண்டது. இந்தக் கதைக்கு உயிரூட்டி அதை அப்படியே வைத்திருந்தால் தான் தங்கள் கல்லா நிறையும் என்பதை நன்கு உணர்ந்தவராயினர் அரசியல் தலைவர்கள்.  

[பாகம் 2]

ரிக் வேதத்தில் ஆதாரமிருப்பதாகச் சொல்லப்படும் புரளி

 இனி நாம் ஆரிய ஆதிக்கம் பற்றி முழக்கமிடும் இந்திய ஆய்வாளர்கள் எப்படி  ஆரியர்கள் மண்ணின் சொந்தக்காரர்களாகிய தஸ்யுக்களை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் என்பதையும் சில கேள்விகளையும் பார்ப்போம்.  இவர்கள் ரிக் வேதம் 10/48 ஐ சுட்டிக் காட்டுகிறார்கள். இதில் இந்திரன் தஸ்யுக்களையும் அவர்களின் பிரிவுகளையும் தன் பராக்கிரமத்தால் அழித்தும், அவர்தம் செல்வங்களை அபகரித்தும்,  தன்னுடன் இருப்பவர்கள் வீழ்வதில்லை என்று சொல்வதாகவும் உள்ளது.  ஆனால் இவர்கள் வசதியாக மறப்பதும் அல்லது புரிந்து கொள்ள இயலாமலிருப்பதும் என்னவென்றால் தாஸ்யுக்கள் மற்றும் அவர்தம் பிரிவுகளின் உருவகத்தை.  சரி, தாஸ்யுக்கள் யார்?

 ரிக் வேதம் 1/33/1-10 ஐக் காண்கையில் நமக்குத் தெளிவாகப் புரிவது என்னவென்றால் இந்திரன் அபகரிப்பதாய் சொல்லப்படும் செல்வம் “ஞானம் அல்லது அறிவு” என்பதாம். 

இந்த ரிக் வேத வரிகள் “கவம் கேதம் பரம் அவர்ஜதே நா” என்று முடிகிறது. அதாவது ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானம் என்பதாகும். அந்த முழு வாக்கியத்தின் அர்த்தமாவது “வாருங்கள்,  நாம் இந்திரனிடம் பசுக்களைக் கேட்போம். அவனே இந்த எண்ணத்தை நம்மில் அதிகரிக்கிறான். நமக்காக ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானத்தை நமக்குத் தருகிறான்” என்று பொருள் படும்.

 முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம்.  யக்ஞங்கள், ஹோமங்கள் முதலியனவற்றை செய்பவர்களை யஜ்யு என்றும் இவை யாருக்காக அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவர்கள் யஜதா என்றும் சொல்வர். ஆனால் தஸ்யுக்களின் கொள்கை யஜ்யு, சுக்ரதுக்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. தஸ்யுக்களை அயஜ்யு (யஜ்யுவிற்கு எதிர்மாறான) என்றும் சொல்வர். அஜித் என்றால் அ+ஜித், அதாவது ஜெயிக்க முடியாத என்ற பொருள் படுவது போல. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஒரு அயஜ்யு சுக்ரதுக்களை (தெய்வீக சப்தத்தைப் உணர்ந்து பாடுபவர்கள் என்று ஒருவாறாகப் பொருள் கொள்ளலாம்) முற்றிலும் வெறுப்பவர். அவர்தம் இத்தகைய குணம் ப்ரம்ஹத்விஷ் என்றழைக்கப்படுகிறது. அதாவது பரமாத்மாவைப் பற்றிய எண்ணமில்லாதவன் என்று பொருள். த்வேஷம் என்பது த்விஷ் என்ற பதத்திலிருந்து உருவானது.

முக்கியமாக, அயஜ்யு ஓர் அனாசன் (வாய் என்பதில்லாதவன்) என்றும் அமான்யமன (மனம், புத்தி போன்றவைகளில்லாத) என்றும் வழங்கப்படுகிறார். வேதம் முழுமைக்கும் தஸ்யுக்கள் பசுக்களை (நாம் மாடு என்றழைக்கும் பசுவைக் குறிப்பதல்ல, அறிவை ஞானத்தைக் குறிப்பது) கைப்பற்றியிருப்பதாயும் இவைகளை மனிதர்கள் இந்திரனின் உதவியுடன் கைக்கொள்வதாயும் வருகிறது. இன்னோரிடத்தில் பாணிகள் (தஸ்யுக்களில் ஒரு பிரிவு) இப்பசுக்களைத் திருடி ஒரு குகையில் வைத்து விடுவதாயும் இந்திரன் என்ற ஞானத்தினால் இவ்வொளி வீசும் பசுக்கள் மீட்கப்படுவதாயும் வருகிறது. ரிக் வேதம் 6/51/14 இந்திரனிடம் பாணிக்களை அழிக்குமாறும் அவர்களை ஓநாய்களுக்கும் ஒப்பிடுகிறது.

இந்திரனானவன் இந்திய ஆய்வாளர்கள் கற்பனையில் தஸ்யுக்களை அழித்து இன்னும் என்னென்னவற்றை வென்றான் என்று பார்க்கலாம்.

ரிக் வேதம் 3/34/7-10

7 வீரர்களின் இறைவன், மக்களை ஆளும் இந்திரன் கடவுளர்களுக்கு வலிமையினாலும் போரினாலும் விடுதலையளித்தான். ஞானமடைந்தவர்கள் விவாஸ்வனின் இருப்பிடத்தில் அவனின் இத்தீரச்செயல்களைப் பாடிப் புகழ்வர்.

 8 அற்புதமான, வெற்றியாளன், வெற்றியைத் தருபவன், ஒளியையும் பரம்பொருள் போன்ற தண்ணீரை வென்றவன், இப்பரந்த பூமியையும் சுவர்க்கத்தையும் வென்றவன் – இந்திரன் அவனைப் பக்தியில் காதலுற்றோர் புகழ்வர்.

 9 சூரியனையும் குதிரைகளையும் தன்னகத்தே கொண்டவன், பலருக்கும் உணவூட்டும் பசுவை வென்றான். தங்கப் புதையலை வென்றான்; தஸ்யுக்களைத் தகர்த்தான்; ஆரியர்களின் நிறங்களைக் காத்தான்.

