ரமண மஹரிஷியுடன் நான் – 2 – பால் ப்ரண்டன்

Read the second part of the English version here.

பின்வரும் நிகழ்வுகள் ப்ரண்டன் சில மாதங்கள் கழித்து இரண்டாம் முறை வருகை தந்து ஸ்ரீ ரமணருடன் தங்கியது பற்றியது.

இவ்விடத்தின் ஒரு வித மர்மமான சூழ்நிலை மற்றும் சாத்வீகமான அதிர்வலை மெல்ல ஆனால் சீராக என்னில் படருவதை கவனிக்கத் தவறியதேயில்லை, நான் என்ன செய்து கொண்டிருந்த போதிலும். மஹரிஷி முன் சும்மாவேனும் அமர்ந்திருந்த போதிலும் ஒரு பேரமைதி நிலவுவதை நன்கு அனுபவித்தேன். கவனத்துடனும் பல முறை ஆராய்ந்த பின்னரும் சந்தேகமில்லாத தெளிவு ஏற்பட்டது, ஒரு எப்போதெல்லாம் இவரின் சமீபம் ஏற்படுகிறதோ அப்போது ஓர் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகிறது. அது வெகு செளகரியமாயும், எவ்வித சந்தேகங்களுமின்றி இருக்கிறது. என் பகுத்தாராயும் அறிவுக்குப் பல மடங்கு பெரிதான ஓர் சக்தி என்னை அதில் வியப்பிலாழ்த்தி கடைசியில் மூழ்கடிக்கிறது. ஒரு முடிவில்லாத விளையாட்டின் அங்கமே என் கேள்விகள் என்ற விழிப்புணர்வு உண்டாகிறது, முடிவில்லாத எண்ணங்கள், என்னுள்ளேயே ஒரு தெளிவான கிணறு இருக்கிறது, அது என் எல்லா தாகங்களுக்கும் ஏற்ற தண்ணீரைத் தரும் ஆதலால் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு என் சுயத்தின் நிஜ ஸ்வரூபத்தை அறிய முற்பட்டேனானால் போதும். எனவே நான் அமைதியாகக் காத்திருக்கிறேன்.

எனக்கு மற்றொன்றும் நன்கு தெரியும். என்னுள் திடீரென்று வியாபித்திருக்கும் இந்த உயர்ந்த அனுபவம் இம்மர்ம மனிதரிடத்திலிருந்தே வரும் ஒரு சிற்றலை தான். மஹரிஷி என்னிடம் ஒரு முறை சொன்னார், “மனிதனிடத்தில் இருக்கும் பெரிய தவறு என்னவெனில் அவன் தன்னை வலிமையற்றவன், பாவி என்று எண்ணிக் கொள்வது தான். ஒவ்வொரு மனிதனும் புனிதன், அளப்பறிய சக்தியுடையவன். வலிமையற்றதும் கொடியதுமானவை அவனது பழக்கங்கள், ஆசைகள் மற்றும் எண்ணங்களே, அவை அவனல்ல!” – இச்சொற்கள் புத்துணர்ச்சியைத் தூண்டுவதாய் இருந்தன. இவை வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் ஏற்றுக் கொண்டே இருக்க மாட்டேன், மாறாக அதை மறுத்து வாதிடவும் செய்வேன். ஆனால் என்னுள் ஒன்று இம்முனிவர் சொல்வது தம்முள் ஆழ்ந்திருந்த ஆன்மிக அனுபவங்களின் சாரமாக அன்றி ஏதோ ஒரு தத்துவ ஞானி தன் கருத்தை எடுத்து விடுவதாகத் தோன்றவில்லை. மஹரிஷியின் வாழ்வு பெரும்பாலான மேலை நாட்டினருக்கு ஏதோ வீணடிக்கப் பட்டதாய் தோன்றாது, இம்மாதிரி ஒருவர் முடிவற்ற சுழற்சி போன்ற நம் வாழ்வை தூரத்தில் இருந்து பார்த்து அலசுவது வெகு நன்மையாய் இருக்கும். கானகத்தில் இருக்கும் தன்னை வென்ற ஒரு முனிவர் உலகாயதத்தில் சுழலும் ஒரு முட்டாளை விட எவ்வளவோ மேலானவர்.

ஒவ்வொரு நாளும் மஹரிஷியின் ஆன்மிக மேதமை பற்றிய புரிதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவரின் அமைதியும் மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பது பழகி விட்டது. ஒரு நாள் முழுதுமாய் அவர் பேசும் வார்த்தைகளை எண்ணி விடலாம்.

