சனாதன தர்மத்தின் ஆன்மிக பயிற்சிகள் – சிவராத்திரி

இதன் ஆங்கில மூலத்தைக் காண – http://www.gnanaboomi.com/mindful-maha-shiva-rathri

சனாதன தர்மத்தின் விரதங்களும் வழிபாட்டு முறைகளும் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சடங்காகத் தோன்றினாலும் ஆழமான காரணத்தையும் குறிக்கோளையும் கொண்டவை. – சிவராத்திரி என்றால் இரவு முழுவதும் கண்விழித்து வழிபடுதல் என்று. ஆனால் அதன் உள்ளர்த்தத்தைப் பார்க்க முயலும் போது இது வெறும் சடங்கல்ல, பெரிய ஆன்மிக சாதனை என்பது தெளிவாகும். வாருங்கள்.  அத்தகைய ஒரு பார்வையை மேலோட்டத்திலிருந்து ஆழம் வரை சென்றும் அது இக்காலத்தில் எத்தகையதாகி விட்டது என்பதையும் கவனிப்போம்.

சிவராத்திரி தினத்தில் ஒரு வேளை உணவு மட்டும் கொள், இரவு முழுவதும் விழித்திருந்து வழிபட்டுக் கொண்டிரு என்று நம்மிடம் சொல்லப் படுகிறது. நாமும் “இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டுக் கொண்டாலும், சரி முயன்று தான் பார்ப்போமே என்று நினைக்கிறோம். இரவின் தொடக்கத்தில் மெல்ல மெல்ல உடலின் இயக்கங்கள் குறையத் தொடங்குகின்றன, பசியாலும் பழக்கத்தாலும். எதுவும் தனக்கு என்று வரும்போது தான் தெளிவான கருத்தாகப் பதியும். இப்போது பசியால் உடலியக்கம் குறைய, மனது தன்னாலேயே பசித்திருக்கும் மற்றையோரை கருணையுடன் நினைக்கிறது. பசித்தால் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. புத்தி மனதுக்கு தகுந்தாற்போலே கட்டளை இடுகிறது. இதுவே சாதாரண நாளிலென்றால் நிலைமையே வேறு, மனதானது கோபதாபங்கள் போன்றவற்றுக்கு ஆளாகும். ஆனால் அதே குரங்குக்கு ஒப்பிடப்படும் மனது தெளிவான நிலையில் “விரதமிருக்கிறேன்” என்று  புரிந்தமையால் அடங்கி இருக்கிறது.

மேலும், மனவுறுதி மற்றும் பயிற்றுவித்த எண்ண ஓட்டங்களினால் மனதை வசப்படுத்த முடியும் என்று நமது சனாதன தர்மத்தின் பிரமிப்பூட்டும் மூதாதையர்கள் நமக்கு சொல்கிறார்கள். அதற்கு ஒரு பயிற்சியாக இன்றைய தினம் இறைவனை மட்டுமே நினை என்று சொல்கிறார்கள். இதை கவனமாகப் பார்க்கவும். மனதின் இயல்பு என்பதே கடந்த காலம் அல்லது எதிர்காலத்தில் உழல்வது தான். இதையே, மனதின் இயல்பு ஒரு எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கும் தாவிக்கொண்டு இருப்பது தான். குரங்கின் இயல்பு.அப்படி ஓடிக்கொண்டே இருக்கும் மனதை மறுபடி “ஒரு நினைவுக்கு” கொண்டு வரத் தொடங்கு என்று சொல்கிறார்கள். சாஸ்திர-உபநிஷதங்களின் படி மனதின் உண்மையான ஸ்வரூபம் “இல்லாதிருப்பது” தான். ஆனால் நாம் இன்னும் அந்நிலைக்கு எட்டவில்லை. எனவே “ஒரு நினைவு”, இறைவனின் நினைவு என்ற ஒன்றில் ஓடும் மனதை மறுபடி மறுபடி கொணர வேண்டும் என்கிறார்கள். அதை சாதாரண நாட்களில் செய்வதை விட சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் செய்யத் தொடங்கினால் பலன் உண்டு. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும், ஒரு உடற்பயிற்சி செய்பவர் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று, அந்த சூழ்நிலையில் பயிற்சி மேற்கொள்வது நன்றாக இருக்குமா அல்லது சாதாரண நிலையில், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசாமலும்
சோம்பேறிகளாகவும் இருக்கையில் செய்வது பலனுடையதாய் இருக்குமா? அப்படி தகுந்த சூழலில் மனது “சிவோஹம், ஓம் நம: சிவாய, ஹர ஹர மஹாதேவா” என்றெல்லாம் துதி செய்யத் தொடங்குகிறது.

மனது உடலைப் பின்பற்றுகிறது, உடல் மனதைப் பின்பற்றுகிறது. கையோடு கை கோர்த்தபடியே.

ஒரு கருத்து உண்டு. எந்தவொரு விஷயத்தில் நீங்கள் மனதையும் ஆன்மாவையும் முழுமையாக அர்ப்பணிப்பீர்களோ அந்த விஷயமானது தன்னகத்தே உள்ள “ரகசியங்களை” உங்களுக்கு வெளிப்படுத்தும். மனதின் பின்னாலேயே, அதன் எண்ணங்களுடன் ஓடிக்கொண்டிருப்பதை விட அதை ஒரு தொடக்கப் புள்ளிக்கு மறுபடி மறுபடி திரும்புமாறு பயிற்றுவிக்கிறீர்கள். இத்தொடக்கப் புள்ளி என்பதை இஷ்ட தெய்வம் என்று கொள்கிறோம். இது சுலபமான ஒன்றாகவும் இருக்கிறது. மனது ஓடுகிறது, அதை நீங்கள் ஓட விடுகிறீர்கள், கட்டுப்படுத்துவது இல்லை, ஆனால் அதைத் தன் தொடக்கப் புள்ளிக்குத் திரும்புமாறு நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். மனதும் மறுபடி ஓடுவதற்காகவே திரும்புகிறது. இது மறுபடி மறுபடி நடக்கிறது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள இயல்பைப் பொருத்து (இயல்பைப் பற்றியே ஒரு பெரிய கட்டுரை எழுதலாம், கர்மா, எண்ண ஓட்டம், இயல்பு, மனமுதிர்ச்சி என்று பலப் பல) காலப் போக்கில் என்ன நடக்கும் என்றால், இந்த பயிற்சியை மேற்கொள்பவருக்கு “ஒரு எண்ணம் எழப்போகும் முன்னரேயே அது எழப் போகிறது” என்பது தெரிந்து விடும். இது மேலும் முதிர்வடைந்து எண்ணமே எழாத நிலை ஏற்படும். இந்த நிலை, இதைத்தான் வேத தர்மம் “இருக்க வேண்டிய” நிலை என்கிறது. இப்பயிற்சியை மேற்கொள்ள மஹா சிவராத்திரி தினம் மிக மிக உகந்ததாகும். எப்படி படகை காற்றின் திசைக்கேற்ப செலுத்துவது சுலபமோ அதே போல. யோகப் பயிற்சி மேற்கொள்ள மஹா யோகியான சிவபிரானுக்கு உகந்த ராத்திரியை விட எது சிறந்தது?

முதலில், இப்பயிற்சி பொதுப்படையான சில பழக்கங்களை தகர்க்கிறது. தூக்கம், பசி, இரவு நேரம், இப்படி “பொதுவாக” நம்பப்படும் இயல்புகளைக் கடக்கிறது. கடந்து, பொதுவாக செய்யாத பயிற்சிகளைச் செய்யத் தொடங்குகிறோம், ஒரே இரவுக்கானாலும் சரி. இதை அனுபவமாகக் கூட பார்த்திருக்கிறோம். நம்முடைய பிறந்த நாள், மண நாள் போன்றவற்றில் மற்றவருக்கு அது ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். ஆனால் நம் மனதில் மட்டும் அன்றைய தினம் ஏதோ சிறப்பானது என்ற தோற்றமும், அதன் மூலம் நாம் காண்பதும் கூட ஒரு பொலிவுடன் இருப்பதாய்த் தோன்றும். அனைத்துமே மனதில் தான் இருக்கிறது என்ற சொல்லை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக ஒன்றை செய்து கொண்டிருப்பதில் ஆற்றல் உண்டு. எந்த ஒரு தற்காப்புக் கலை நிபுணரும் இந்த உண்மைக்கு சத்தியம் செய்வார். நன்கு பயின்ற ஒரு கராத்தே நிபுணர் விடும் குத்து ஒன்றினால் செங்கல்லைக் கூடத் தகர்க்க முடியும். உடலுக்கு ஒப்பிடும் இது மனதுக்கும் பொருந்தும். “மரா மரா” என்று சொல் ராம தாரக மந்திரமாகி ஜபித்தவரை வால்மீகியாகவில்லையா? இரவில் கண்விழித்து இருப்பது என்பது சாதாரணமாக ஒருவரை தன் இயல்பிலிருந்து மாறுபட்டு இருக்கச் செய்கிறது. அச்சமயத்தில் மனதில் “ஒன்றையே நினை” என்ற உறுதி ஒரே எண்ணமாகிய இறை என்பதைத் திரும்பத் திரும்ப நினைப்பது சாத்தியமாகிறது. தொடர்ந்த பயிற்சி நிரந்தரமாக்கும்.

மூளை பற்றிய ஆராய்ச்சியில் பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று, ஒவ்வொரு எண்ணமும் மறுபடி மறுபடி நினைக்குங்கால் மூளையில் ஒரு மின்சார அதிர்வு போன்றவற்றை அனுப்புகிறது. அது மறுபடி மறுபடி நடக்கையில் அந்த எண்ணமானது வலுப்பெற்று, மனதில் நினைத்தது நனவிலும், நிஜத்திலும் நடக்க வைக்கிறது. விளையாட்டு வீரர்களிடம் சொல்லப் படுவது என்னவென்றால், தாங்கள் ஜெயித்தது போல எண்ணிக் கொண்டே இருங்கள் என்பதே. இது பலனளித்ததாய் பல விளையாட்டுக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியமானது என்னவென்றால், அதை பன்னெடுங்காலத்துக்கு முன்னே ஆராய்ந்து, உணர்ந்து கொண்ட நம் பெரியோர்கள் இப்பயிற்சிகளை நம் தினப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கி விட்டிருப்பது தான்! இறை நாமத்தை ஓதி உன்னை நிர்மலமானவனாக்கு என்பதே!

சரி, இத்தகைய பயிற்சியை ஒரு ப்ரதிமைக்கோ கல்லுக்கோ (சிவ லிங்கம், சிலாரூபங்கள் முதலியன) செய்வது எப்படி அறிவியல் சார்ந்ததாகும்? கல் ஒன்றும் கடவுள் இல்லையே என்று முழக்கம் கேட்கிறது! மிக்க நன்றி. ஹிந்துக்கள் கல்லைக் கும்பிடுபவர்கள் அல்ல. கல்லிலும் கடவுளைக் காண் என்பதே அவர்கள் உணர்ந்து கொண்ட தத்துவம். கடவுள் ஒருவர் உண்டேயானால் அவருக்கு உருவம் உண்டு என்றோ இல்லை என்றோ, கல்லில் அவர் உண்டு என்றோ இல்லை என்றோ மனிதனாகிய நீ என்ன சொல்வது? அவருக்கு உருவம் கிடையாது என்று நீ சொல்வாயானால் கடவுளின் அளப்பறிய ஆற்றலுக்கு நீ அணை போடுகிறாய் என்பதாகத் தானே பொருள்? அல்லது சாமானிய மனிதனைப் போல உன்னிடம் கேட்பதானால் “கடவுளுக்கு உருவம் இல்லை என்பதை நீ கண்டாயாக்கும்? “கடவுளால் உருவம் எடுக்க முடியாது என்கிறாயாக்கும்?”

அறிவியலுக்கு வருவோம். ஒரு பயிற்சியில்லாத மனதிற்கு அதை குவிப்பதற்கு ஒரு இலக்கு வேண்டும். வேதாந்தா அக்காடமி ஆஃப் மெட்ராஸ் (Vedanta Academy of Madras) அமைப்பினர் இதை ஒரு சுவையான உதாரணத்தின் மூலம் விளக்குவார்கள்.

ஒருவனுக்கு வானத்தில் தெரியும் மூன்றாம் பிறையை காட்ட அவனது நண்பர் முயல்கிறார்.
அவனுக்கு நிலா எங்கே என்று தெரியவில்லை. ஆகாயத்தைப் பார், மேலே பார் என்று கத்திக் கொண்டிருந்தால் மட்டும் தெரிந்து விடுமா? முதலில் ஆட்காட்டி விரலால் நண்பர் அவனுக்கு நிலவை சுட்டிக் காட்ட முயல்கிறார். தெரியவில்லை.
நண்பர் உடனே “அதோ அந்த மரம் தெரிகிறதா?” என்று கேட்கிறார்.
உடனே அவன் “கல்லைக் கும்பிடறவன் தானே நீ, மரத்துக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேலி செய்கிறான்.
நண்பர் பொறுமையாக “உனக்கு அம்மரத்தின் மேற்கிளை ஒன்று வெளியே நீண்டிருப்பது தெரிகிறதா?” என்கிறார்.
அவன் ஆம் என்கிறான். அக்கிளையின் நுனி வரை உன் பார்வையை ஓட்டு. பின் நேர் மேலே பார் என்கிறார்.
அவனுக்கு நிலவு தெரிந்து விட்டது!

 

கிளை என்பது நிலவைக் காண உதவியாக இருக்கிறதே ஒழிய கிளை நிலவல்ல!

கிளை என்பது நிலவைக் காண உதவியாக இருக்கிறதே ஒழிய கிளை நிலவல்ல!

 

இதில் நிலவுக்கும் கிளைக்கும் எந்த சம்பந்தமுமில்லை தான். ஆனால் கிளை இல்லாவிட்டால் அவனுக்கு நிலா தெரிந்திருக்குமா? ஒரு வேளை தெரியலாம். இன்னமும் முட்டி மோதி, கொதிப்படைந்து, நிலவு என்பதே கிடையாது என்றெல்லாம் சொல்லலாம். அதே பதில் தான் கல்லைக் கும்பிடுபவர்கள் என்று எள்ளி நகையாடுபவர்களுக்கும். கல் கடவுள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் “அங்கிங்கெனாத படி நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்” என்பதில் கல் என்ன விலக்கு? எங்கும் வியாபித்திருப்பவன் என்றால் என்ன? நாங்கள் கல்லில் இருக்கும் பரம்பொருளைக் காண்கிறோம். நீங்கள் கல்லை மட்டும் காண்பதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் உங்கள் பார்வைக்கு எங்களைக் குறை சொல்லாதீர்கள் .

Visualizing தான் இன்றைய உலகின் தாரக மந்திரம். இதைத் தான் பன்னெடுங்காலமாக ஹிந்துக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பதும் மரத்தை மறைத்தது மாமத யானை – மரத்தில் மறைந்தது மாமத யானை

என்பதின் உண்மைப் பொருள் மேற்சொன்ன Visualizing முறை தான்.

இப்படி ஒவ்வொரு சடங்கும் ஆழமான ஒரு குறிக்கோளைக் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக, மனதைப் பயிற்றுவிப்பது, புலன்களைக் கடந்த நிலையை இறையை உணர்வது போன்ற குறிக்கோளே இப்பயிற்சிகளில் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இச்சடங்குகளை வெறும் சடங்காகப் பாவிக்காமல் உட்பொருள் உணர்ந்து செய்தால் இது வெறும் புறச்சடங்கு அல்ல, மாறாக ஆழ்ந்த, ஒரு வாழ்க்கை முறை பற்றியது, அனைவருக்கும் பொருந்தக் கூடிய, பின்பற்றக் கூடிய மற்றும் எக்காலத்திற்கும் பொருத்தமான செயல் என்பது தெளிவாகும். அதன் உட்பொருளை உணராமல் செய்தால், அது கேலிக்கும் நக்கலுக்கும் உரிய கண்மூடித்தனமான மூடநம்பிக்கையாகி விடும். எனவே “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”.

இவ்வாறான சடங்குகளில் பெரும்பாலான மக்களால் அதன் உட்பொருள் மறக்கப்பட்டு வெறும் சடங்காகவும், பிரச்சினைக்குரிய ஒன்றாகவும், அரசியல், பணம் விளையாடும் ஆடம்பரமாகவும் ஆன ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. நாடு முழுவதும் பெரும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் விழாவாகி விட்டது இது. சதுர்த்தியின் அழகே அதன் எளிமை தான். களிமண் என்பது எங்கும் கிடைத்துக் கொண்டிருந்தது (?!). அதை வைத்து ஒரு பிள்ளையார் சிலை செய்து எங்கும் விளையக்கூடிய அருகம்புல், எருக்கம் பூ மாலை போன்றவற்றை அணிவித்து, பின் பண்டிகை முடிந்த பின் அதை விஸர்ஜனம் என்று ஆற்றில் கரைத்து விடுவது. இதில் ஒரு ஒழுங்குபடுத்தப் பட்ட சுழற்சி இருப்பதைக் காணலாம். களிமண்ணானது மீண்டும் ஆற்றில் கரைக்கப் படும் போது அதன் நீர்வளம் பாதிக்கப் படுவதில்லை, மாறாக பலமடைகிறது. இதில் தத்துவ தாத்பரியம் என்னவென்றால், களிமண், தண்ணீரால் செய்யப்பட்ட
இந்த பிரதிமை தண்ணீருடன் கலந்து விடுவது ஐம்புலன்களால் ஆன இவ்வுடம்பு தன் வேலை முடிந்த உடன் அவற்றிலேயே ஐக்கியமாவது போல. இயற்கையான முறையில், இயற்கையைப் பாழ் பண்ணாமல் நடந்த ஒரு சடங்கு. அதன் உட்பொருள் மறந்து போய் இன்றைய தினம் என்னவெல்லாமோ பொருட்களால் ஆன சிலைகள், வித விதமாய், கிரிக்கெட் ஆடும் விநாயகர், கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் விநாயகர் என்ற கேலி கூத்துக்கள் ஒருபுறம், மற்றொரு புறம், பட்டாசு, ஊர்வலம், விநாயகர் முகத்தை விட விழா ஒருங்கிணைப்பாளர் முகம் பெரிதாகத் தெரியுமாய் சுவரொட்டிகள் என்று அருவருக்கத்தக்கதாகி விட்டது.அதன் சாயலிலேயே சிவராத்திரியும் மெல்ல ஆகிக் கொண்டு வருகிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.

சென்ற வருடம் தொலைக்காட்சியில் இரண்டு பிரபலமான (corporate) கார்பரேட் சாமியார்களின் சிவராத்திரி கொண்டாட்டங்கள் காண்பிக்கப் பட்டன. அதில் ஒரு கூட்டம் பிண்ணனிப் பாடகர்களை அழைத்து வந்து, அவர்கள் சினிமா பாட்டெல்லாம் பாடி, நடு நடுவில் ஷிவா ஷிவா என்று கூச்சல் போட்டுக்கொண்டு, நெருப்பை வைத்து நடனமாடிக் கொண்டு, இதில் கிடார் வாசிப்பவர் லெதர் ஜாக்கெட் எல்லாம் அணிந்திருந்தார். இன்னொரு கூட்டத்தலைவர் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார். அவருக்குள் சிவன் இறங்கி விட்டாராம். கண்ணைச் சொருகிக் கொண்டு கையை உதறுவது போல மேலே தூக்கி உள்ளங்கையை அப்படியே பாம்பு போல குவித்து முகத்துக்கு நேரே கொணர்ந்து ஒரு பாம்பு டான்ஸ் போட்டார் பாருங்கள் – சகிக்கவில்லை! இது எல்லாம் கேலிக் கூத்தாகி விடுகின்றன, ஏனெனில் மேற்சொன்ன உட்பொருள் என்பது மறக்கப்பட்டு விட்டது.

நாம் வேகமாக உட்பொருள் மறைந்து வெறும் சடங்கால் ஆன வழியில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம். கவனம் தேவை. ஒரு ஆசிரியர் குருகுலத்தில் பூனை ஒன்றை வளர்த்து வந்தாராம். அப்பூனை பாடம் நடகையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததால் மாணவர்கள் கவனம் சிதறுவதைக் கண்ட குரு, அப்பூனையை கட்டிப் போட்டு விட்டு வகுப்பைத் தொடர்ந்தாராம். பிற்காலத்தில் அக்குரு வழி வந்த மற்றொருவர் மாணவர்களைப் பார்த்து “நம் குருநாதர் பூனையைக் கட்டி வைத்து விட்டுத்தான் வகுப்பை ஆரம்பிப்பார், அந்த பாரம்பரியம் தொலையக் கூடாது, எங்கே பூனை ஒன்றைப் பிடித்து வாருங்கள். அதைக் கட்டி வைத்து விட்டு வகுப்பைத் தொடங்கலாம் என்றாராம். எப்படி இருக்கிறது கதை? அது போலத்தான் ஆகி விட்டது சதுர்த்தியும் சிவராத்திரியும். எனவே சரியான உட்பொருளை உணர்வோம் என்று விழித்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்த சிவராத்திரி துணை செய்யட்டும்.

நாம் சரியான கேள்விகளைக் கேட்போம், அது தான் சரியான பதிலை நமக்குத் தரும். நம் எண்ணங்களாலும் செயல்களாலும் தூய்மையடைவது ஒன்று தான் இச்சடங்குகளின் குறிக்கோள். எனவே இந்த மஹா சிவராத்திரி நாளில் அதன் உட்பொருள் உணர்ந்து விரதம் கடைபிடித்து இறையருள் பெறுவோம்.

ஓம் நம: ஷிவாய!