 10 தாவரங்களையும் பகலையும் அவன் கவர்ந்தான்; காட்டிலுள்ள மரங்களையும் காற்றின் நடுப்பகுதியையும் வென்றான். இப்படிப் பல…

தஸ்யுக்கள் மனிதர்களாயும், ஆரியரில்லாதவர்களாயும் இருப்பார்களேயானால், இந்திரன் எதற்காக பகலையும் காற்றின் நடுப்பகுதியையும் சாதாரண மனிதர்களிடத்திலிருந்து கவர வேண்டும்?

தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதத்தில் தொடர்கிறது. இந்திரன் அவர்களை சுவர்க்கத்திலிருந்தும் பூமியிலிருந்தும் தன் வஜ்ராயுதத்தால் துரத்தியடிக்கிறான். அவன் பராக்கிரமம் அதிகரிக்க அதிகரிக்க தஸ்யுக்களால் அவனறியாமல் எங்கும் ஓடி ஒளிய முடியாமல் போகிறது. இந்திரன் சூரியனை மீட்க, அவன் உதயமாகி ஒளிபொருந்திய பசுக்களை அடைத்து வைத்திருந்த குகையை ஒளிமிக்கதாக்குகிறான்.

மேற்கூறியவற்றில் தஸ்யுக்கள் இந்திரனால் அழிக்கப்பட்ட திராவிடர்கள் என்ற புளுகு மூட்டைக்கு நேரெதிராக இருப்பதோடல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் இருக்கிறது.

ஏனெனில் திராவிடர்கள் பேச முடிபவர்கள், புத்திசாலிகள் மற்றும் அவர்களுக்கு மூக்கு இருக்கிறது 🙂

 சங்க கால இலக்கியங்களில் இருக்கும் சான்றுகள்

 வாருங்கள், நாம் இனி தமிழ்நாட்டிற்குச் சென்று தமிழர் என்பவர் ஆரியர் என்பவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவரா என்றும் ஆரியர்களால் அவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளானவர்களா என்றும் பார்க்கலாம்.

 சங்க கால இலக்கியம் என்பது மிக மிக விசாலமானதாகையால் ஒரு சில முக்கியமான தொகுப்புகளிருந்து திராவிடர்கள் எதை, யாரை வணங்கினார்கள் என்று பார்க்கலாம். சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை (வனம் மற்றும் வனம் சார்ந்த), மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த) நெய்தல் (கடல் மற்றும் கடல் சார்ந்த) மற்றும் பாலை (காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்) எனப் பிரிப்பதை நாம் அறிவோம்.

தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: 

முல்லை – திருமால் (விஷ்ணு)

குறிஞ்சி – முருகன் (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்)

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை (சக்தி)

 மற்றொரு முக்கிய சங்க இலக்கியமான புறநானூறு சிவபெருமான் திரிபுரமெரித்ததைச் சொல்கிறது. இதில் சிவபிரான் மஹா மேரு மலையை வில்லாகத் தன் கையிலெடுத்ததையும் ஒரே அம்பினால் முப்புரங்களையும் தீக்கரையாக்கியதையும் சொல்கிறது. புறநானூற்றிலும் அகநானூற்றிலும் சிவகுமாரன் கந்தனாகிய குமரக்கடவுள் நன்கு அடிக்கடி காணக்கிடைக்கிறார்.

 இவை நம்மை வேதங்களின் அக்னி, கார்த்திகேயனுடன் நன்கு இணைக்கிறது. இதில் இன்னும் சிலர் சிவபெருமானை திராவிடக் கடவுளாக மட்டும் காட்ட விழைகின்றனர். நல்லவேளை “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழுப் பதம் நமக்குத் தெரியும். இதில் வேதங்களில் சொல்லப்படும் ருத்ரரை சிவனாகப் பாவிப்பதுமுண்டு.

 வேதங்களில் ரிக் வேததிலோ அல்லது யஜுர் வேதத்தில் ருத்ரம்/சமகத்திலோ நன்கு நோக்கினோமானால், ருத்ரரின் ஒரு சில பொதுவான குணங்களை எளிதாகக் காணலாம். இதில் சிவன் என்பவர் ருத்ரர்களின் ஒரு அம்சமே என்பது ருத்ரம் / சமகத்தில் சொல்லியிருப்பது. இதில் ருத்ரர் என்பது சிவன் என்பதாய் மாற்றமடைந்தாலும், வேதங்களில் சொல்லியிருக்கக் கூடிய சிவன் / ருத்ரனும் பெரிய புராணத்தில் கூறியிருக்கும் சிவனும் ஒன்றே.

 திருவண்ணாமலை, சிதம்பரம் இவற்றில் தேவாரம் ஓதுவதோடு ருத்ரம் / சமகத்தையும் ஓதுவார்கள், தமிழரின் சிவனும் வேத புராணங்களில் சொல்லப்படும் சிவனும் ஒன்றே என்பதை இது நமக்குக் காட்டுகிறது.

திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரர்

அனைத்திற்கும் மேலாக, யஜுர் வேதத்திலிருக்கும் தைத்ரிய சம்ஹிதை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் இன்றும் வாழும் ஒரு  மரபாகும்.

முடிவாக…

 இதன் மூலம் ரிக் வேதம், சங்க கால தமிழிலக்கியங்கள் இவற்றில் மிகச்சில குறிப்புக்களைக்  கொண்டே ஆரிய ஆதிக்கம் என்ற புரட்டு எத்துணை நகைப்புக்குரியது என்பது தெரிகிறது. இதன் மூலம் இத்திருநாடு அதன் சொந்தக் குடிமக்களாம் வேதக் குடும்பங்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பொன்னாடு என்பதும் நன்கு தெரிகிறது.

 மொழி, தோல் நிறம், அந்தந்த இடங்களின் கலாச்சார வேறுபாடு இவற்றைக் கொண்டு இந்தப் பிரிவினை விளையாட்டு 150 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி நடந்ததோ அதே போல இன்றும் நடைபெறுகிறது.

 மறுபடியும் சொல்கிறோம், இத்திருநாடு வேத தர்மத்தைப் பின்பற்றும் அதே சொந்தக் குடிமக்களால் நிரம்பியிருந்தது, நிரம்பியிருக்கிறது என்பது திண்ணம்.

 பி.கு: தமிழகத்தின் இரு கண்களாகிய சைவமும் வைணவமும் நமக்களித்த அருபெரும் சைவர்கள், வைணவர்களின் மூலம் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்களை நாம் இதில் தொடவேயில்லை. அதைப் பார்த்தாலே வேத தர்மம் முழுதும் தழைத்தோங்கிய நாடு இது என்பதும் ஆரிய திராவிடப் பிரிவு என்னும் கட்டுக்கதை ஒரு மதுபானமருந்திய மனத்திலிருந்து தோன்றிய ஒரு கற்பனை என்பதும் தெரிய வரும்.

 பி.கு1: மேலும், வேதங்களில் சொல்லப்பட்டிருப்பவை உண்மை, உண்மை என்று ஆணித்தரமாக நிரூபணமாகி வரும் இந்நாட்களில் நாம் அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும் இவ்வுண்மைகளைப்  பார்க்க உதவிய அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறோம். எங்களுக்கு யாரிடமும் பொய் சொல்லத் தேவையிருக்கவில்லை. எங்கள் முன்னோர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பொய் என்ற ஒரு துணை அவர்களுக்குத் தேவையிருக்கவில்லை.

 http://gosai.com/writings/the-myth-of-the-aryan-invasion

இப்பதிவில் பயன்படுத்தியிருக்கும் படத்தின் மூலம் எங்கென்று தெரியவில்லை. தெரியப்படுத்தினால் அதை மகிழ்வுடன் இங்கு பிரசுரிப்போம்.

தமிழ்

மாதவஸ்வாமி

மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி நாகம்மாவின் கடிதம்
12 ஜூலை 1946
மாதவஸ்வாமி ஒரு மலையாளி. பாலக்காட்டின்அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பிரம்மச்சாரி. அப்போது 20 வயதே ஆன அவர் இங்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து பகவானுக்குத் தனிப்பட்ட சேவையாற்றினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் விருப்பமுடையவராயிருந்த காரணத்தினால் அவ்வவ்போது வெளியே செல்வதும் மீண்டும் திரும்புவதுமாயிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்த பகவானின் ஒரு ஆஸ்ரம நிர்வாகியாக இருந்த மற்றொரு பக்தர் ஆச்சார்யஸ்வாமி இங்கே வந்திருந்துப் பின் காலமாகி விட்டிருந்தார். பின் மாதவஸ்வாமி அம்மடத்தின் நிர்வாகியாகி பின் சில காலமே வாழ்ந்திருந்தார்

மாதவஸ்வாமி
ஒரு நான்கு நாட்களுக்கு முன், அதாவது 8 அல்லது 9 ஆம் நாள் காலை, நான் பகவானிடத்தில் சுமார் ஒரு 7.30 மணிக்குச் சென்றேன். அவரை நமஸ்கரித்து எழுகையில்,பகவான் சொன்னார், “மாதவா போய் விட்டார்.”
அவர் அடிக்கடி இவ்வாறு ஸ்தல யாத்திரை சென்று விடுவாராகையால் நான் கேட்டேன்.
எங்கே?” 
பகவான் (புன்னகைத்தபடி)எங்கே? அங்கே, உடலை இங்கே விட்டு விட்டு” 
திகைத்துப் போன நான் எப்போ?!” 
முந்தாநாள் சாயங்காலம் 6 மணிக்கு
பின் கிருஷ்ணஸ்வாமியைப் பார்த்து, “அங்கேயிருந்த (கும்பகோணத்தில்) ஆச்சார்யஸ்வாமி இங்கே வந்து போய் விட்டார், இங்கே இருந்தவர் அங்கே போய் போய்விட்டார். அனைத்தும் விதி வசமாகவே நடக்கிறது. ரொம்ப நாட்களாக மாதவாவிற்குத் தான் ஸ்வதந்திரமாக யாரும் தன்னைக் கட்டுப்படுத்தாமலிருக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவ்வாசை கடைசியில் நிறைவேறிவிட்டது. அவர் ஒரு நல்ல மனிதர்.ஒரு விளையாட்டுக்காக கும்பகோணத்திலிருந்த ஆச்சார்ய ஸ்வாமி மறைந்து அங்கே யாரும் இல்லாமலிருப்பதால் மாதவனை நீ அங்கே போவாயா?” என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டு அங்கே போய் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு விட்டார். எப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்!
நான் தெலுங்கில் த்விபாதம் மற்றும் இன்னபிற ஸ்லோகங்களை ஒரு நோட்டில் மலையாளத்தில் எழுதிய போது மாதவா அதை தெலுங்கர் படிப்பது போலவே படிப்பார். அவருக்கு ஏதோ ஒரு சம்ஸ்காரம் இருந்தது தெலுங்கில். அந்த நோட்டை அவ்வவ்போது பார்த்துக் கொள்வேன் என்று தன்னுடன் எடுத்துச் சென்றார். அது அங்கே இருந்தால் இங்கே கொண்டு வரச் சொல்லுங்கள்.
அய்யாச்சாமியிடமும் இதே தான். அவரும் ஒரு நோட்டைப் படித்து விட்டுத் திரும்ப கொண்டு வருகிறேன் என்று போனார். அவரே திரும்பவில்லை. அதே தான் இவர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.” 
அருணையிலிருந்து இறங்கி வரும் பகவான். அருகில் பக்தர் ஒருவருடன் மாதவஸ்வாமி
இதை சொல்லிய பின் பகவான் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். பகவானை ஒரு நிழல் போல 12வருடங்கள் தொடர்ந்த, மிகுந்த பணிவானவரும் மென்மையானவருமான ஒருவர் திடீரென்று எங்கேயோ போய் மறைந்தும் விட்டர் என்பதை அறிந்த போது ஆஸ்ரமத்தில் கண்ணீர் விடாதவர்கள் யாருமிருக்கவில்லை. குஞ்சு ஸ்வாமிஅங்கு போய் அவரின் காரியங்களைக் கவனித்து விட்டு ஒரு 8 மணியளவில் திரும்பி வந்து பகவானை நமஸ்கரித்து விட்டு மாதவஸ்வாமி மன அமைதிக்காக இங்குமங்கும்அலைந்து விட்டு, அதை அடைய முடியாமல் நான் வெகு காலம் வாழ்ந்திருக்கமாட்டேன்என்று சொல்லிப் பின் கும்பகோண மடத்திற்கு வந்தார். ஒருநாள் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு,  சோடா தண்ணீர் குடிக்கையில் மூச்சுவிட சிரமமிருப்பதாகச் சொல்லிப் பின் அவரைப் படுக்க வைத்தார்கள். அவர் நினைவு திரும்பவேயில்லை” என்று மடத்திலிருப்போர் சொன்னார்கள். அவர் உடலை நான் அங்கு செல்லும் வரை அப்படியே வைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் ஆன பின்னும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமலும் கெடாமலும் இருந்தது. அதை அடக்கம்செய்து விட்டுத் திரும்பி விட்டேன். அந்த நோட் எங்கு தேடியும் கிடைக்கவில்லை“. என்றார்.

ஜி.வி. சுப்பாராமய்யா நினைவுகூறும் பகவான்
ஒரு மதியம் ஸ்ரீ சுப்புலஷம்மா பகவானால் அன்புடன் பராமரிக்கப் பட்டு வந்த ஒரு வெள்ளை மயில் நம் மாதவஸ்வாமியாக இருக்கலாம்என்று எண்ணினார். நான் பின்னர் ஹாலுக்குள் நுழைந்த போது பகவான் ஒரு சிலர் அந்த வெள்ளை மயிலை மாதவஸ்வாமியின் மறு அவதாரம் என்று எண்ணுகின்றனர்என்று சொல்லிப் பின் அம்மயிலை மாதவாஎன்றும் அழைக்கலானார்
பகவானும் தொண்டனும்
1947 ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று நான் தெலுங்கில் அம்மயிலைப் பற்றி எட்டு விருத்தங்கள் செய்து அதை பகவானிடம் சமர்ப்பித்தேன். மயூரவிருத்தம் என்ற அதை பகவான் மிக சிலாகித்து அதை ஸ்ரீமதி லலிதா வேங்கடரத்னம் அவர்களிடம் கொடுத்து அவர்தம் வீணையை மீட்டி இதைப் பாடுமாறு பணித்தார். ஒரு அரை மணியில் அவர் வீணையுடன் வந்து பாடுவதற்குத் தயாராகி விட்டார். அப்போது மாதவா (வெள்ளை  மயில்) அங்கிருக்கவில்லை. பகவான் சொன்னார் கதாநாயகனின் புகழ் பாடுகையில் அவர் இங்கிருக்க வேண்டாமோ?” என்று சொல்லி எங்கிருக்கிறாய் மாதவா? வா!”என்றார்.
அதோ! மண்டபக் கூரையிலிருந்து மாதவா குதித்து நின்றார். லலிதாஅவர்கள் பாடுகையில் அவர் தம் தோகையை விரித்து நடனமாடத் தொடங்கினார். இவையனைத்தையும் ஒளி வீசும் கண்களுடன் பகவான் அமர்ந்து பார்த்திருந்தார். பாடல் முடிவுற்றதும் மயில் வீணையருகில் போய் அதன் கம்பிகளை அலகால் மீட்டத் தொடங்கியது. அதைக் கண்டு பகவான் மாதவா உங்களை மீண்டும் பாடுமாறு சொல்கிறார்எனவே லலிதா மீண்டும் பாடத் தொடங்கினார். மாதவா மறுபடியும் நடனமாட ஆரம்பித்து விட்டார்! அது கடவுளர்களும் கண்டு மகிழும் ஒரு அரிய காட்சியாக இருந்தது!”
~ நன்றி, சரணாகதி, ரமணாஸ்ரமம்
தமிழ், Featured

என்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?

என் பாட்டி சிறு வயதில் சொல்வதுண்டு. நீ பேசுவதெல்லாம் நல்லதாக இருக்கணும் என்று. ஏன் என்று கேட்டதற்கு ததாஸ்து தேவர்கள்வீட்டின் நாற்புறத்திலும் இருப்பார்கள். நீ என்ன சொன்னாலும் ததாஸ்து, ததாஸ்துஅதாவது அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றார். அதனால் தான் நம் வீடுகளில் மங்கல வாத்தியங்களை ஒலிப்பதும், மந்திரம், ஸ்லோகம் மற்றும் தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் என்று வரையறுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.
 
மிக நல்ல விஷயமாயிற்றே இது!
 
பல வருடங்கள் கழித்து, இப்போது நான் என் பாட்டியைக் கேட்கிறேன், “பாட்டி, என்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?”

பாட்டி: ஏண்டா?”

 
“பாட்டி, வீட்டிலே எப்போ பாத்தாலும் சீரியல் ஓடுது. அதில எப்போ பாத்தாலும் யாராவது அழறா. முன்னெல்லாம் வெறும் லேடீஸ் அழுகை தான் இருந்தது, இப்போவெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றார்ப் போலே ஆண்களும் போட்டி போட்டுக் கொண்டு அழுகிறார்கள். எந்த சீரியலைப் பார்த்தாலும் பொதுவாக இருப்பது இவை: ஆஸ்பத்திரி, யாராவது மண்டையில் கட்டுப் போட்டுக் கொண்டு இருப்பது, சீரியஸான நிலைமை, ஒரு பெண் இன்னொருத்தியை ஏதாவது செய்து தாழ்மை படுத்த விழைவது (கண்ணியமான சொல்லாக இருக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு இவ்வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறேன்), இன்னபிற. அதில் வரும் வசனங்கள், வார்த்தைகள் சொல்லுந்தரமன்று. (அவைகளை நான் இங்கு வரிசை படுத்தத் தேவையில்லை. நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் வீட்டிலேயோஅல்லது பக்கத்து வீட்டிலேயோ கேட்டுக்கொண்டிருக்கலாம்அப்படி ஒரு வாக்கியங்கள்.)
 
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் ததாஸ்து தேவர்கள் என்ன செய்வார்கள் பாட்டி? ததாஸ்து என்று சொல்வார்களா அல்லது கொஞ்சம் இண்டெலிஜென்ஸ் பயன்படுத்திப் பேசாமலிருப்பார்களா? அவர்களுக்குள்ளேயே ஒரு வேளை ஏங்கிக்கொண்டிருப்பார்களோ ஏதாவது நல்ல வாக்கியம் கேட்காதா, நாமும் ததாஸ்து ததாஸ்து என்று உளமாற சொல்ல மாட்டோமா?” என்று.
 
 
 
பாட்டி முறைத்தாள், “போடா, ஏதோ பொழுது போகறதுக்காக பாக்கறோம், அதைப் பெரிசா சொல்றியே? நீ பாக்கற இங்கிலீஷ் படங்கள் என்ன வாழுதாம்? எப்போப் பாத்தாலும் துப்பாக்கியும் கையுமாஅலையறான், படார் படார்னு சுடறான், இதுக்கு என்ன சொல்றாய்?”
 
“ஆனா இந்தப் படங்கள்ல சப் டைட்டில் போடறானே பாட்டி? டி.வியை சத்தமில்லாம வைத்தாக் கூடப் போதுமே, இந்த மாதிரி கீழ்த்தரமான, ஒரு குடும்பத்தில் பேச, கேட்கக் கூசும் வசனங்களை அவன் சொல்றதில்லையே?
 
பாட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள், மனதிற்குள் புத்திக்குத் தெரியுது, மனசு கேட்க மாட்டேங்குதேஎன்று நினைக்கிறாளோ என்னமோ? டீவி என்பது ஒரு கருவி தான். அதில் நல்லதைத் தேடுகிறோமா இல்லையா என்பது நம்கையில் தான் உள்ளது. புஷ்பக விமானம் ஒன்று தான். அது குபேரனிடம் இருப்பதற்கும் ராவணனிடம் இருந்ததற்கும் வித்தியாசம் உண்டில்லையா?
 
என்று தணியும் இந்த சீரியல் தாகம்?
 

Image Courtesy:
Smiley & Choice

தமிழ், Featured

பஸ்மாசுரனின் புஸ்வாணக் கதை

இக்கதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.
 
இக்கதையை ஏற்கனவே எழுதி பதிப்பித்திருந்தோம். ஆனால் தொழில்நுட்பக் காரணத்தால் பதிப்பித்தது தொலைந்து விட்டது. எனவே மறுபடியும்
 
தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாதிரி இருக்கிறதல்லவா? மேலே படியுங்கள்,  இத்தலைப்பை வைத்தற்கான காரணம் புரியும்.
 
முதலில் கதை:
பஸ்மாசுரன் தவம் செய்கிறான் சிவபெருமானை வேண்டி. நீண்ட, அரிய தவத்தினால் பரம்பொருள் மிக மகிழ்ந்து அவன் முன் வந்து என்ன வரம் வேண்டுமுனக்கு எனக் கேட்கிறார். அவனும் தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாக வேண்டும் என்கிறான். சிவபெருமான் வரமளித்து விடுகிறார். உடனே அசுரன், ஸ்வாமி இவ்வரத்தை சோதித்துப் பார்க்க விரும்புகிறேன், உங்கள் தலையில் கை வைத்துஎன்கிறானாம். உடனே சிவன் ஓடி விடுகிறாராம். பின் மோஹினி வந்து அசுரனை மயக்கி அவனை அவன் தலையிலேயே கை வைக்க வைத்து அழித்து விடுகிறாராம். இது கதை, ஆம். வெறும் கதை தான். ஏன் என்று பார்க்கலாம்.
 
Image Courtesy: MySchool.in.com
 
 
உண்மையும் உட்டாலக்கடியும்:
பரமேஸ்வரன் ப்ரோஸ் கான்ஸ்எல்லாம் பார்ப்பவரில்லையாம், உடனே வரமளித்து விடுவாராம்.  பின் அவஸ்தை படுவாராம். இது ஒரு சாராரின் திவ்யமான மூளைகளில் உதித்த கருத்து. இது ஒரு புறமிருக்க, இதில் உண்மை என்ன உட்டாலக்கடி என்ன என்றால், பரமேஸ்வரன் ஆஷுதோஷி (the one who is easily pleased) என்றழைக்கப் படுபவர். அதாவது மிக எளிதாக இரங்கி விடுபவர். அதனாலேயே அவருக்கு போலேநாத் என்ற பெயரும் உண்டு, அதாவது போலா (bhola) என்றால் innocent அல்லது குழந்தையைப் போன்ற என்று பொருள். Innocent God என்று ஒருவாராக சொல்வார்கள். எனவே இவரை மகிழ்விப்பது சுலபம். ராத்திரி ஒரு மரத்தில் ஏறி இலையைப் பறித்துக் கீழே போட்டவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி, திரியை தூண்டிய எலி பலி (மஹாபலி) ஆனது. கண்ணப்பர் மிகப் புனிதமான பக்தியுடன் கொணர்ந்த எச்சில் படுத்திய உணவை கண்ணப்பாஎன்று உளமார ஏற்றார். எனவே நாம் எதைக் கொண்டு பூஜித்தாலும் (கல்லை வைத்து அர்ச்சித்தவர் உண்டு!) உண்மையான பக்தி ஒன்றையே எதிர்பார்ப்பவர் அவர். இது பரமேஸ்வரனின் கருணை. ஆனால் அதே சமயம் குழந்தைத்தனம் அறியாத்தனம் என்று எப்படி ஆகும்? Innocent, but not naive என்று சொல்வார்கள். யாருக்கு பயமோ தயக்கமோ இருக்காது?
 • பெரிய பதவியில் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பொதுவாக,
 • எதையும் பற்றிக் கவலைப் படாத ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள், பெரியவர்கள்
 • குழந்தைகள்
                            இவர்களுக்குத் தான்.
 
ஆனால் இது யாவையுமே கொண்ட இறைவனுக்கு எதுக்காக ப்ரோஸும் கான்ஸும் பார்க்க வேண்டும்? பார்க்கப் போனால் அந்த அசுரன் பார்த்திருக்க வேண்டும் கான்ஸை. யாதுமே தாமாகியிருத்தலில், ப்ரோஸ் என்ன கான்ஸ் என்ன பார்க்க வேண்டியிருக்கிறது? அதனால் தான் டக்கென்று வரமளித்து விடுகிறார். பகீரதன் கங்கை, பிரம்மா எல்லோரையும் குறித்து தவமிருக்கையில் அவர்கள் எல்லோரும் கண்டிஷன் போடுகிறார்கள், ஆனால் சிவனை வேண்டிய மறுநொடி, “வரச்சொல் கங்கையை, நான் தாங்குகிறேன் அவளைஎன்று செஞ்சடை விரித்துத் தயாராகி விடுகிறார். 
 
இந்தக் குழந்தைத் தனமான இயல்பை இஷ்டத்துக்குத் திரித்துப் பண்ணிய கதை தான் பஸ்மாசுரனின் கதை என்பது எம் தாழ்மையான கருத்து.  இனி லாஜிக் மற்றும் காமன்சென்ஸ் பிரகாரம் பார்க்கலாம். முக்கியமாக அசுரனின் பக்கமாக முதலில் யோசிப்போம் லாஜிக்கை, பாவம்.
 
வரம்: யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாக வேண்டும்,  exception இல்லாமல்.
 
அசுர புத்திக்குத் தெரியாதது, மற்றும் இப்புஸ்வாணக் கதையைப் புனைந்தவர் யோசிக்காமல் விட்டது:
இவன் கேட்ட வரம் அடுத்தவரை இம்சிப்பது, ஆனால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை, உதாரணத்திற்கு இரண்யகசிபு கேட்டாற் போல என்னை இதால் கொல்ல முடியக் கூடாது, காலையில் கூடாது, இரவு ஆகாது, வீட்டுக்குள்ளே நோ நோ, வெளியில் வைத்துக் கொன்றால் ஆட்டத்திற்கு சேப்பு கிடையாது, ஆயுதம் வேண்டாம், இப்படிப் பலப் பல கண்டிஷன் போட்டுமே நாராயண நரசிம்ஹர் அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி customized ஆக அவனை வதம் செய்து விடுகிறார். நம் பஸ்மாசுரனோ பாவம் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை. நேரடியாக அஃபென்ஸ் வரம் கேட்கிறான். டிஃபென்ஸுக்கு ஒன்றுமே இல்லை. ஒரு பார்வையால் மன்மதனை எரித்தவருக்கு இது பெரும் விளையாட்டாக இருந்திருக்க வேண்டும், சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்துத் தான் இவ்வரத்தை அளித்திருக்க வேண்டும் அவர்.
 
சாத்தியக்கூறுகள்:
இறைவன் வரமளித்து விட்டார். இவன் யோசிக்க வேண்டாமோ, உடனே கையை வைக்கிறேன் என்கிறான். சிவன் சொல்லியிருப்பார் அப்பா குழந்தே, உன் வரத்திலுள்ள லூப் ஹோல் இது தான்‘, இது ஒரு பொடன்ஷியல் SPOF (Single Point of Failure). நான் நெற்றிக் கண்ணை ஒரு கால் பாகம் திறந்தாலே நீ பஸ்பமாகி விடுவாய். அதனால் இந்த விளையாட்டு தேவை தானா யோசித்துக் கொள்என்று கருணை கூர்ந்து சொல்லியிருப்பார். ஆனால் கதாசிரியருக்கு அவசரம், அசுரனுக்கும் அதனால் அவசரம், கை வைக்கக் கிளம்பி விட்டார்கள்.
 
ஒரு வேளை இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால், அது இவ்வாறாக இருந்திருக்க வேண்டும். நாம் சொல்வோமில்லையா குழந்தைகளிடம் நான் ரெடின்னு சொன்ன உடனே நீ என்னைப் பிடிக்க வறியா?” – இப்படி சொல்லி விட்டு ஓடி, போக்கு காட்டிப் பின் அதனிடம் அகப்பட்டுக் கொண்டாற்போல ஒரு பாசாங்கு செய்து அதை மகிழ்விப்போமே, அதைப் போல இந்த பஸ்மாசுரக் குழந்தையிடம் பரமேஸ்வரன் விளையாடியிருக்க வேண்டும்.
 
என்ன புரிகிறதா? ஏன் புஸ்வாணக் கதை என்று வைத்திருக்கிறதென்று, புஸ்வாணம் ஏதோ பெரிதாக நிலா வரைக்கும் போவது போல சத்தம் போடும், ஆனால் சில நொடிகளில் அமுங்கி அடங்கி விடும், அதைப் போல சென்சேஷனலாக ஒரு கதை, பரமேஸ்வரனே ஓடினாரா, ஏன் என்று கேட்போமில்லையா, அப்படி ஆரம்பித்து கொஞ்சம் லாஜிக் எல்லாம் பார்த்தால் புஸ்வாணமாகும் கதை தான் இது.
 
 
தமிழ்

பக்தி மணம் – ஸ்ரீ பெரியதாசர்

தஞ்சையை ஆண்ட கடைசி சில மன்னர்களில் ஒருவன் மன்னார் நாயுடு (சரித்திர ரீதியில் ஏதோவொரு ஜமீந்தாராகவும் இருக்கலாமென்றிருக்கிறது). தெய்வ பக்தியுள்ளவனாயினும் கூடாதார் நட்பு கொண்டவனாயிருந்தான்.   அவனிடம் சேஷாசல செட்டியார் என்பவர் ஷராப் ஆக இருந்து வந்தார். அவர்தம் மகன் பெயர் பெரியசாமி. மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர். தாமரை இலைநீர் போல உலகவாழ்க்கையில் இருந்து வந்தார். அவருடைய தெய்வ பக்தியைக் கண்ட மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கலாயினர். ஒரு நாள் அரசன் புலவர்களை நோக்கி  “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் தங்களால் பதிலளிக்க இயலாதென்றும் பெரியதாசர் போன்ற மகானைக் கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்கலாம் என்றும் உரைத்தனர். உடனே அரசன் அவரை அழைப்பித்து தன்கேள்வியைக் கேட்கவும் அவர்  “எனக்கு வைகுண்டம் எங்கிருக்கிறதென்று தெரியாது. ஆனால் கஜேந்திரன் ஆதிமூலமேஎனக் கூவிய உடன் சங்குசக்ரதாரியாய் எம்பெருமான் வந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது வைகுண்டம் இங்கிருந்து கூப்பிடும் தொலைவில் தான் இருக்க வேண்டும்என்றார். அரசனுக்கும் இப்பதில் திருப்தியளிப்பதாய் இருந்தது. அவருக்குப் பலவாறாய் சிறப்புகள் செய்வித்தான். இப்படிப்பட்டவர் தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்ற ஆசை அவன் மனதில் எழுந்தது. அவரைக் கேட்டாலோ நரசிம்ஹனைப்பாடும் வாயால் நரனைப் பாடுவதா?”என்று கூறிவிட்டார். அரசனின் கோபத்திற்கு தூபம் போடுவது போல சிலர்  “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனேஎன்று ஆழ்வார்கள் கூறியிருக்க இவனுக்கு எவ்வளவு திமிர்? என்று கூறவே அரசன் தண்டனைக்கான உத்தரவைப் பிறப்பித்தான். வீரர்களின் ஈட்டிகள் இவர்மீது பாய்ந்து கூர்மழுங்கி விழுந்தன. புலிக் கூண்டில் இட்டதும் புலி இவரைத் தொழுதது. நஞ்சிட்டனர். அடியவர்க்கு எதுவும் அமுதே என்றுஅதையும் அருந்தினார். யானைக்காலில் இடறச் செய்ய முயன்றனர். யானை இவரை சிம்மமாகக் கண்டு பயந்து ஒதுங்கியது. சூட்டுக்கோலால் சுடு போட்டனர். சீதோபவ ஹனூமத: என்று சீதம்மா முன்பு மாருதிக்குச் சொன்னாற் போல சூட்டுக்கோல்கள் குளிர்ந்து போயின. ஒன்றும் பலிக்காமல் போகவே கழுவில் இடுஎன்றான் அரசன். ஊர் மக்கள் அடியவருக்கா இந்தத் துன்பம் என்று வருந்திக் கண்ணீர் சொரிந்தனர். இவரோ நரசிம்ஹப் பெருமானையே தொழுது நின்றார்.

அரசவை.

மன்னன் இங்கு மிடுக்காய்அமர்ந்திருக்கிறான். திசை திறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கண் சீயம்என்று கம்பப் பெருமான் இரணியவதைப் படலத்தில் கூறியது போல இடியோசை போல ஓர் கர்ஜனை கேட்டது. கம்பீரமாய் அரசன் முன் தோன்றினார் நரசிம்மமூர்த்தி. பயத்தினால் நடுநடுங்கிய அரசன் குப்புற விழுந்து விட்டான். கையிலுள்ள சாட்டையினால் சுளீர்! சுளீர்!  என்று அவன் முதுகிலே அடிகள் விழுந்தன. அலறினான். நரசிம்மர்பெரியதாசனை அடித்தாயே! அவன் என்ன குற்றம் செய்தான், சொல்! சொல்!என்று மேலும் சாட்டையைச் சொடுக்கினார்.ஓடு! அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேள்என்று மேலும் ஒரு அடி அடித்து மறைந்து போனார் நரசிம்ஹஸ்வாமி.

 
‘நிறுத்து அவர்கழுவிலேற்றலை!” என்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினான் அரசன் . பெரியதாசர் தம் பாதங்களில் சடாரென்று விழுந்து மன்னிக்கும்படி கதறினான். அவரோநீரே பாக்கியசாலி, எனக்குக் காட்சி தராத எம்பெருமான் நரசிம்ஹமூர்த்தி உனக்கு தரிசனமளித்துள்ளார், நீரே பாக்கியவான்என்று அரசனை வணங்க கொலைக்களமாகவிருந்த இடம் கோயில் போலானது. 

இதன் பிறகு ஸ்ரீ ரங்கநாதரே அந்தணனாக வந்து ஸ்ரீரங்கம் வரும்படி இவரை அழைக்க, இவரும் பூலோக வைகுண்டத்தை அடைந்து அரங்கன் சேவையில் அகமகிழ்ந்தார். ஆழ்வார்கள் பாடிய பாடல்களை அரங்கன் முன் பாடி பரவசமான இவரை ஓரிரவில் நரசிம்ஹ வடிவமாகவே வந்து எம்பெருமான் ஆட்கொண்டார்.                                    நன்றி – ஸ்ரீ மஹா பக்த விஜயம்

தமிழ்

பால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்

 
 
1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி நானிருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். சில குஜராத்தி இளைஞர்கள் அவரைவழியனுப்ப வந்திருந்தனர். அவர்கள்  அந்த சன்யாசியை எனக்கு முறைப்படிஅறிமுகப்படுத்திய பின் பூனாவில் என் வீட்டில் தங்கியிருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். நாங்கள் பூனாவை அடைந்தோம். அந்த சன்யாசி என்னுடன் எட்டுஅல்லது பத்து நாட்கள் தங்கியிருந்த அவர் அடிக்கடி அத்வைதம் பற்றியும் வேதாந்தம்பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். சமூகத்தினருடன்கலந்து பழகுவதை அவர் தவிர்த்தார். அவரிடம்ஒரு சிறிதும் பணமிருக்கவில்லை. ஒருமான் தோல், ஒன்று அல்லது இரண்டு உடைகள், ஒரு கமண்டலம் – இவையே அவர் கொண்டிருந்தவை. பயணங்களின் போது யாராவது அவர்செல்லுமிடத்திற்கான பயணச்சீட்டை அளிப்பார்கள்.
 
ஸ்வாமிஜிஒரு முறை மஹாராஷ்ட்ரத்திலுள்ள பெண்கள் பர்தா முறையைப் பின்பற்றுவதில்லை என்பதில்மிகுந்த நம்பிக்கையைத் தெரிவித்தார். உயர் வகுப்பைச் சார்ந்த ஒரு சில மாதர்கள் முன்னாளைய புத்த பிட்சுக்கள் போலதங்கள் வாழ்க்கையை ஆன்மிகம், மதம்ஆகியனவற்றைப் பரப்புவதில் கழித்திருக்க வாய்ப்புண்டு. என்னைப் போலவே அவரும் ஸ்ரீமத் பகவத் கீதை யாருக்கும் துறவை போதிக்கவில்லைஎன்றும் மாறாக செயலில் பற்றற்று, அதனால்விளையும் பலனில் ஆசையற்று செயல் மட்டுமே புரியுமாறு உந்துவதாய்த் தான் நம்பினார்.
 
நான் அப்போது ஹீராபாக்கிலுள்ள டெக்கான் க்ளப்பில் உறுப்பினராய் இருந்தேன். அவர்களுடைய  வழக்கமான வாராந்திரசந்திப்புகள் ஒன்றில் ஸ்வாமிஜியும் என்னுடன் கலந்து கொண்டார். அன்றைய மாலைப் பொழுதில் அமரர் காசிநாத் கோவிந்த் நாத் தத்துவம் பற்றி ஒருசிறந்த உரையாற்றினார். யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஸ்வாமிஜி எழுந்து அவர் பேசியதின் மற்றைய ஓர் பரிமாணத்தை வெகுதெளிவாகவும் மணிப் பிரவாள ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தார். அங்கிருந்த அனைவரும் ஸ்வாமிஜியின் ஆற்றலில் வெகுவாய் கவரப்பட்டனர். அவர் சீக்கிரமே பின் பூனாவைவிட்டுச் சென்று விட்டார்.
 
இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பின் உலக சமய மாநாட்டிலும் பின்இங்கிலாந்து, அமெரிக்காவிலும் அதி மகத்தான வெற்றி பெற்றுஸ்வாமி விவேகானந்தர் தாய்நாடு திரும்பினார். ஒரு சிலசெய்தித்தாள்களில் அவரைக் கண்டு “இவர் என்னுடன்பூனாவில் தங்கிய அதே ஸ்வாமி தானோ?” என்று எண்ணிஅதை அவரிடமே கேட்டும் கல்கத்தா செல்லும் சமயம் பூனாவிற்கும் வருகை தருமாறும்வேண்டிக் கடிதமொன்று எழுதினேன். அதற்கு உணர்ச்சி பூர்வமான பதிலொன்றைஎழுதிய அவர் அந்த சன்யாசி தாமே என்றும் தற்போது பூனாவிற்கு வருகை தர இயலாமைக்குவருத்தமும் தெரிவித்திருந்தார். அந்தக்கடிதத்தைக் காணவில்லை. அது  கேசரி ப்ராசிக்யூஷனிற்குப் பிறகு (1897)  மற்றைய பொது மற்றும் தனிப்பட்ட பலவற்றுடன் அழிந்து போயிருக்கக் கூடும்.
 
இதற்குப்பிறகு ஒரு முறை கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்குபெறச் சென்றிருந்தசமயத்தில் சில நண்பர்களுடன் ராமகிருஷ்ண மிஷனின் பேலூர் மடத்திற்குச்சென்றிருந்தேன். எங்களை ஸ்வாமிஜிமிகுந்த வாஞ்சையுடன் வரவேற்றார். நாங்கள்தேநீர் அருந்தினோம். பேசிக்கொண்டிருக்கையில்ஸ்வாமிஜி நகைச்சுவையாக என்னை துறவறம் மேற்கொண்டு தன்னுடைய பணிகளை பெங்காலில்தொடருமாறும் தான் அதை மஹாராஷ்ட்ரத்தில் தொடருவாரென்றும் கூறி…”யாருக்கும் வெளி மாநிலங்களில்தங்களுக்குக் கிடைக்கும் செல்வாக்குத் தன் சொந்த மாநிலத்தில் கிடைப்பதில்லைஎன்றார்
 
~ நன்றி, வேதாந்த கேசரி, ஜனவரி 1934
From TheReminiscences of Swami Vivekananda
தமிழாக்கம் –  GnanaBoomi.com
தமிழ்

லோகம்மாள்

சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும் பகலும் அதை ஆயிரக்கணக்கான முறை ஜபித்து அம்மந்திர பலத்தாலேயே தன் உடல் முழுதும் எரிவது போன்ற வெப்ப உணர்வு தோன்றும் அவருக்கு.

பகவான் ரமணரின் புகைப்படத்தை லோகம்மா திருமங்கலதிதிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் கண்டார். இந்தப் பெண்மணி திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுள்ளவர். ஆனால் லோகம்மாளின் உறவினர் அவரை இவ்வம்மையாருடன் செல்ல அனுமதிக்கவில்லை.

தென்காசிக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கையில் யாரோ ஸ்வாமி சமாதியானதைச் சொல்லக் கேட்டு லோகம்மா பீறிடும் ஒரு கேவலை வெளியிட்டுப் பின் அமைதியாகி விட்டார். பின் பகவான் தன் முன் கையில் கைத்தடியும் கமண்டலமும் ஏந்திக் காட்சி தந்ததைக் கூறினார். அந்தக் காட்சி எவ்வளவு தத்ரூபமாய், நிஜம் போல நிகழ்ந்ததென்றால் லோகம்மா சுவாமி சமாதியானார் என்ற சேதி சொன்னவரைப் பார்த்து “பகவான் ரமணர் நம் முன்னால் நின்று கொண்டிருக்கையில் எவ்வாறய்யா நீ கூறலாம் இப்படியெல்லாம்?” என்று கடிந்து கொண்டார். இந்தக் குழப்பம் பின்னாளில் தீர்ந்தது. சமாதியானது சேஷாத்ரி ஸ்வாமிகள், பகவான் ரமணரில்லை என்பது. இருப்பினும் லோகம்மாவிற்கு பகவானை நேரடியாக தரிசிக்கும் சமயம் அப்போது வாய்த்திருக்கவில்லை.

பின்னாளில் தன் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட சமயத்தில் லோகம்மாள் ராமேஸ்வரத்திற்குப் பயணமானார். தன் கைம்பெண் வாழ்க்கையை இனித் தாள முடியாதென்று கடலில் பாய்ந்து உயிர்விடத் தீர்மானித்து, தன் முடிவை செயலாற்ற எத்தனிக்கையில் அவருக்கு “திருப்பதியிலிருந்து வரும் யாத்திரிகர்களுடன் திருவண்ணாமலை செல்ல வேண்டுமென்றும் அவர்தம் கனவு நனவாகும்” என்றும் ஒரு குரல் கேட்டது.

வெகு சீக்கிரத்திலேயே லோகம்மாள் பகவானின் பாதங்களையடைந்தார். அப்போது பகவான் அவர்தம் அருட்பார்வையால் லோகம்மாளை சுமார் பத்து நிமிடங்களுக்கு இடைவிடாமல் நோக்கினார். லோகம்மாள் பலமுறை தன் விழிகளை பலவந்தமாய் மூடிக் கொள்ளுமளவிற்கு ஒரு ஒளி அவர் கண்களில் தெரிந்தது. என் கண்கள் முழுதும் கண்ணீரால் நிரம்ப, நான் பகவானை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.” எதற்காக இத்துணை நாளும் ஏங்கினாரோ அதை ஒரு சில நொடிகளில் அருளிவிட்டார் பகவான். லோகம்மாளின் வாழ்க்கை அத்தோடு முழுவதுமாய் மாறிவிட்டது.

(பகவானின் கண்களை உற்று நோக்குங்கள். அதிலுண்டாகும் மாற்றம் கண்டு அதிசயித்துப் போவீர்கள்.)

இச்சமயங்களில் லோகம்மாள் ஆஸ்ரமத்து சமையலறையில் தங்கி சேவை செய்து வந்தார். வீடு திரும்பும் வேளையில் பகவான் அவருக்கு “உபதேச மஞ்சரி”  தந்தருளினார். பின்னாளில் லோகம்மாள் ஆஸ்ரமம் வந்து மாதக்கணக்கில் தங்குவார், அச்சமயங்களிலெல்லாம் பகவான் அவருக்கு ஆன்மிக வழிகாட்டியாயிருந்தார்.

~ நன்றி – ரமணாஸ்ரமம் | சரணாகதி | The Mountain Path