ரமண மஹரிஷியுடன் நான் – 1 – பால் ப்ரண்டன்

Read the English version of this story  here.

ரமண மஹரிஷியை பார்த்து, பேசி, தொண்டு செய்து, வாழ்ந்து, அவருடய பிரத்யக்ஷத்தின் அருகிலும் இருந்த புண்ணியசாலிகளின் மகத்தான அனுபவங்களின் தொகுப்பை வழங்கும் பேற்றினை ஞானபூமி வணக்கத்துடன் போற்றுகிறது. இவற்றில் தொனிக்கும் வியப்பும் பிரமிப்பும் படிப்பவரின் உள்ளத்தைக் கிளறி ஒரு மகோன்னதமான உணர்வைத் தோற்றுவிக்கும். மஹரிஷியின் ஞானம், தத்துவம் மற்றும் தெய்வீகத்தன்மை முதலியவையும் இதில் ஆங்காங்கே பளிச்சிடும்.

மூலம் – Face to face with Sri Ramana Maharishi, ரமண கேந்திரம், ஹைதராபாத்

1 – பால் ப்ரண்டன்

பிரிட்டிஷ் பத்திரிக்கைக்காரரான டாக்டர் பால் ப்ரண்டன் (1898-1981) பாரதத்தின் ஆன்மிகத்தின் பால் ஈர்க்கப்பட்டு 1930ல் இங்கு வந்தார். பதினோரு புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர் நம்முள் உறையும் ஆன்மா பற்றி குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். தியானத்தை வெளிநாட்டினருக்கு அறிமுகம் செய்தவர் என்று பொதுவாக அறியப்படும் இவர், “ரமணர் மேலை நாட்டில் ஒளிக்காகக் காத்திருந்த ஆன்மாக்களுக்கு சென்றடைந்த ஆன்மிக டார்ச். அவ்வொளியை கொண்டு சென்ற முக்கியத்துவம் ஏதும் இல்லாத வெறும் கேரியர் மட்டுமே நான்” என்கிறார். The Paul Brunton Philosophic Faoundation, நியூயார்க் அவர் காலத்திற்குப் பிறகு அவர் எழுத்துக்களை 16 பகுதிகளாகப் பதிப்பித்தது. இவருக்கு அமெரிக்காவின் ரூஸ்வெல்ட் காலேஜ் தத்துவத்தில் டாக்டரேட் பட்டமும் தந்து கெளரவித்தது.

தம்முடைய முதல் வருகையின் போது பால் ப்ரண்டன் பல்வேறு சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்துப் பின் ரமணரையும் சந்தித்தார். (மஹரிஷியை சந்திக்கும் முன் பால் காஞ்சிக்குச் சென்றதாயும் மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவரிடம் மறுபடி மறுபடி திருவண்ணாமலை சென்று ‘பால ஸ்வாமி’ யை சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும் சொல்வர்). மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு அருகில் ஒரு குடிலில் தங்கிய பால் ப்ரண்டனுக்கு அச்சமயங்களில் வருகை தரும் மக்கள் கூட்டம் வெகு குறைவாக இருந்ததால் மஹரிஷியிடம் நிறைய அளவளாவ முடிந்தது. மஹரிஷியின் தெய்வீகத் தன்மை, அதன் பாதிப்புகள் குறித்து உணர்ச்சிமயமற்ற, சார்பற்ற, நெருங்கிய, ஒளியேற்றக் கூடிய வகையில் A Search in Secret India வில் குறிப்பிடுகிறார்.

“இவரிடம் உள்ள ஏதோ ஒன்று என் சிந்தையை இரும்புக் கிராதிகளை ஈர்த்து இருக்கும் காந்தம் போல பிடித்து வைத்திருக்கிறது. என்னால் அவரிடம் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. என் மனதினுள் ஏற்படும் அமைதியான, ஆனால் எதிர்ப்புகளற்ற மாற்றத்தை நான் நன்கு உணர்கிறேன். ஒன்றின் பின் ஒன்றாக நான் வெகு ஜாக்கிரதையாக கோர்த்து வைத்து தொடுக்கவிருந்த கேள்விகள் அனைத்தும் வீழ்ந்து போகின்றன. அமைதி என்னும் ஆறு ஒன்று எனக்கருகில் சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

என் சுயத்தினுள் ஒரு பேரமைதி ஊடுறுவிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன். எண்ணக் குப்பைகளால் முட்டி மோதப்பட்ட என் மூளை ஓய்வை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு திடீர்த் தெளிவு ஏற்பட்ட எனக்குள் ‘அறிவானது தானே ஒரு பிரச்சினையத் தோற்றுவித்துக் கொண்டு அதனைத் தீர்க்க அதுவே படாத பாடு படுவதை’ பார்க்க முடிந்தது. சிந்தித்து, ஆராய்ந்து தெளிவு பெறும் சுயஅறிவு பற்றிய மிக உயர்ந்த எண்ணம் உடைய என் போன்றவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பிட்டு சொல்லக் கூடியதாய் இருக்கிறது.