நான் கவனித்த மற்றொரு விஷயம், மஹரிஷியின் வழிமுறை பண்பட்ட, புண்பட்ட ஆத்மாக்களுக்கு மெளனத்தின் மூலம், சீரான, தடங்கலற்ற அருட்பேரினை என்பதையும் கவனிக்க முடிந்தது. என்றாவது ஒருநாள் அறிவியல் இந்த மர்மத்தை விவரிக்கலாம்.

அவருடைய வெறும் இருப்பே பலருக்கும் ஆன்மிக உத்தரவாதத்தை, உற்சாகத்தை, நம்பிக்கையைத் தந்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக எந்த நம்பிக்கையைப் பின்பற்றுவோரும் இவரிடம் தம் நம்பிக்கை பற்றிய புதிய புரிதலும் பற்றும் ஏற்படுகிறது. அவருக்கு எல்லோரும் ஒன்றே, க்றிஸ்துவை க்ருஷ்ணருக்கு எவ்விதத்திலும் குறைவாக மதிப்பிடுவதில்லை அவர்.

மஹரிஷியின் அருகாமையில் தியானம் செய்யும் போது என் எண்ணங்களை மனதின் புதிய ஆழத்திற்கு செலுத்துவதைக் கற்றேன். இப்படி ஓய்வாக அமர்ந்திருக்கும் சமயங்களில் என் மனதினை அவர் தன் வளிமண்டலத்தின் பால் ஈர்ப்பது எனக்கு மறுபடி மறுபடி புலனாகியது. இம்மாதிரி தருணங்களே இவருடைய மெளனம் இவர் பேசுவதை விட எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் இந்த சக்தியானது எவ்வளவு பெரியது என்றால் அவர் என்னிடம் மிகுந்த சங்கடமளிக்கும் எதையாவது உத்தரவிட்டாலும் அதை செவ்வனே செய்து முடித்து விடுவேன். ஆனால் மஹரிஷி தன்னிடம் கீழ்ப்படியும் கூட்டத்தை உருவாக்குவதில் சிறிதளவும் நாட்டம் கொள்ளவில்லை, மாறாக அனைவரிடத்திலும் அளவற்ற சுதந்திரத்தையே விரும்பினார். இவ்விதத்தில் இந்தியாவில் நான் சந்தித்த பல ஆசான்கள், யோகிகளிடத்திலும் இவர் முற்றிலும் வேறுபடுகிறார்.

அவர் கூற்று இது தான்: “நான் யார்?” என்ற விசாரத்தை இடைவிடாது மேற்கொள். உன் சுயத்தை முற்றிலும் அலசு. உன்னுள் எங்கிருந்து அந்த ‘நான்’ எழுகிறது என்று பார். தியானம் மேற்கொள், கவனத்தை உள்நோக்கித் திருப்பு. அந்த உள்ளுணர்வைப் பின்தொடர், எண்ணம் மறையட்டும், மறைந்து உன்னை உன் இலக்கினை அடையச் செய்யும்.”

நான் என் எண்ணங்களினால் அலைக்கழிக்கப் பட்டு பின் மெள்ள என் மனதின் ஆளத்தினுள் செல்ல ஆரம்பித்தேன். மஹரிஷியின் அருகாமையின் பலத்தால் என் தியானங்கள் களைப்படைதல் குறைவாகவும் பயன் அதிகமாகவும் உருவெடுத்தன. ஒரு தொடர்ந்த எதிர்பார்ப்பும், வழிநடத்தப் படுகிறோம் என்ற நினைவும் என்னுடைய முயற்சிகளுக்கு வெகு உற்சாகமளிப்பதாய் இருந்தன. சில வித்தியாசமான நேரங்களில் உணரமுடியாத மஹரிஷியின் சக்தி என்னை நன்கு பாதிப்பதையும், அதன் விளைவாக என் சுயத்தை சுற்றியுள்ள எல்லைக்கோட்டை இன்னமும் ஆழமாக துளைக்க முடிந்தது.

