ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 5, 6 & 7

ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 5, 6 & 7

5 – மனு சுபேதார்

மனு சுபேதார் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.

காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த காரில் தனியாக இருந்த நான் என் கேள்விகளை எண்ணி சரிபார்த்துக் கொள்ள விரும்பினேன். ஒவ்வொரு கேள்வியையும் எப்படிக் கேட்க வேண்டும் என்று உருவேற்றிக் கொண்டிருக்கையில் அதற்கான பதில்களும் எனக்குத் தெரிந்திருந்ததை உணர்ந்தேன். மஹரிஷியை சந்தித்த போது ஒரு கேள்விகளும் கேட்கத் தோன்றவில்லை.

அவரிடம் நான் சேர்மனாக அஹமதாபாத்திலிருந்த சாஸ்து சாஹித்ய முத்ரனாலயா ட்ரஸ்ட் பதிப்பித்திருந்த ‘அவதூத கீதை’ மற்றும் ‘அஷ்டவக்ர கீதை’ பிரதிகளை சமர்பித்து அவர் கவனத்தை அவதூத கீதையின் முதல் வரியின் பால் கொணர்ந்தேன். அது சொல்வது: “கடவுளின் அருளால் மாத்திரமே ஒரு புத்தியுள்ள மனிதனின் பால் அண்டவெளியிலுள்ள ஒற்றுமை பற்றி அறியும் ஆசை எழுகிறது. அவ்வாசையே அவர்களை சம்சாரத்தில் இருக்கும் பலவித ஆபத்துகளிலிருந்தும் காக்கிறது.”

மஹரிஷி என்னை அளவுகடந்த கருணையுடன் நோக்கினார். பின் தன் உதவியாளர்கள் ஒருவரிடம் ஒரு புத்தகத்தை எடுத்து வரச்சொன்னார். அது நாபாஜி எழுதிய ‘மஹா பக்த விஜயம்’, அதைத் திறந்து படிக்கத் தொடங்கினார். (அவர் படிக்க எண்ணிய அதே பக்கத்தை மிகச்சரியாக திறந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்). மஹரிஷி அதை மிகவும் ஆழ்ந்து அனுபவிப்பவர் போலத் தோன்றினார்.

தம்மைத் தொடர்பவர்களை வியப்பிலாழ்த்துவதற்காக சில குருமார்கள் மந்திர தந்திர சித்துக்களை நாடுவதுண்டு. மஹரிஷி மாறாக ஒரு நேர் வழியை உபயோக்கிறார். உண்மை என்பதை வெளிச் சொல்லிவிடுகிறார், அது மிக எளிதாக, அவர் எண்ணத்தில் உதித்ததாயும் அவரே அனுபவித்து உணர்ந்ததாயும் இருக்கிறது.

அவர் உங்களைப் பார்க்கும் பார்வையில் ஒரு கேள்வி தொனிக்கிறது, என்னைப் பொறுத்தவரை. அது கேட்பது, “நான் ஒரு ஒற்றுமையைப் பார்க்கிறேன், ஆனால் நீங்கள் வேற்றுமையை மட்டும் கவனிக்கிறீர்கள். நீங்கள் உங்களையே ஏன் நன்கு அறிந்து கொள்ளக் கூடாது, அறிந்து உங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணரக்கூடாது? அதன் பின் உங்களால் உங்களுடைய நிஜ சுயத்துடன் ஒற்றுமை என்ற அந்த ஒன்றில் ஒன்றி இருக்க முடியுமே?” என்பதே அது. எவரொருவர் உண்மையான ஆன்மிகத் தேடலில் இருக்கிறாரோ அவருக்கு மஹரிஷியின் அருகாமை போல வேறெதுவும் உதவாது.

அவருடைய பார்வையில் ஒரு ஆன்மிக ரீதியான தொடர்பும் கனிவும் தென்படுகிறது, ஒரு மனிதரிடத்தில் சிறந்தது என்ன என்பதைப் பார்க்கிறது. மெளனமான அந்த மணித்துளிகளில் அவருடைய இருப்பு ஒரு சாதகருடைய ஆன்மிக ஏக்கத்துக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. அவர் பக்தர்களைப் பார்க்கும் அக்கனிவு மிகுந்த பார்வை ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்ப்பது போலிருக்கிறது.

6 – வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்)

நியூயார்க்கின் வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்) மஹரிஷியை 1930களில் சந்தித்தார்.

மஹரிஷியின் முன் முதன்முறை அமர்ந்திருந்த போது ஒரு மிக சக்தி வாய்ந்த அனுபவம், அதை வார்த்தையால் விவரிக்க வேண்டுமானால் தொட்டு உணரக்கூடிய ஒரு தங்க பேரொளி என்று சொல்லலாம், மிக சக்திவாய்ந்த ஒரு ஆன்மிக சக்தி. அவரிடமிருந்து ஒரு மெல்லிய ஆனால் அடர்த்தியான ஆன்மிக உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, அதை உணர்ந்த மறுகணமே கேள்விகள், வார்த்தைகள், தியானம் செய்யும் வழிமுறைகள், இவை எல்லாம் உடனடியாக மறைந்து விடுகின்றன. க்றிஸ்தவ சர்ச்சுகளில் ஒரு சில செயிண்ட்களுடன் ஒப்பிடப் படும் தெய்வீகம் பொருந்திய எதையும் சட்டை செய்யாத நிலையையும் மஹரிஷியிடம் காணக்கிடைக்கிறது. இதை வெளிப்படையாக ‘அலட்சியம்’ என்று நினைத்து விடலாகாது, மாறாக அனைத்தும் உணர்ந்த ஒருவரிடமிருந்து அனைத்தையும் ஆற்றும் சக்தியாக வெளிப்படுகிறது.

7 – க்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி)

க்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி), 1930 களில் சென்னை மாகாணத்தின் அரசாங்க உத்தியோகஸ்தரும், பண்டிதரும் ஆவார். இவர் 1880 களில் சென்னை கவர்னராக இருந்த ஸர். மெளண்ட் ஸ்டௌர்ட் க்ராண்ட் டஃப் இன் மருமகனாவார்.

மஹரிஷியை முதன் முதலாய் பார்த்த போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நோக்கிய அந்த கணம் இவர் தான் உண்மையும் ஒளியும் என்பதை நான் உணர்ந்தேன். பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த சந்தேகங்கள் அனைத்தும் இப்புனிதமானவர் பார்த்ததும் மறைந்து விட்டன. நான் ஆஸ்ரமத்துக்கு வந்த நேரம் குறைவானதாக இருப்பினும் ஒவ்வொரு முறையும் அங்கே இருக்கையில் என்னுள் அழிக்க முடியாத ஏதோ ஒன்று மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.

உணர்வுகளைக் கடந்த, பரத்துக்குள் தன்னை முழுவதுமாய் கரைத்துக் கொண்டு விட்ட, பிறரின் நன்மைக்காக சில ஆண்டுகள் இப்பிறவியில் இறங்கி இருக்கும் ஒருவரின் நேரடி தொடர்பில் இருக்கிறேன் நான் என்பதைக் கண்டு கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை எனக்கு. (இக்கருத்து எப்படி இவருக்கு ஏற்பட்டது என்று கேட்கையில் உடனடியாக ஒப்புக்கொண்டார்) – என்னால் பதிலுரைக்க இயலவில்லை, எப்படி ஜன்னல் வழியே சூரியனை எப்படி பார்த்தாய் என்று கேட்பது போல, என் கண்கள் மற்றும் பிற உணர்வுகளின் மூலமாக என்று வேண்டுமானால் சொல்லலாம். எனக்கு சூரியனின் இருப்பு தெரிவதற்க்கு அல்ஜீப்ராவோ மற்ற அறிவியல் ஞானமோ தேவையிருக்காது அல்லவா, அது போல மஹரிஷியின் ஆன்மிக மேதமைக்கு எந்த ஆதாரமும் தேவைப் படவில்லை.

ஆஸ்ரமத்துக்கு வருகை தர முடிபவர்கள் வராமல் நேரங்கடத்திக் கொண்டிருந்தால் அதற்காக தங்களுடைய பின்னாளில், அடுத்த பிறவிகளில் தங்களையே நொந்து கொள்வார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையாக, மஹா பெரும் உண்மை, சத் – அறிவதற்கரிய பேறு நம் முன்னால் இவ்வளவு எளிதான உருவத்தில் அமர்ந்திருக்கிறது. இதோ நாம் தகுதி அடைந்திருக்கிறோமோ இல்லையோ, உண்மையை நெருங்கலாம்! வந்து போவதற்கான பிரயாணச் செலவை மட்டும் தரவேண்டும், அதற்குக் கிடைப்பது ‘தங்களுடைய சுயத்தைப் பற்றிய ஞானம்’.

(இது லண்டனிலிருந்து 1935 இல் எழுதப்பட்டது. ரமணாஸ்ரமம் பதிப்பித்த ஸ்ரீ ரமண கீதையின் முன்னுரையைப் பார்க்கவும்).

மஹரிஷி பிறரைப் பற்றி அசாத்தியமான உள்ளுணர்வு கொண்டவர். தன்னைச் சந்திக்க வருபவர்கள் பற்றி அனைத்தையும் அறிந்தவர். அவர் என்னைக் கவர்ந்ததன் குறிப்பிடத்தக்க காரணம் அவருடைய எளிமையும், மென்மையும், அமைதியுமே. எப்படிப்பட்ட மென்மை என்றால் மென்மைத்தன்மை என்பதையே கடந்த ஒரு மென்மை. என் வாழ்வின் மிகப் பெரும் நிகழ்வு நான் அருணாச்சலத்தின் முனிவரை அங்கு சந்தித்ததே.

இவருடைய கவிதையிலிருந்து:

அருணாச்சலத்தின் ரமணருடன்:

நான் தொலை தூரம் அலைந்திருக்கிறேன்: ஆம்
ஓரிடம் விட்டு மற்றொரிடமிருந்து மீண்டும் வேறோரிடம்
முனிவர்களைக் கண்டிருக்கிறேன், பெரும் மன்னர்களும் அரசிகளையும்
அன்புமயமான, அறிவார்ந்த, பிரமிப்பானவர்களை
ஆனால் இங்கு மட்டும் – அருணாச்சலத்தின்
ஆஸ்ரமத்தில் மட்டும்
எந்தக் கலப்புமற்ற ஆனந்தத்தை உணர்ந்தேன்
நான்! நான்! நான்!
***

Leave a Comment