மெள்ள ஆழமாகிக் கொண்டிருக்கும் அவ்வமைதியிடம் நான் சரணாகதி அடைகிறேன். மனம் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சினைகள் என்னும் சங்கிலி உடைத்துத் தூர எறியப் பட்டுவிட்டதால் காலப் பிரமாணம் என்னுள் எவ்வித எரிச்சலையும் தோற்றுவிக்கவில்லை.

மெள்ள மெள்ள ஒரு கேள்வி மேலெழுகிறது. ஒரு மலரானது தன் இதழ்களிலிருந்து வெளிப்படுத்தும் சுகந்தம் போல இவர், இந்த மஹான், தன்னிலிருந்து இந்த ஆன்மிக அமைதியை வெளிப்படுத்துகிறாரா?! அலைக்கழிந்து கொண்டிருந்த என் ஆன்மாவை ரேடியோ ஆக்டிவிட்டி போல, டெலிபதி போல தொடர்பு கொள்ளும் இந்த அசைவற்ற அமைதி இவரிடம் இருந்துதான் வருகிறதோ என்று எண்ணி வியந்திருந்தேன். இவ்வமைதி என்னை மூழ்கடிக்கிறது, என்னுள் மூழ்குகிறது.

மஹரிஷி திரும்பி என் முகத்தை, என் முகத்தினுள் நோக்குகிறார். நான் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் அவரை பதில் நோக்குகிறேன். அந்தக்கணம் என் இதயம், மனதினுள் வெகு வேகமான, ஒரு மர்மமான மாற்றம் உருவாகிக் கொண்டிருப்பதை உணரத்தொடங்குகிறேன். இதுநாள் வரை ஒட்டிக்கொண்டிருந்த பழைய காரணகாரியங்கள் விலக ஆரம்பித்தன. எங்கெங்கெலாமோ என் கால்களை அலைய வைத்த பல்வேறு ஆசைகள் வெகு வேகமாக மறையத் தொடங்கியிருந்தன. என்னை செலுத்தி வந்த என் விருப்பு வெறுப்புகள், தப்பர்த்தங்கள், சுயநலம், அனைத்தும் சூன்யத்தில் மறைந்தன. இனங்கானமுடியாத ஓர் அமைதி என்னில் படர்ந்தது. வாழ்வில் இதற்கு மேல் வேண்டுவது ஒன்றுமில்லை என்பதை நான் நன்கறிந்தேன். 

இம்முனிவர் ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கிறார், ஆனால் என்னால் அது என்ன என்பதை தீர்மானமாக சொல்ல முடியவில்லை. அது ஸ்தூலமன்று, எண்ணத்திற்குள் அடங்காததும் கூட, ஒருவேளை ஆன்மிகமாயிருக்கலாம். அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு ப்ரத்யேக உணர்வு என்னை துளைத்து என் இதயத்தை தெளிவில்லாத ஆனால் ஒரு மிகவுயர்ந்த எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கிறது.

நான் முனிவரை நோக்குகிறேன். அவர் மாபெரும் ஒரு உயரத்தில் அமர்ந்து வாழ்க்கை என்பதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் இதுவரை சந்தித்த அனைவரிடமும் இல்லாத ஒரு மர்மமான ஒன்று இவரிடம் உள்ளது. ஆண்டாண்டுகளாக இவருடன் இருக்கும் பல அடியார்கள் சூழ்ந்துள்ள போதிலும் அவர் அனைத்திலிருந்தும் விடுபட்டு தனிப்பட்டு இருக்கிறார். சில சமயங்களில் எனக்கு இவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதராக இருக்கக் கூடாதா, நம்மால் கணிக்கக் கூடிய ஒரு எல்லையில் இருக்கக் கூடாதா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறது.

அது ஏன் இவரின் அருகாமையில் எனக்கு ‘ஏதோ ஒரு மகத்தான் வெளிப்படுத்தல் ஏற்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தோன்றிக் கொண்டே இருக்கிறது? இம்மாமனிதர் தம்மை அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டார். யாரும் இவரைத் தொட முடியாது. இவர் பேசுகையில் தத்துவாச்சாரியார் போலவோ, ஏதோ கொள்கையை விவரிக்கும் பண்டிதர் போலவோ அல்லாமல் தன் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுகிறார்.

நான் ஆஸ்திகனல்ல, ஆனால் ஒரு வண்டு நன்கு மலர்ந்த தேனுடைய மலரில் இருந்து தன்னைத் தானே நிறுத்திக் கொள்ள முடியாதோ அது போல மெள்ள அதிகரிக்கும் ஒரு வியப்பு என் மனதைக் கெளவுவதை தடுக்கவே முடியவில்லை. அவர் அமர்ந்திருக்கும் அறையில் சூழ்ந்துள்ள ஒரு சக்தியானது என்னை வெகு ஆழமாக பாதிக்கிறது. என்னால் ஒன்றை உறுதியாக, எந்த சந்தேகமும் தயக்கமுமின்றி கூற முடியும், இந்த சக்தியின் ஊற்று மஹரிஷியைத் தவிர வேறெங்கிலும் இருந்து வரவில்லை.

அவர் கண்களில் தென்படும் ஒரு அசாதாரணமான ஒளி என் மனதில் வியத்தகு உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது, இவரால் என் இதயத்தில் பார்க்க முடிந்தது எல்லாம் எனக்குத் தெரிகிறது. அவருடைய ஆழ்ந்த பார்வை என் எண்ணங்களை, உணர்வுகளை, ஆசைகளை ஊடுறுவுகிறது, என்னால் ஏதும் செய்ய முடியவில்லை அதன் தீர்க்கத்தின் முன்னால்.

முதலில் அப்பார்வை சிறிது சங்கடப் படுத்துகிறது, இவர் நானே மறந்த என் கடந்தகால பக்கங்களைப் பார்க்கிறார் என்று உணர்கிறேன். எனக்கு நிச்சயம் தெரியும், இவர் அனைத்துமறிவார். என்னால் தப்ப முடியாது, ஏனோ நான் தப்ப விரும்பவும் இல்லை. இவர் என் மனதை தன்னுடன் இணைக்கிறார், என் இதயத்தை தான் எப்போதும் இடைவிடாது அனுபவிக்கும் அந்தப் பேரமைதியை அனுபவிக்கத் தூண்டுகிறார். இப்பேரமைதியில் நான் லேசானதாகவும் உயர்ந்த நிலையிலும் இருப்பதை உணர்ந்தேன். காலநேரம் என்பது அசையாது நின்றுவிட்டது. இதயமானது விடுதலையடைந்து இருக்கிறது. இனி ஒருபோதும் நான் கோபம், தீராத ஆசையினால் விளையும் துன்பம் என்பது என்னைத் தீண்டாது. என் மனது மஹரிஷியில் ஆழ்ந்து விட்டது, எனவே ஆத்மானுபூதி என்பதை மட்டுமே அது உணரும். என்ன ஒரு பார்வை இவருடையது? மந்திரக்கோல் கொண்டு அசைத்தது போல மகத்தானதொரு ஒரு உலகை என் ஊனக்கண்ணுக்குக் காட்டி விட்டாரே!

மஹரிஷியுடன் பல வருடங்களாக இருக்கும் அடியார்கள் அவருடன் எப்படி வெகு குறைவான வார்த்தை பரிமாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளார்கள் என்று என்னையே நான் பலமுறை கேட்பதுண்டு, குறைவான செளகரியம், வெளிப்புற செயல்பாடுகள் ஏதும் இல்லாத போது எப்படி அது என்று. ஆனால் இப்போது புரிகிறது, எண்ணங்களால் கூட அல்ல, இவர்கள் அனைவரும் ஒளியேற்றப்படுகிறார்கள் – இத்தனை ஆண்டுகளாக இவர்கள் அனைவரும் அமைதியான ஆனால் ஆழமான பலன்களை அனுபவித்து வருகிறார்கள், பாக்கியசாலிகள்.

இதுவரை ஹாலில் இருந்த அனைவரும் மரணித்தது போன்ற அசைவற்ற நிலையில் இருந்தார்கள். எப்போவாவது யாரேனும் எழுந்து வெளியே செல்வதுண்டு, ஒருவர் செல்ல, பின் மற்றொருவர் சிறிது கழித்து, இப்படியே அனைவரும் சென்றுவிட்டனர். இப்போது நான் மட்டும் மஹரிஷியுடன்! இப்படி இது வரை நடந்ததேயில்லை. அவர் பார்வையில் ஒரு மாற்றம். எப்படி காமிராவின் லென்ஸ் குவிந்து பின் ஓரிடத்தில் நிலைத்து நிற்குமோ அப்படி என்னில் நிலைத்து விட்டது. ஏறக்குறைய மூடிய நிலையில் இருக்கும் இமைகளின் நடுவில் இருந்து ஒரு தீர்க்கமான தீக்ஷண்யம், சல்லென்று அதிகரித்தது. திடீரென்று என் உடம்பு மறைந்து விட்டது, நாங்களிருவரும் அண்ட வெளியில் இருக்கிறோம்!

இது ஒரு முக்கியமான தருணம்! நான் தயங்குகிறேன், இந்த நிலையை துண்டித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன். அம்முடிவு சக்தியளிக்க இதோ மீண்டும் சதைப்பற்றுள்ள நான், அதே ஹாலில். ஒரு வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை. நான் முயன்று, பின் எழுகிறேன் அமைதியாக. கிளம்பும் சமயம். அவருக்குத் தலை வணங்கி விட்டு வெளியேறுகிறேன்.

~ தொடரும்

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *