என்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?

என் பாட்டி சிறு வயதில் சொல்வதுண்டு. நீ பேசுவதெல்லாம் நல்லதாக இருக்கணும் என்று. ஏன் என்று கேட்டதற்கு ததாஸ்து தேவர்கள்வீட்டின் நாற்புறத்திலும் இருப்பார்கள். நீ என்ன சொன்னாலும் ததாஸ்து, ததாஸ்துஅதாவது அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றார். அதனால் தான் நம் வீடுகளில் மங்கல வாத்தியங்களை ஒலிப்பதும், மந்திரம், ஸ்லோகம் மற்றும் தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் என்று வரையறுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.
 
மிக நல்ல விஷயமாயிற்றே இது!
 
பல வருடங்கள் கழித்து, இப்போது நான் என் பாட்டியைக் கேட்கிறேன், “பாட்டி, என்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?”

பாட்டி: ஏண்டா?”

 
“பாட்டி, வீட்டிலே எப்போ பாத்தாலும் சீரியல் ஓடுது. அதில எப்போ பாத்தாலும் யாராவது அழறா. முன்னெல்லாம் வெறும் லேடீஸ் அழுகை தான் இருந்தது, இப்போவெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்றார்ப் போலே ஆண்களும் போட்டி போட்டுக் கொண்டு அழுகிறார்கள். எந்த சீரியலைப் பார்த்தாலும் பொதுவாக இருப்பது இவை: ஆஸ்பத்திரி, யாராவது மண்டையில் கட்டுப் போட்டுக் கொண்டு இருப்பது, சீரியஸான நிலைமை, ஒரு பெண் இன்னொருத்தியை ஏதாவது செய்து தாழ்மை படுத்த விழைவது (கண்ணியமான சொல்லாக இருக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு இவ்வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறேன்), இன்னபிற. அதில் வரும் வசனங்கள், வார்த்தைகள் சொல்லுந்தரமன்று. (அவைகளை நான் இங்கு வரிசை படுத்தத் தேவையில்லை. நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் வீட்டிலேயோஅல்லது பக்கத்து வீட்டிலேயோ கேட்டுக்கொண்டிருக்கலாம்அப்படி ஒரு வாக்கியங்கள்.)
 
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் ததாஸ்து தேவர்கள் என்ன செய்வார்கள் பாட்டி? ததாஸ்து என்று சொல்வார்களா அல்லது கொஞ்சம் இண்டெலிஜென்ஸ் பயன்படுத்திப் பேசாமலிருப்பார்களா? அவர்களுக்குள்ளேயே ஒரு வேளை ஏங்கிக்கொண்டிருப்பார்களோ ஏதாவது நல்ல வாக்கியம் கேட்காதா, நாமும் ததாஸ்து ததாஸ்து என்று உளமாற சொல்ல மாட்டோமா?” என்று.
 
 
 
பாட்டி முறைத்தாள், “போடா, ஏதோ பொழுது போகறதுக்காக பாக்கறோம், அதைப் பெரிசா சொல்றியே? நீ பாக்கற இங்கிலீஷ் படங்கள் என்ன வாழுதாம்? எப்போப் பாத்தாலும் துப்பாக்கியும் கையுமாஅலையறான், படார் படார்னு சுடறான், இதுக்கு என்ன சொல்றாய்?”
 
“ஆனா இந்தப் படங்கள்ல சப் டைட்டில் போடறானே பாட்டி? டி.வியை சத்தமில்லாம வைத்தாக் கூடப் போதுமே, இந்த மாதிரி கீழ்த்தரமான, ஒரு குடும்பத்தில் பேச, கேட்கக் கூசும் வசனங்களை அவன் சொல்றதில்லையே?
 
பாட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள், மனதிற்குள் புத்திக்குத் தெரியுது, மனசு கேட்க மாட்டேங்குதேஎன்று நினைக்கிறாளோ என்னமோ? டீவி என்பது ஒரு கருவி தான். அதில் நல்லதைத் தேடுகிறோமா இல்லையா என்பது நம்கையில் தான் உள்ளது. புஷ்பக விமானம் ஒன்று தான். அது குபேரனிடம் இருப்பதற்கும் ராவணனிடம் இருந்ததற்கும் வித்தியாசம் உண்டில்லையா?
 
என்று தணியும் இந்த சீரியல் தாகம்?
 

Image Courtesy:
Smiley & Choice

பஸ்மாசுரனின் புஸ்வாணக் கதை

இக்கதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.
 
இக்கதையை ஏற்கனவே எழுதி பதிப்பித்திருந்தோம். ஆனால் தொழில்நுட்பக் காரணத்தால் பதிப்பித்தது தொலைந்து விட்டது. எனவே மறுபடியும்
 
தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாதிரி இருக்கிறதல்லவா? மேலே படியுங்கள்,  இத்தலைப்பை வைத்தற்கான காரணம் புரியும்.
 
முதலில் கதை:
பஸ்மாசுரன் தவம் செய்கிறான் சிவபெருமானை வேண்டி. நீண்ட, அரிய தவத்தினால் பரம்பொருள் மிக மகிழ்ந்து அவன் முன் வந்து என்ன வரம் வேண்டுமுனக்கு எனக் கேட்கிறார். அவனும் தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாக வேண்டும் என்கிறான். சிவபெருமான் வரமளித்து விடுகிறார். உடனே அசுரன், ஸ்வாமி இவ்வரத்தை சோதித்துப் பார்க்க விரும்புகிறேன், உங்கள் தலையில் கை வைத்துஎன்கிறானாம். உடனே சிவன் ஓடி விடுகிறாராம். பின் மோஹினி வந்து அசுரனை மயக்கி அவனை அவன் தலையிலேயே கை வைக்க வைத்து அழித்து விடுகிறாராம். இது கதை, ஆம். வெறும் கதை தான். ஏன் என்று பார்க்கலாம்.
 
Image Courtesy: MySchool.in.com
 
 
உண்மையும் உட்டாலக்கடியும்:
பரமேஸ்வரன் ப்ரோஸ் கான்ஸ்எல்லாம் பார்ப்பவரில்லையாம், உடனே வரமளித்து விடுவாராம்.  பின் அவஸ்தை படுவாராம். இது ஒரு சாராரின் திவ்யமான மூளைகளில் உதித்த கருத்து. இது ஒரு புறமிருக்க, இதில் உண்மை என்ன உட்டாலக்கடி என்ன என்றால், பரமேஸ்வரன் ஆஷுதோஷி (the one who is easily pleased) என்றழைக்கப் படுபவர். அதாவது மிக எளிதாக இரங்கி விடுபவர். அதனாலேயே அவருக்கு போலேநாத் என்ற பெயரும் உண்டு, அதாவது போலா (bhola) என்றால் innocent அல்லது குழந்தையைப் போன்ற என்று பொருள். Innocent God என்று ஒருவாராக சொல்வார்கள். எனவே இவரை மகிழ்விப்பது சுலபம். ராத்திரி ஒரு மரத்தில் ஏறி இலையைப் பறித்துக் கீழே போட்டவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி, திரியை தூண்டிய எலி பலி (மஹாபலி) ஆனது. கண்ணப்பர் மிகப் புனிதமான பக்தியுடன் கொணர்ந்த எச்சில் படுத்திய உணவை கண்ணப்பாஎன்று உளமார ஏற்றார். எனவே நாம் எதைக் கொண்டு பூஜித்தாலும் (கல்லை வைத்து அர்ச்சித்தவர் உண்டு!) உண்மையான பக்தி ஒன்றையே எதிர்பார்ப்பவர் அவர். இது பரமேஸ்வரனின் கருணை. ஆனால் அதே சமயம் குழந்தைத்தனம் அறியாத்தனம் என்று எப்படி ஆகும்? Innocent, but not naive என்று சொல்வார்கள். யாருக்கு பயமோ தயக்கமோ இருக்காது?
  • பெரிய பதவியில் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பொதுவாக,
  • எதையும் பற்றிக் கவலைப் படாத ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள், பெரியவர்கள்
  • குழந்தைகள்
                            இவர்களுக்குத் தான்.
 
ஆனால் இது யாவையுமே கொண்ட இறைவனுக்கு எதுக்காக ப்ரோஸும் கான்ஸும் பார்க்க வேண்டும்? பார்க்கப் போனால் அந்த அசுரன் பார்த்திருக்க வேண்டும் கான்ஸை. யாதுமே தாமாகியிருத்தலில், ப்ரோஸ் என்ன கான்ஸ் என்ன பார்க்க வேண்டியிருக்கிறது? அதனால் தான் டக்கென்று வரமளித்து விடுகிறார். பகீரதன் கங்கை, பிரம்மா எல்லோரையும் குறித்து தவமிருக்கையில் அவர்கள் எல்லோரும் கண்டிஷன் போடுகிறார்கள், ஆனால் சிவனை வேண்டிய மறுநொடி, “வரச்சொல் கங்கையை, நான் தாங்குகிறேன் அவளைஎன்று செஞ்சடை விரித்துத் தயாராகி விடுகிறார். 
 
இந்தக் குழந்தைத் தனமான இயல்பை இஷ்டத்துக்குத் திரித்துப் பண்ணிய கதை தான் பஸ்மாசுரனின் கதை என்பது எம் தாழ்மையான கருத்து.  இனி லாஜிக் மற்றும் காமன்சென்ஸ் பிரகாரம் பார்க்கலாம். முக்கியமாக அசுரனின் பக்கமாக முதலில் யோசிப்போம் லாஜிக்கை, பாவம்.
 
வரம்: யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாக வேண்டும்,  exception இல்லாமல்.
 
அசுர புத்திக்குத் தெரியாதது, மற்றும் இப்புஸ்வாணக் கதையைப் புனைந்தவர் யோசிக்காமல் விட்டது:
இவன் கேட்ட வரம் அடுத்தவரை இம்சிப்பது, ஆனால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை, உதாரணத்திற்கு இரண்யகசிபு கேட்டாற் போல என்னை இதால் கொல்ல முடியக் கூடாது, காலையில் கூடாது, இரவு ஆகாது, வீட்டுக்குள்ளே நோ நோ, வெளியில் வைத்துக் கொன்றால் ஆட்டத்திற்கு சேப்பு கிடையாது, ஆயுதம் வேண்டாம், இப்படிப் பலப் பல கண்டிஷன் போட்டுமே நாராயண நரசிம்ஹர் அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி customized ஆக அவனை வதம் செய்து விடுகிறார். நம் பஸ்மாசுரனோ பாவம் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை. நேரடியாக அஃபென்ஸ் வரம் கேட்கிறான். டிஃபென்ஸுக்கு ஒன்றுமே இல்லை. ஒரு பார்வையால் மன்மதனை எரித்தவருக்கு இது பெரும் விளையாட்டாக இருந்திருக்க வேண்டும், சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்துத் தான் இவ்வரத்தை அளித்திருக்க வேண்டும் அவர்.
 
சாத்தியக்கூறுகள்:
இறைவன் வரமளித்து விட்டார். இவன் யோசிக்க வேண்டாமோ, உடனே கையை வைக்கிறேன் என்கிறான். சிவன் சொல்லியிருப்பார் அப்பா குழந்தே, உன் வரத்திலுள்ள லூப் ஹோல் இது தான்‘, இது ஒரு பொடன்ஷியல் SPOF (Single Point of Failure). நான் நெற்றிக் கண்ணை ஒரு கால் பாகம் திறந்தாலே நீ பஸ்பமாகி விடுவாய். அதனால் இந்த விளையாட்டு தேவை தானா யோசித்துக் கொள்என்று கருணை கூர்ந்து சொல்லியிருப்பார். ஆனால் கதாசிரியருக்கு அவசரம், அசுரனுக்கும் அதனால் அவசரம், கை வைக்கக் கிளம்பி விட்டார்கள்.
 
ஒரு வேளை இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால், அது இவ்வாறாக இருந்திருக்க வேண்டும். நாம் சொல்வோமில்லையா குழந்தைகளிடம் நான் ரெடின்னு சொன்ன உடனே நீ என்னைப் பிடிக்க வறியா?” – இப்படி சொல்லி விட்டு ஓடி, போக்கு காட்டிப் பின் அதனிடம் அகப்பட்டுக் கொண்டாற்போல ஒரு பாசாங்கு செய்து அதை மகிழ்விப்போமே, அதைப் போல இந்த பஸ்மாசுரக் குழந்தையிடம் பரமேஸ்வரன் விளையாடியிருக்க வேண்டும்.
 
என்ன புரிகிறதா? ஏன் புஸ்வாணக் கதை என்று வைத்திருக்கிறதென்று, புஸ்வாணம் ஏதோ பெரிதாக நிலா வரைக்கும் போவது போல சத்தம் போடும், ஆனால் சில நொடிகளில் அமுங்கி அடங்கி விடும், அதைப் போல சென்சேஷனலாக ஒரு கதை, பரமேஸ்வரனே ஓடினாரா, ஏன் என்று கேட்போமில்லையா, அப்படி ஆரம்பித்து கொஞ்சம் லாஜிக் எல்லாம் பார்த்தால் புஸ்வாணமாகும் கதை தான் இது.