இவரை நன்கு கவனிக்கையில் ஏதோ முன்காலத்தில் தங்கச் சுரங்கத்தைக் கண்டது போல ஆர்வமடைந்த குழந்தை போல் தெரிகிறது. ஏதோ தென்னிந்தியாவின் ஒரு மூலையில் ஆரவாரமற்ற இந்த சிற்றூரில் என்னை இந்தியாவின் ஆன்மிக பெரியோர்களில் கடைசியில் ஒருவரிடம் சேர்த்து இருப்பது மெள்ளத் தெளிவாகிறது. இம்மஹரிஷியின் இருப்பு இம்மாபெரும் நாட்டின் பண்டைய ரிஷிகளை என் அருகே கொணர்ந்தது போல் உள்ளது. இவரின் மிக அற்புதமான இயல்பில் ஒன்று மறைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இவருடைய ஆழமான ஆன்மா, பார்ப்போரை இவர் உயர்ந்த ஞானத்தின் இருப்பிடம் என்று உடனே நம்பவைக்கும். சில சமயங்களில் இவர் ஏதோ ஒரு தொலைவிலிருப்பது போல் தோன்றுகிறார், சில சமயங்களில் இவருடைய ஊடுறுவும் பார்வை என்னை இரும்பு கிராதி போலக் கட்டி வைக்கிறது. என்னை நான் இவரிடத்தில் சரணடைய கற்கிறேன். எனக்கு இவரை மிக மிக பிடித்துப் போனதன் காரணம் இவருடைய எளிமை, அடக்கமான இருப்பு, இருப்பதிலேயே மிகவுயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாய் இருந்தும் இவர் இந்தியர்களை மிகவும் கவரும் சித்துகளையோ சித்தாந்தங்களைப் பற்றிய வியாக்கியானங்களையோ தருவதில்லை, மேலும் தன்னை முன்னிலைப் படுத்தும் எந்த செயலையும் இவர் செய்வதில்லை.

எனக்குத் தோன்றுவதெல்லாம், மஹரிஷியைப் போன்றவர்கள் சுலபத்தில் எல்லோருக்கும் கிடைக்காத, தொன்று தொட்டு வரும் தெய்வீக செய்தியொன்றை தரும் பணியைச் செய்ய வருபவர்கள். மேலும் இம்மாதிரி முனிவர் நமக்கு எதையோ வெளிப்படுத்த்வே வருகிறார்கள், நம்மிடம் எதையும் விவாதிக்க அல்ல! எப்படி இருப்பினும், இவருடைய போதனைகள் எனக்கு வெகு ஏற்புடையதாய் இருக்கிறது. இவர் எந்த அமானுஷ்ய சக்தியையோ குருட்டு நம்பிக்கையையோ வேண்டுவதில்லை. முக்கியமாக, இவர் பலரும் முயன்று, பிரவேசித்து சின்னா பின்னமான சித்து வேலைகளை அறவே தவிர்க்கிறார். இவர் சொல்லும் முறை தன்னாய்வு, எல்லோராலும், எங்கேயும், பழைய, புதிய என்று எப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்டவராயிருப்பினும் பின்பற்றக் கூடிய முறை, இதன் மூலம் ஒருவரால் தன் நிஜமான இயல்பை கண்டுகொள்ள முடியும். நான் மறுபடி மறுபடி உணர்வது இதைத்தான், மஹரிஷியின் மனதானது என் மனதுடன் தொடர்பு கொண்டு எதையோ தருகிறது, எங்களுக்கிடையில் எந்தவொரு வார்த்தைப் பரிமாற்றமும் இல்லாத போதும்!

ஆன்மிக ரீதியில் என் வாழ்வு அதன் உச்சத்தை எட்டுகிறது. நான் ஹாலுக்குள் நுழைந்து உடனே தியானம் செய்யும் நிலையில் அமர்கிறேன். கண்களை மூடிய உடனே அடர்த்தியான உள்நோக்கிய உணர்வொன்று என்னை வியாபிக்கிறது. என் மனக்கண்ணுக்கு முன் அமர்ந்திருக்கும் மஹரிஷியின் உருவானது மிகத் தெளிவாக மிதக்கிறது. அவருடைய மிக அருகாமையை உணர்ந்த நிலையை மட்டும் விட்டு விட்டு பின் அவ்வுருவம் மறைந்து விடுகிறது. இன்றிரவு மனங்குவிந்த நிலையை ஒரு சொடக்குப் போடுவதற்குள் அடைந்து விட்டேன். ஏதோ தடுக்கவியலாத புதிய சக்திமிக்க ஆற்றல் ஒன்று என் உள் உலகத்தினுள் என்னை அளவில்லாத வேகத்துடன் உள்ளெடுத்துச் செல்கிறது. அடுத்த கட்டத்தில் நான் என் மனதினை விட்டு, என் எண்ணங்களை விட்டு விலகிய நிலையில், நான் எண்ணுவதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெருமைக்குரிய, ஆனால் சாதாரணமான இயல்பான சிந்திப்பது என்பது இப்போது தப்பிக்க வேண்டிய ஒன்று என்பதையும், எப்படி அதனுள் நானே தெரியாமல் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அதிரவைக்கும் தெளிவுடன் கண்டு கொண்டிருக்கிறேன்.

ஏதோ அறிவு வேறு யாருடையது போல வெளியே நின்று அதன் ஒவ்வொரு செயலையும், எப்படி எண்ணம் உருவாகி பின் மறைகிறது என்பதைப் பார்ப்பது வெகு வினோதமாயிருக்கிறது. வேறொருவர் நம் மனதின் அடியாழத்தினுள் துளைத்து பார்க்க முடியுமென்பது அதை விடவும் வினோதம். ஏதோ ஒரு கொலம்பஸ் வந்து ஆளில்லா இடத்தில் தடாரென்று இறங்கப் போவது போலத் தோன்றுகிறது. கடைசியில் அது நடக்கிறது. நான் மிக அமைதியாக ஆனால் பெரும் உணர்வுடன் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவனாயும் இருக்கிறேன். என் உணர்வு நிலை குறுகிய ஒரு கூண்டுக்குள் இருந்து விசாலமான ஒன்றாக, அனைத்தையும் அணைக்கும் பேருணர்வாகத் தோன்றுகிறது. என் சுயம் என்பது இன்னமும் இருக்கிறது, ஆனால் அது மாறி விட்டிருக்கிறது, மிக மிக பிரகாசமான ஒரு சுயமாய் இருக்கிறது. இதனுடனுன் உணரப் பெறும் மாபெரும் சுதந்திரம் ஒன்று, இங்கும் அங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருக்கும் எண்ணம் என்பதே இல்லாமல் சிறையிலிருந்து வெளிவந்து சுத்தமான காற்றை சுவாசிப்பது போல ஒரு சுதந்திரம்!

உலகாயத ப்ரக்ஞைக்கு வெளியில் என்னை நானே கண்டுகொண்டேன். இதுகாறும் என்னைப் பேணி வந்த இப்பூமிக் கிரகமானது மறைந்து விட்டது. நான் ஒரு பெருங்கடல் போன்ற பேரொளிக்கு நடுவில் இருக்கிறேன். அவ்வொளிதான் முதற்பொருள், மற்றைய அனைத்து உலகையும் படைக்கும் முதற்பொருள் என்பதை நினைவற்ற நிலையில் உணரவே செய்கிறேன். இது விவரிக்க இயலாத முடிவேயில்லாத பெருவெளியில் வியாபித்து முற்றிலும் உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது. நான் ஒரு தெய்வீக இன்பத்தின் மடியில் இளைப்பாறுகிறேன். அமிர்தம் பருகியவன் போல நேற்றைய கெட்ட நிகழ்வுகள், நாளை பற்றிய கவலைகள் எல்லாம் மொத்தமாக மறைந்து விட்டன. நான் ஒரு தெய்வீக சுதந்திரத்தையும் விவரிக்க முடியாத பேற்றையும் அடைந்து விட்டேன். என் இருகரம் கொண்டு அனைத்தையும் அணைக்கத் தோன்றுகிறது. அனைத்தையும் அறிவது என்பது அனைத்தின் மேலும் அன்பைப் பொழிவது அல்லாது மன்னிப்பது அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறேன். என் இதயம் முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டுவிட்டது.

சந்தியாகாலத்தில் மஹரிஷியைத் தவிர அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். நிறைந்த ஒரு மனநிலை என்னுள், ஏனெனில் பகுத்தாராய்ந்து விடை காணுல் இயல்பை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையிடம் தொலைக்கத் தேவையின்றி என் ஆன்மிகத் தேடலின் போராட்டம் இனிதே வெற்றியடைந்தது. ஆனால் மஹரிஷி முற்ற்த்துக்கு வந்த போது என் நிறைந்த மனநிலை திடீரென்று மறைந்து விட்டது. இம்மனிதர் என்னை வினோதமாக வென்று விட்டார், இவரை விட்டு விலகுவது என்பது மிகுந்த வேதனைக்குரியதாய் இருக்கிறதே. இவர் என்னைத் தன் ஆன்மாவுடன் இரும்புச் சங்கிலிகளை விடவும் கடினமான வஸ்துவால் கட்டி வைத்து விட்டார், அதே சமயம் இக்கட்டு அடிமைத்தளை போலல்லாமல் மனிதனை விடுவிக்கச் செய்யும் செயலே. இவர் என்னை என் தெய்வீகம் தோய்ந்த சுயத்துள் எடுத்துச் சென்று எனக்கு உதவியிருக்கிறார், ஜடம் போன்ற மேலைநாட்டினனான எனக்கு அர்த்தமில்லாத ஒன்றை உயிர்ப்புடன், ஆனந்த அனுபவமாக்கியிருக்கிறார். என் சுய-பரிணாம மாற்றம் முடிவடைந்தது.

~ தொடரும்.

அடுத்த பதிவில் டாக்டர். பால் ப்ரண்டன் மஹரிஷியைப் பற்றி நிகழ்வுகளை தன் பல புத்தகங்களில் எழுதியிருப்பது பற்றிய தகவல்கள் இடம்பெறும்.

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *