சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 2

பரிவிராஜக சபதம் ஏற்று எட்டு ஆண்டுகள் ஸ்வாமிஜி வட மற்றும் தென்னிந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றார். இப்பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவகை. தொழில்முறை சாதுக்கள் மூலம் விளையும் தீய விளைவுகளை கண்ணெதிரே கண்டார். மதராஸப் பட்டிணத்தில் பெரும்பான்மையாக இருந்த அவர் தெலுங்கு மற்றும் தமிழ் கிராமவாசிகளின் வாழ்க்கையை வெகு அன்னியோன்னியமாக அறிந்திருந்ததோடு அவருடைய முதற்கட்ட ஆதரவாளர்களையும் மதராஸ பட்டிணத்திலேயே கண்டார். பீஹாரில் இருந்த போது அங்கே பரபரப்பான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது. மாமரங்களில் தானியமணி மற்றும் செந்தூரத்தினால் ஆன கலவையை களிமண்ணுடன் பிசைந்து சற்றே புடைத்தாற்போல் அப்பி விடுவர். அநேக மாமரங்கள் இதே மாதிரி காணப்பட்டன. அரசு அதிகாரிகள் என்று அழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஒரு தீய செயலுக்கான அறிகுறி போலத் தோன்றி, இவை கிளர்ச்சிகளுக்கு சற்று முன் பொதுவாக விநியோகம் செய்யப்பட்ட மர்மமான ‘சப்பாத்தி’ போலவே இருப்பதாய் நினைத்தனர். திடீரென்று படை சூழ ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் அங்குமிங்கும் வரும் அதிகாரிகளைக் கண்ட கிராமத்தவர் பயந்து போயினர். தங்களுக்கும் இந்த மர்ம சின்னத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று மறுத்தனர். உடனே அதிகாரிகளின் சந்தேகம் நாடெங்கும் சுற்றியலையும் சாதுக்கள் மீது விழுந்தது. சிறிது காலத்திற்கு கொத்துக் கொத்தாய் சாதுக்களை அரெஸ்ட் செய்து, பின் ஆதாரம் எதுவுமில்லாத காரணத்தாலும் அப்போது இவை போன்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்பது பற்றிய ஒழுங்குமுறைகள் இல்லாத காரணத்தாலும் இச்சாதுக்களை விடுவிக்க வேண்டியதுமாயிற்று. பின் இந்த மர்ம சப்பாத்தி மாமரம் போன்றவை நல்ல மகசூல் தருவதற்குச் செய்யப்படும் இயற்கை வேளாண் முறை என்பது தெரிய வந்தது.

விவேகானந்தர் அதிகாலையே எழுந்து க்ராண்ட் ட்ரங்க் ரோடு அல்லது ஏதாவது கிராமப்புற பாதையில் யாராவது வலிய வந்து சாப்பாடு தரும் வரையோ அல்லது கொளுத்தும் வெயில் அவரை நிழல் தேடி சாலையோர மரத்தடியில் நிற்கும் வரையோ நடந்து கொண்டேயிருப்பார். இது போல் ஒரு காலையில் நடந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து யாரோ அவரை நிற்குமாறு கூவியது கேட்டது. முழு யூனிஃபார்மில் ஒரு போலீஸ் அதிகாரி சில போலீஸ்காரர்கள் பின் தொடர வந்து காவலருக்கே உரிய தொனியில் அவரை யாரென்று விசாரிக்க, விவேகானந்தர் “ஃகான் சாஹேப், நானொரு சாது” என்றார்.

“எல்லா சாதுவும் பத்மாஷ்கள் (அயோக்கியர்கள்) தான்” – கர்ஜித்தார் அதிகாரி.

“நீ என்னுடன் வா, உன்னை உள்ளே தள்ளி விட்டு மறுவேலை பார்க்கிறேன்” – கொக்கரித்தார் அவர்.

விவேகானந்தர்: “எத்தனை நாளைக்கு உள்ளே போடுவீர்கள்?”

அதிகாரி: “ஓ, இரண்டு வாரத்துக்கோ ஒரு மாதமோ கூட இருக்கலாம்!”

சுவாமிஜி (அவருக்கு சற்று அருகில் போய் அவர் நல்லெண்ணத்தைப் பெறுமாறு, கவரும் ஒரு குரலில்): ஃகான் சாஹேப், ஏன் வெறும் ஒரு மாதம்? என்னை ஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே போட முடியாதா?”

அதிகாரியின் முகம் விழுந்து விட்டது, முறைத்தவாறு: “எதுக்காக ஒரு மாதத்துக்கு மேல் ஜெயிலில் போடச் சொல்கிறாய்?”

சுவாமிஜி தன்னம்பிக்கையுடன்: “ஜெயிலில் வாழ்க்கை இதை விட சிறப்பாகவே இருக்கும். அங்கிருக்கும் வேலை காலை முதல் ராத்திரி வரை இப்படி லோல் படுவதை விட எளிதாகவே இருக்கும். என் தினப்படி சாப்பாடு நிச்சயமில்லை, பல சமயங்களில் பட்டினி கிடக்கிறேன். ஜெயிலில் மணி அடித்தால் ரெகுலராய் சாப்பாடு கிடைக்கும். என்னை உள்ளே போட்டீர்களானால் நான் தங்களை என் பரோபகாரியாகப் பார்ப்பேன்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி முகத்தில் ஈயாடவில்லை, ஒரு அருவருப்பான முகபாவத்துடன் விவேகானந்தரை அவ்விடம் விட்டு உடனே சென்று விடுமாறு கூறிவிட்டார்.

போலீஸாருடனான இரண்டாவது எதிர்சேவை கல்கத்தாவிலேயே நடந்தது. அப்போது சுவாமிஜி சில சாதுக்களுடன் கல்கத்தாவில் ஒரு இடத்தில் படித்துக்கொண்டும் தன்னாலான பொதுச்சேவைகளை செய்து கொண்டுமிருந்தார். ஒரு நாள் தங்கள் குடும்ப நண்பரான ஒரு அதிகாரியைச் சந்தித்தார். கிரிமினல் புலனாய்வுத் துறையில் போலீஸ் சூப்பிரண்டெண்டட் ஆக பெயர் பெற்ற அவர் சுவாமிஜியை இரவு உணவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். விவேகானந்தர் சென்ற போது இன்னம் சிலர் அங்கிருந்தனர், சற்று நேரத்தில் விடை பெற்றும் சென்று விட்டனர். சாப்பாடு வரும் வழியைக் காணோம். அதிகாரி ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு திடீரென்று கம்மிய குரலில் அதட்டும் ஒரு முகபாவத்துடனும், “இப்போ வா, ஒழுங்காய் என்னிடம் உண்மையைச் சொல்லி விடு. உன் கதையெல்லாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது, உன் விளையாட்டெல்லாம் எனக்குத் தெரியும். நீயும் உன் கூட்டாளிகளும் ஆன்மிகவாதிகள் போல வேஷம் போட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஏதோ சதிவேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்!”

விவேகானந்தர் திகைத்துப் போனார்: “என்ன சொல்கிறீர்கள்?! நான் என்ன சதிவேலை செய்கிறேன், இவைகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

அதிகாரி: “எனக்கு இது தான் தெரிய வேண்டும். ஏதோ சதிவேலை நடக்கிறது. நீ தான் ரிங் லீடர். நீ முழு உண்மையும் கக்கி விட்டால் உன்னை அப்ரூவராக மாற்றி உனக்கு நான் உதவுவேன்.”

“உங்களுக்கு எல்லாமே தெரியுமானால் நீங்கள் ஏன் எங்களைக் கைது செய்து எங்கள் வீட்டினையும் சோதனை போடக் கூடாது?” – இவ்வாறு சொன்ன வண்ணம் விவேகானந்தர் எழுந்து சத்தமின்றி கதவைச் சாத்தினார். பார்ப்பதற்கு கட்டுமஸ்தான தேகத்துடன் இருக்கும் அவர் பூஞ்சை போலிருந்த அந்த அதிகாரி பக்கம் திரும்பி, “நீங்கள் என்னை போலியான ஒரு முகாந்திரத்தில் உங்கள் வீட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள், என் மீதும் என் சக சாதுக்கள் மீதும் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டையும் சுமத்தியிருக்கிறீர்கள். அது உங்கள் தொழில் ஆனால் நான், அவமானங்களுக்கு எதிர் வினையாற்றக் கூடாது என்று கற்றிருக்கிறேன். ஒரு வேளை நான் ஒரு குற்றவாளியாகவோ சதிகாரனாகவோ இருந்தால் நீங்கள் உதவிக்குக் கூக்குரல் இடுமுன் நான் உங்கள் மென்னியை முறிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது உங்களை நான் இப்படியே விட்டு விடுகிறேன்” என்று சொல்லி விட்டுப் பேயறைந்தது போல அரண்டு போய் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி முன் அறை கதவைத் திறந்து வெளியேறினார். அதன் பின் அவரையோ அவருடைய சக சாதுக்களையோ அவ்வதிகாரி ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவர் கூறிய மற்றொரு அனுபவம் சோகமானது. அப்போது அவர் ஏற்றிருந்த சபதத்தின் படி நாள் முழுவதும் நடந்தவண்ணம் இருப்பார், யாரிடமும் பிக்ஷை கேட்பதோ, பின்னால் திரும்பிப் பார்ப்பதோ கூடாது. ஒருவேளை யாராவது வலிய அழைத்தாலோ, கேட்காமலேயே உணவளிக்க முன்வந்தாலோ அன்றி நடப்பது நிற்காது. சில சமயங்களில் இருபத்தி நாலு முதல் நாற்பத்தியெட்டு மணி நேரங்கள் கூட உணவின்றி சென்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இம்மாதிரி ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்கு அருகில் ஒரு செல்வந்தரின் தொழுவத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தார். எதுவும் சாப்பிட்டு முழுதாய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தபடியால் மிக களைப்புடனும் சக்தியற்றும் இருந்த அவரைக் கண்டு அங்கிருந்த ஒரு குதிரைப் பாகன் வணங்கி, “சாது பாபா, இன்று எதாவது சாப்பிட்டீர்களா?” என்றார். “இல்லை, எதுவும் சாப்பிடவில்லை இன்று” என்று பதிலளித்த அவரை தொழுவத்திற்குள் அழைத்து சென்று அவர் கை, கால்களை அலம்பிக் கொள்ள தண்ணீர் கொடுத்து, தன்னுடைய உணவில் இருந்த சப்பாத்தி மற்றும் கார சட்னியை அவருக்கு தந்தார்.

இம்மாதிரியான பயணங்களில் விவேகானந்தருக்கு கிடைக்கும் ஒரெ வியஞ்சனம் மிளகாய்கள் தான், எனவே அவர் இவற்றுக்கு நன்கு பழகியிருந்தார். அவர் கை நிறைய காரமான பச்சை மிளகாய்களை சுவைத்து சாப்பிடுவதைக் கண்டிருக்கிறேன்! சட்னியுடன் சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தவர் உடனேயே வயிற்றில் கடுமையான பற்றியெரியும் எரிச்சலை உணர்ந்தார், வலியுடன் தரையில் புரளத் தொடங்கினார். குதிரைக்காரன் பாவம் நடுநடுங்கிப் போய் விட்டார், “ஐயோ என்ன செய்து விட்டேன், ஒரு சாதுவைக் கொன்று விட்டேனே?” என்று தலையில் அடித்துக் கொண்டு அரற்றத் தொடங்கினார் அவர். அந்த எரிச்சல் வெறும் வயிற்றில் அவ்வளவு கார சட்னியை உண்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும். இச்சமயம் தலையில் ஒரு கூடையுடன் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவன் இந்தக் கூக்குரலைக் கேட்டு வந்தவனிடம் விவேகானந்தர் அவன் கூடையில் என்ன இருக்கிறது எனக் கேட்க அவன் புளி இருப்பதாய் கூறினான். “ஆ! அது தான் எனக்கு வேண்டும் இப்போது” என்று கூறி அப்புளியைத் தண்ணீர் கலந்து அருந்தினார். அது வயிற்றின் எரிச்சலை கட்டுப்படுத்த சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஹிமாலயத்தில் ஆளில்லாத இடங்களில் சில ஆபத்தான அனுபவங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எதுவும் அவரை பயமுறுத்தவில்லை. தன் பயணத்தில் அதி தைரியத்துடனும் களைப்படையா சக்தியுடனும் முன்னேறினார். அவர் ஏற்படுத்திகொண்ட விதிமுறைகள் கடுமையானதும், வெகு கட்டுக் கோப்பான ஒழுக்கம், தியானம் இவற்றுடன் கூடியது. நண்பர்களோ, பணமோ எதுவும் இல்லாமல் அவர் அமெரிக்கா வந்த போது அவருடன் இருந்தது அவருடைய புத்தி கூர்மை, ஆன்மிக சக்தி இவற்றுடன் இந்தியாவில் பரிவிராஜகராக சுற்றி வந்த போது பெற்ற எதற்கும் கலங்காத தைரியமும் தான். அங்கே தன் சொந்த நாட்டிலிருந்த வந்த ஒருவரே அவர் மீது இல்லாத பொல்லாத பழிகளைப் போட்டும், சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள முடிந்தது விவேகானந்தரால். அங்கே தான் உலகளாவிய புகழ் அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்தவர்களில் அவர்தான் ஒருக்கால் இளையவராகவும் ப்ரத்யேகமானவராகவும் இருந்திருக்கக்கூடும். தானொரு ஹிந்து என்பதைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அவரிடம். அவருடைய குருவின் பெயர் ஐரோப்பா, அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. அவர் யாருமறியாத, புகழறியாத ஒரு இளைஞர், தன் நாட்டிலேயோ வெளிநாட்டிலேயோ, கல்வித்திறனுக்கோ, துறவு வாழ்வுக்கோ, தலைமைப் பண்புக்கோ, எதற்கும் பெயர் போனவர் அல்ல. உலகனைத்திலும் உள்ள சர்ச்சுகள், மடாலயங்கள் அனைத்திலிருந்தும் வந்திருக்கும் கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியுள்ள, உணர்ச்சிகளுக்கு எந்த இடமுமற்ற, ஒப்பு கூற முடியாத ஒரு உலக சமயங்களின் மாநாடு. இங்கே கூடியிருந்தவர்கள் உலகெங்கிலுமுள்ள புகழ் வாய்ந்த கோவில்கள், பகோடாக்கள், மசூதிகள், சர்ச்சுகளின் பிரதிநிதிகள், வெகு கட்டுப்பாடுகள் கொண்ட பயிற்சிகள், பொருளியல் உலகில் எதற்கும் மயங்காத திடமான மனது, தியானம், விசாரம் இவற்றில் ஆழ்மை, ஆளுமை, உலகப்புகழ் மற்றும் துறை சார் நிபுணத்துவம், அனைத்தும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரிலும் எல்லாவற்றிலும் குறைந்தவர் என்று மதிப்பிடக்கூடியவர் கிழக்கிலிருந்து சென்ற இந்த இளைஞர், யாருக்கும் இவர் யாரென்று தெரியாது. சந்தர்ப சூழ்நிலை காரணமாக இவர் இங்கு இடம் பெற்றாரே தவிர தான் சாதித்த எதையும் தகுதியாகக் கொண்டு வரவில்லை எனும்படியான நிலையில் இருந்தார். அவர் அச்சபையை எப்படி ஒரு புயல் போலத் தாக்கினார், எப்படி அமெரிக்காவின் அனைத்து பத்திரிக்கைகளும் டர்பன் கட்டிய, ஆரஞ்சு வண்ண அங்கி அணிந்த இந்த ஹிந்து துறவியின் புகைப்படத்தை பிரசுரித்து மாய்ந்ததோ, எப்படி ஆண்களும் பெண்களுமாய் அவரைப் பார்க்க, அவர் குரலைக் கேட்க படையெடுத்தார்களோ, இவை அனைத்தும் நன்கறிந்த வரலாறு.

ஜூலியஸ் சீஸரின் புகழ்பெற்ற வாக்கியத்தை சற்றே மாற்றி சுவாமி விவேகானந்தருக்குச் சொன்னால், “அவர் சென்றார், பார்க்கப்பட்டார், கேட்கப்பட்டார்… அவர் வென்றார்” என்று சொல்லலாம். ஒரே நிகழ்வில் யாருமறியாத ஒருவர் எல்லோரும் அறிந்தவரானார். உலகப் புகழ் வாய்ந்த பலர் கூடிய அச்சபையில் இன்று வரை நினைவில் இருப்பது சுவாமி விவேகானந்தர் என்ற ஒரு பெயர் மட்டுமே, வியப்பிலும் வியப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது இல்லை? உண்மை என்னவெனில், அவர் போல வேறொருவர் அந்த சபையில் இல்லவே இல்லை என்பதே. காரணம் மிகத் தெளிவானது. அங்கிருந்த அனைவரைக் காட்டிலும் விவேகானந்தர் கொண்ட கட்டுப்பாடுகள், ஒழுக்கம் மிக மிகக் கடினமானது. மேலும், அவர் யார் பாதத்தின் அடியில் அமர்ந்து கற்றாரோ அவர் போல ஒருவர் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒருக்கால் பிறக்கலாம் எனும்படியான ஒரு குரு. விவேகானந்தருக்கு பசி தெரிந்து இருந்தது, வறுமை பரிச்சயமாயிருந்தது, ஏழையிலும் ஏழைகளின் வாழ்வை மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறார். பழமையிலும் பழமையான ரிஷிகளின் மூலம் வந்த வற்றாத அமிர்தமாகிய ஞானத்தை அவர் பருகியிருந்தார், எதாலும் கலங்க வைக்க முடியாத தைரியத்தையும் கொண்டவராயிருந்தார். உலக சமய மாநாட்டில் அவர் குரல் வெண்கல நாதம் போல ஒலித்த போது கண்கள் வியப்பால் விரிந்தன, மெலிதாக இருந்த இதயத் துடிப்புகள் வேகமெடுத்தன, ஏனெனில் அவர் குரலின் மூலம் பேசியது காலங்காலமாக அமைதியாக இருந்த, ஆனால் கட்டுப்படுத்தப்படாத முழக்கம் கேட்டது. அங்கிருந்தவர்களில் இந்த அழகிய முகத்துடன், கனல் வீசும் கண்களையுடைய, கம்பீரத் தோற்றத்துடனும், இசை போல ஒலிக்கும் குரலுடன் வேறு யார் இருந்தார்?! அவரில் தோன்றியது பன்னெடுங்காலமாக ஞானத்தில் ஊறிய, சக்தி மிகுந்த, சகிப்புத்தன்மை மிகுந்த, இரக்கம் கொண்ட பழங்கால ஆரியர்கள் வாழ்ந்த இந்தியாவே தான் (இங்கே ஆரியர்கள் என்பது மேன்மை பொருந்திய என்ற, உண்மையான ஒரே பொருளில் ‘மட்டுமே’ குறிக்கப்படுகிறது). அவருள் இருந்த சக்தியும் கனலும் ஒவ்வொரு முறையும் பளிச்சிட்டு சுற்றியிருந்தவர் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

~ தொடரும்